ENG v IND: லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டில் மற்றுமொரு ராகுல்… புஜாரா, கோலி தொடர் சொதப்பல் ஏன்? | ENG v IND: Rahul scripts a calm and composed innings after Rohit’s blitz

Spread the love

ENG v IND
ENG v IND

ஹானர்ஸ் போர்டை அலங்கரிக்கும் வாழ்நாளுக்குமான ஒரு இன்னிங்சை கே எல் ராகுல் ஆட, ரோஹித்தின் ஆட்டமும் அதற்கு வலுசேர்க்க, இந்தியாவின் லார்ட்ஸ் பயணத்தின் முதல்நாள் இனிதே தொடங்கியுள்ளது.

டாஸுடனான ஏழாம் பொருத்தம்

டாஸை கோலி வென்றார் என்பதுதான் எட்டாவது அதிசயமே ஒழிய, அவர் டாஸைத் தோற்றார் என்பது வெறும் செய்தியே. அதேதான் இங்கும் தொடர்ந்தது. இதுவரை, இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி உள்ள 16 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே கோலி டாஸை வென்றுள்ளார். போட்டியில் எதிரணியின் கை சற்றே ஓங்க, இதுவும் ஒரு காரணமாகி விடுகிறது.

வீரர்கள் மாற்றம்

ENG v IND

ENG v IND

இந்திய அணி, காயமுற்ற தாக்கூருக்குப் பதிலாக, இஷாந்த் ஷர்மாவை இறக்கி இருந்தது. இங்கிலாந்தும், தன் பங்கிற்கு மூன்று பெரிய மாற்றங்களைச் செய்திருந்தது. காயமேற்பட்டு தொடரில் இருந்து விலகி உள்ள ஸ்டூவர்ட் பிராடுக்கு பதிலாக எதிர்பார்த்தபடியே மார்க் உட்டைக் களமிறக்கியது. அதேபோல், பேட்டிங்கை வலுப்படுத்தும் நோக்கில் லாரன்ஸ் மற்றும் க்ராவ்லிக்கு பதிலாக மொயின் அலி மற்றும் ஹமீத் சேர்க்கப்பட்டிருந்தனர்.

ஆண்டர்சன் வருகை

முந்தைய நாள் கசிந்த செய்திகளில் ஆண்டர்சனுக்குக் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் அவர் பங்கேற்பது சந்தேகம் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான தொடரில்தான் லார்ட்ஸில் தனது 100 விக்கெட்டுகள் சாதனையை ஆண்டர்சன் நிகழ்த்தி இருந்தார். அப்படிப்பட்ட பிட்சில், “நான் இல்லாமல் எப்படி?!”, என்பது போல் களமிறங்கி இருந்தார் ஆண்டர்சன்.

ENG v IND

ENG v IND

அட்டகாசமான தொடக்கம்

முதல் போட்டியில், முதல் இன்னிங்சில், 97 ரன்களை, பார்ட்னர்ஷிப்பில் சேர்த்த ரோஹித் – கே எல் ராகுல் கூட்டணியின் ஆட்டத்தில், முன்னை விடவும் பக்குவம் கூடி இருந்தது. புதுப்பந்தை மிக நேர்த்தியாகச் சமாளித்தனர். ரோஹித் புல் ஷாட்களில் ரன்களை லாகவமாகச் சேர்க்க, ராகுலின் ரன்கள் கவரில் இருந்தே கணிசமாகச் சேர, இடக்கை – வலக்கை ஆட்டக்காரர்கள் கூட்டணியைப் போலத்தான் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

சாம் ஓவரில் சம்பவம்

பொதுவாக, டெஸ்டில் முதலில் மெதுவாகத் தொடங்கும் ரோஹித்தை ஒரு கட்டத்தில் பந்துக்கும் அவர் அடித்து இருக்கும் ரன்களைக்குமான மிகப்பெரிய இடைவேளி பயமுறுத்த, திடீரென்று, அவருக்குள் உள்ள லிமிடெட் ஓவர் பேட்ஸ்மேன் விழித்துக் கொள்ள, தடாலடியாக தவறான ஷாட் ஆடி தனது விக்கெட்டைப் பலியாக்கி வெளியேறுவார். இந்தப் போட்டியில் கூட அவரது தொடக்கம் மந்தமாகத்தான் இருந்தது. ஆனால், சாம் கரண் வீசிய போட்டியின் 15-வது ஓவரில் நான்கு பவுண்டரிகளை விளாசி, தனக்குள் இருந்த வொய்ட் பால் கிரிக்கெட்டருக்குத் தீனி போட்டுக் கொண்டார் ரோஹித். அதன்பிறகு, தவறான ஷாட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியம் அவரது பேட்டுக்கு ஏற்படவில்லை.

அழையா விருந்தாளி – மழை

ENG v IND

ENG v IND

முதல் டெஸ்டில் மொத்தப் போட்டியையும் கலைத்துப் போட்டு ஆடிய மழை, இப்போட்டியில் முதல் செஷனில் 46 ரன்களை இந்தியா எடுத்திருந்த போதே குறுக்கிட்டு குசலம் விசாரித்ததோடு, உணவு இடைவேளையையும் முன்னதாகவே எடுக்க வைத்தது. விக்கெட் இழப்பின்றி, அந்நேரத்தில் இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது.

ரோஹித் அரைசதம்

2010-க்குப் பின் கணக்கெடுத்து, ரோஹித்துக்கு முன், ரோஹித்துக்குப் பின் என இந்திய டெஸ்ட் ஓப்பனர்கள், எவ்வளவு ஓவர்கள் தங்களது பார்ட்னர்ஷிப்பில் தாக்குப் பிடித்தார்கள் என்று பார்த்தால், முன்னதாக அது 10-க்குக் கீழேயும், ரோஹித்தின் வருகைக்குப் பின், 19-க்கும் அதிகமாகவும் மாறி உள்ளது. அந்த அளவு, தன்னை கொஞ்சம் கொஞ்சமாக டெஸ்ட் ஃபார்மட்டுக்குத் தகுந்தாற்போல் மாற்றி வரும் ரோஹித், போன போட்டியில் முதல் இன்னிங்க்ஸில், 36 ரன்களோடு வெளியேறி ஏமாற்றி இருந்தார். ஆனால், இப்போட்டியில் அவர் சந்தித்த 83-வது பந்தில், அவரது 13-வது அரைசதம் வந்து சேர்ந்தது.

ரோஹித் – ராகுல் பார்ட்னர்ஷிப்

மிக வலிமையானதாக 126 ரன்களைச் சேர்த்த இவர்களது பார்ட்னர்ஷிப், இப்போட்டியில், பல சாதனைகளைச் செய்துள்ளது. அவற்றில் முக்கியமானவை:

ENG v IND

ENG v IND

* கிரிக்கெட்டின் மூன்று ஃபார்மட்களிலும், நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்த, இரண்டாவது இந்திய ஓப்பனிங் இணை இதுதான்.

** 2010-ம் ஆண்டுக்குப் பின் SENA நாடுகளில் இந்திய ஓப்பனிங் இணை ஒன்று, 100-க்கு மேல் ரன்களைச் சேர்ப்பது இதுவே முதல்முறை.

*** 2010 முதல் 2020 வரை எந்த இந்திய ஓப்பனர்களும் 20 ஓவர்களுக்கு அதிகமாகக் களத்தில் நின்றதில்லை. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியா அதனை ஐந்து முறை செய்து காட்டியுள்ளது. அதில் இரண்டு முறை இந்தத் தொடரில் இந்த இணையால் நிகழ்ந்துள்ளது.

கைநழுவிய சதம்

களத்தில் நன்றாக செட்டில் ஆகி இருந்த ரோஹித், தவறான ஷாட்களை ஆடாமல் மிகக் கவனமாக ஆடிக் கொண்டிருந்தார். அப்படி இருக்க, “ரோஹித் செஞ்சரி செலிப்ரேசன் லோடிங்” என அவரது ஓவர்சீஸ் வெற்றியைக் கொண்டாட ரசிகர்கள் தயாராக, ஆண்டர்சனின் இன் ஸ்விங்கர் எல்லா ஆசைக்கும் முடிவு கட்டி, ரோஹித்தை 83 ரன்களோடு வெளியே அனுப்பி இருந்தது. அவரது முதல் ஓவர்சீஸ் சதத்திற்காக ரசிகர்களை இன்னமும் சில நாள்கள் காத்திருக்கச் செய்துள்ளார்.

கே எல் ராகுல் டேக் ஆஃப்

ENG v IND

ENG v IND

ரோஹித் இருந்தவரை மெதுவாக ஆடிக் கொண்டிருந்த கே எல் ராகுல், அதன்பின் அழுத்தத்தைக் குறைக்க கியரை மாற்றி தனது வண்டியை வேகமெடுக்க வைத்தார். 105 பந்துகளில் வெறும் 20 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த ராகுல், அதன்பின் 32 பந்துகளில், 30 ரன்களை மேலும் சேர்த்து தனது 13-வது டெஸ்ட் அரைசதத்தை எட்டிவிட்டார்.

புஜாரா திணறல்

பல போட்டிகளாக இழந்த ஃபார்மை மீட்கப் போராடி வரும் புஜாராவுக்கு இந்த நாளும் அவருடைய நாளாக அமையவில்லை. ரோஹித்தின் விக்கெட்டுக்கான கொண்டாட்டங்கள், இங்கிலாந்தின் பக்கம் அடங்கும் முன்பே, புஜாரா வெறும் 9 ரன்களில் வெளியேறி, இன்னொரு ஏமாற்றத்தை இந்தியாவின் பக்கம் வீசி விடை பெற்றார். அடுத்து வரும் இன்னிங்க்ஸிலும், புஜாரா சாதிக்கத் தவறினால், அவருக்குப் பதிலாக, ஹனுமா விஹாரி அல்லது மயாங்க் அகர்வாலை இந்திய அணி நிர்வாகம் யோசிக்க ஆரம்பித்து விடும். பின் இதுவே அவருக்கு இறுதித் தொடராகக் கூட மாறிவிடலாம்.

ஆளவந்தார் ஆண்டர்சன்

ENG v IND

ENG v IND

80 சதவிகித உடல் தகுதி உள்ள ஆண்டர்சன் கூட ஆபத்தானவர் என்பது அறிந்ததே. அதை ரோஹித் மற்றும் புஜாராவின் விக்கெட்டுகள் மூலம் மீண்டும் நிரூபித்தார். முதலில் சில பந்துகளில், ரோஹித்துக்கு அவுட் ஸ்விங்கர்களை அன்பளிப்பாக வழங்கி, அதனைத் தொடர்ந்து இன் டக்கர் ரூபத்தில் வந்த ஒரு இன் ஸ்விங்கர் மூலமாக ரோஹித்தைக் காலி செய்தார். வாசிம் அக்ரமின் இன் ஸ்விங்கர்களை எல்லாம் நினைவூட்டி, ரோஹித்துக்கு யோசிக்க, செயலாற்ற, இடமும் நேரமும் தராது ஸ்டம்பைக் காலி செய்தது அந்தப் பந்து. புஜாராவின் விக்கெட் வீழ்ச்சியில் அவரது தவறே அதிகம். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தைத் தொட்டு ஆட்டமிழந்திருந்தார். எனினும், அதற்கு முன்னதாக ஆண்டர்சன் வீசிய பந்துகள் ஏற்றிய அழுத்தமும், வகுத்த வியூகமும்தான் புஜாராவின் விக்கெட்டை விழ வைத்தது.

சத்தம் இல்லாமல் ஒரு சதம்!

ENG v IND

ENG v IND

ஒரு டெஸ்ட் இன்னிங்க்ஸை எப்படிக் கட்டமைக்க வேண்டும் என ஒருநாள் முழுவதும் பாடம் எடுத்திருந்தார் கே எல் ராகுல். 137 பந்துகளில் அரைசதம் அடித்தவர், அதற்கடுத்த 75 பந்துகளிலேயே சதத்தைத் தொட்டார். இதற்குள் அவரது டெக்னிக், ஸ்கில், டெம்பரமெண்ட் என அத்தனையையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டது இங்கிலாந்து பௌலிங் படை. விட வேண்டிய பந்து எது, தொட வேண்டிய பந்து எது, எந்தப் பந்துக்கு எத்தகைய ஃபுட் வொர்க் இருக்க வேண்டும், எப்பந்து சாஃப்ட் ஹாண்ட்ஸோடு சந்திக்க வேண்டியது என முழு கவனத்தோடு ஆடினார் கே எல் ராகுல். அவரது இன்னிங்சின் ஒவ்வொரு ரன்னும், அவராய் பார்த்துப் பார்த்துச் செதுக்கியது. எனினும், பவுண்டரியோடு வந்து சேர்ந்த அவரது சதத்துக்கான கொண்டாட்டம் கூட பெரிய அளவில் இல்லை, அதில் பக்குவமே நிரம்பி இருந்தது. ஹானர்ஸ் போர்டில் ராகுல் டிராவிட்டைத் தொடர்ந்து இன்னொரு ராகுலின் பெயரும் எழுதப்பட்டுள்ளது.

ENG v IND

ENG v IND

கோலியைக் காணவில்லை!

சதம் என்ற எதிர்பார்ப்பை எல்லாம் தாண்டி, இரட்டை இலக்கையாவது கோலி எட்டுவாரா என்ற நிலைக்கு ரசிகர்கள் தள்ளப்பட்டு விட்டனர். இந்தப் போட்டியில், முதலில் சில பந்துகள் திணறினாலும், தொடர்ந்து சிறப்பாகவே ஆடினார் கோலி. ஆனாலும், ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசப்பட்ட பந்தை விடுவதில் போதுமான தெளிவின்றி, ஆண்டர்சனின் பந்தைத் தொட்டார். அம்முறை பிழைத்தவர், தன் தவற்றைத் திருத்தாது, அதற்கடுத்த ஓவரிலேயே ராபின்சனின் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசிய பந்தை டிஃப்ண்ட் செய்கிறேன் எனத் தொட, அது எட்ஜாகி ஸ்லிப்பில் நின்ற ரூட்டிடம் தஞ்சம் புகுந்தது. 42 ரன்களோடு வெளியேறிய கோலி, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதனை பெரிய இன்னிங்க்ஸாக மாற்றாமல், தேவையே இல்லாத ஒரு ஷாட்டில் வெளியேறி இருந்தார்.

ENG v IND

ENG v IND

முதல் நாளின் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 276/3 என்று உள்ளது. தொடக்கத்தை ஓப்பனர்கள் அற்புதமாக அமைத்துக் கொடுத்த நிலையில், ஒரு ஓப்பனர், சதமடித்தும் சளைக்காது இன்னமும் களத்தில் இருக்கும் கட்டத்தில், மற்ற வீரர்கள் இன்னமும் பொறுப்பாக ஆடி இருந்தால், இந்தியா இன்னிங்க்ஸ் வெற்றிக் கனவே கண்டிருக்கலாம். எனினும், இன்னமும் அது களைந்து போன கனவல்ல. மீதமுள்ள வீரர்கள் இரண்டாவது நாள் ஆட்டத்தில் எப்படி ஆட உள்ளார்கள் என்பதைப் பொறுத்தே எல்லாம் அமையும்.

முதல் இன்னிங்சிலேயே ஒட்டுமொத்த போட்டிக்குமான ரன்களை இந்தியா எடுக்குமா, இங்கிலாந்து இரண்டாவது நாளை தங்களது பேரில் பட்டா போடுமா, பொறுத்திருந்து பார்ப்போம்!

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: