3-வது சதம்: ‘ரூட்’டான கேப்டன் ரூட்: வலுவான நிலையில் இங்கிலாந்து; இந்திய பந்துவீச்சு எடுபடவில்லை | Unstoppable Root puts England in command with third hundred in three Tests

Spread the love


ஜோ ரூட்டின் அபாரமான சதம், டேவிட் மலானின் அரைசதம் ஆகியவற்றால் லீட்ஸில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.

2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் சேர்த்து 345 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. களத்தில் ஓவர்டன் 24 ரன்களுடனும், ராபின்ஸன் ரன் ஏதும் சேர்க்காமலும் உள்ளனர்.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரூட் தொடர்ந்து அடிக்கும் 3-வது சதம் இதுவாகும். இந்த ஆண்டில் ரூட் அடிக்கும் 6-வது சதமாகும். இந்த ஆண்டில் மட்டும் ரூட் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 1,398 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 875 ரன்கள் இந்திய அணிக்கு எதிராக மட்டுமே அடிக்கப்பட்டவை.

கேப்டனுக்குரிய பொறுப்புடன், அற்புதமாக பேட் செய்த ரூட் 165 பந்துகளில் 121(14பவுண்டரிகள்)ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் அரங்கில் ஜோ ரூட்டுக்கு இது 23-வது சதமாகவும் அமைந்தது. அதுமட்டுமல்லாமல் கெவின் பீட்டர்ஸன் சாதனையையும் ரூட் சமன் செய்துள்ளார்.

தற்போது இங்கிலாந்தைச் சேர்ந்த வீரர்களில் டெஸ்ட் அரங்கில் அதிகமான சதங்களை அடித்த வீரர்கள் வரிசையில் அலிஸ்டார் குக்(33சதம்)அடுத்தார்போல் 2-வது இடத்தில் ரூட், பீட்டர்ஸன் உள்ளனர்.

ரூட்டுக்கு துணையாக பேட் செய்த டேவிட் மலான் 128பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் தொடரில் விளையாடிய டேவிட் மலான் தன்னுடைய தேர்வு சரியானது என்பதை நிரூபித்துச் சென்றார். ரூட்,மலான் ஜோடி 139 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். இங்கிலாந்து அணி வலுவான ஸ்கோரை எட்டுவதற்கு இருவரின் பாட்னர்ஷிப் முக்கியக் காரணமாக அமைந்தது.

அதுமட்டுமல்லாமல் பேர்ஸ்டோவுடன் சேர்ந்து ரூட் 52 ரன்கள் சேர்்த்தார். மலான், பேர்ஸ்டோவுடன் சேர்ந்து ரூட் அமைத்த பாட்னர்ஷிப் வலுவான ஸ்கோரை எட்ட உதவியாக இருந்தது.

தற்போது இங்கிலாந்து அணி 345 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது, கைவசம் 2 வி்க்கெட்டுகள் உள்ளன. 3-வது நாளான இன்று முதல் செஷனிலேயே இந்திய அணி 2 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தி இன்னிங்ஸை முடிக்க வேண்டும்.

அதன்பின் இந்திய அணி அடுத்த இரு நாட்களும் வி்க்கெட்டுகளை இழக்காமல் பேட் செய்து 650 ரன்களுக்கு குறைவில்லாமல் அடித்தால் மட்டுமே இங்கிலாந்து அணியை வெல்ல முடியும், அல்லது குறைந்தபட்சம் போட்டியை டிரா செய்ய முடியும். ஆனால், பெரும்பாலும் இந்த ஆட்டம் டிராவில் முடிய வாய்ப்பில்லை.

முதல் இன்னிங்ஸைப் போல் இந்திய பேட்ஸ்மேன்கள் விரைவாக விக்கெட்டுகளை இழக்கும்பட்சத்தில் இந்திய அணியின் இன்னிங்ஸ் தோல்வி உறுதியாகும். ரோஹித் சர்மா, ராகுல், கேப்டன் கோலி, ரஹானே ஆகிய 4 பேட்ஸ்மேன்களும் சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஆடுகளம் நன்கு காய்ந்துள்ளதால், இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடுவதைப் பொறுத்து இன்னிங்ஸ் தோல்வி ஏற்படுமா என்பது முடிவாகும். இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு எவ்வாறு எடுபடவி்ல்லையோ அதேநிலைதான் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கும் இருக்கும் என்பதை உணர்ந்து இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுமையுடன் ஆட வேண்டும்.

கடைசி நாளில்ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், குறைந்த இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிப்பது இந்திய அணியின் வெற்றிக்கு உதவாது.

ஆதலால், இன்று இந்திய வீரர்கள் எவ்வாறு பேட் செய்யப் போகிறார்கள், எந்தமாதிரியான சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்தப் போகிறார்கள் என்பதில்தான் ஆட்டத்தின் போக்கு முடிவாகும்.

இப்போதுள்ள நிலையில் ஆட்டத்தின் கடிவாளம் இங்கிலாந்து அணியிடமே இருக்கிறது. இ்ந்திய பேட்ஸ்மேன்கள் ஆடும் விதத்தின் அடிப்படையில் ஆட்டத்தின் போக்கில் மாற்றம் இருக்கும்.

முதல்நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி 120 ரன்கள் சேர்த்திருந்தது. ஹசீப் ஹமீது 60, பர்ன்ஸ் 52 ரன்களுடன் களத்தில் இருந்து நேற்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

2-ம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பர்ன்ஸ் 61 ரன்னில் ஷமி பந்துவீ்ச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 135 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்த சிறிது நேரத்தில் ஹசீப் ஹமீது 68 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு ரூட், டேவிட் மலான் ஜோடி சேர்ந்தனர். இருவரின் பேட்டிங்கும் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. உணவு இடைவேளை ரன் சேர்ப்பதில் இங்கிலாந்து அணி மந்தமாக இருந்தது. ஆனால், அதன்பின் இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாகப் பந்துவீச முயன்றும் அதை ரூட், மலான் முறியடித்தனர்.

இந்தியப் பந்துவீச்சுக்கு தனது பேட்டிங்கில் பதிலடி கொடுத்த ரூட் , ஒருநாள் போட்டி போன்று ஆடினார். நல்ல லைன்-லென்த்தில் வந்த பந்தைக் கூடரூட் சிரமப்பட்டு பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். முதல் 25 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்த ரூட், 57 பந்துகளில் அரைசதம் அடித்தார், 124 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். டேவிட் மலான் 99 பந்துகளில்அரைசதம் அடித்து ஃபார்மை நிரூபதித்தார். மலான் 70 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மாலை தேநீர் இடைவேளையின்போது 3 வி்க்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் சேர்த்திருந்த இங்கிலாந்து அணி அதன்பின் விக்கெட்டுகளை வேகமாக இழந்தது. அதன்பின் 125 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 வி்க்கெட்டுகளை இழந்தது.

அடுத்துவந்த பேர்ஸ்டோ 29 ரன்களில் ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பட்லர் 7 ரன்னில் ஷமி பந்துவீச்சி்ல் ஆட்டமிழந்தார். சதம் அடித்து சிறப்பாகப் பேட் செய்துவந்த கேப்டன் ரூட் 121 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.அதன்பின் களமிறங்கிய மொயின் அலி 8 ரன்னிலும், சாம் கரன் 15 ரன்னிலும் வி்க்கெட்டை பறிகொடுத்தனர்.

ஓவர்டன் 24 ரன்னிலும், ராபின்ஸன் ரன் ஏதும் சேர்க்காமலும் களத்தில் உள்ளனர். இருவருமே ஓரளவுக்கு பேட்டிங் செய்யக்கூடியவர்கள் என்பதால், இருவரையும் நிலைக்கவிடாமல் ஆட்டமிழக்கச் செய்வது அவசியம்.

129 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணித் தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, சிராஜ் தலா 2 வி்க்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

இசாந்த் சர்மா பந்துவீச்சு சுத்தமாக எடுக்கவில்லை, ரன்களையும் வாரி வழங்கியுள்ளார். அடுத்த டெஸ்டில் இசாந்த் சர்மாவுக்குப்பதிலாக ஷர்துல் தாக்கூரை களமிறக்க யோசி்க்கலாம்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: