இன்று பிப்ரவரி 21, சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவரவர் தாய் மொழியில் கடிதம் எழுதியுள்ளார் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.

அந்த வகையில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமாருக்கும் கடிதம் எழுதியுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர்.

வெங்கய்யா நாயுடு

அந்த கடிதத்தில் “நமது நாடு சுமார் 19,500 மொழிகள் மற்றும் கிளை மொழிகளின் தாயகமாகும். அவற்றில் சுமார் 200 மொழிகள் உடனடி அழிவின் அபாயத்தைச் சந்தித்து வருகின்றன. ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு முறை உலகின் மொழிகளில் ஒன்று அழிந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதியை சர்வதேச தாய் மொழிகள் தினமாக கடைப்பிடிக்க ஐ.நா தீர்மானித்துள்ளது. இந்தியா, பல்வேறு மொழிகள், கலாச்சாரத்தின் தளமாக உள்ளதுடன், வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வைக் கொண்டுள்ளது குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம்.” என தாய்மொழிகளை பற்றி கூறியுள்ளார் வெங்கய்யா நாயுடு.

தமிழ் மொழிக்காக கோரிக்கையை முன்வைத்து பதில் கடிதம் எழுதியுள்ள துரை.ரவிக்குமார்,

“குடியரசுத் துணைத் தலைவரான தங்களது அக்கறை மெய்யானதென்றே நான் கருதுகிறேன். இந்தியாவின் தொன்மையான மொழியான தமிழ் மொழியையும், பிற மாநில மொழிகளையும் புறக்கணிக்கும் விதமாக தற்போதைய ஒன்றிய அரசு செயல்படுவதைத் தாங்கள் ஏற்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

தமிழ்

இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் வளர்ச்சியில் காட்டும் அக்கறையில் நூற்றில் ஒரு பங்கையேனும் அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளின் வளர்ச்சியில் இந்த அரசு காட்டவேண்டும் என்ற எமது வேண்டுகோளைத் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். அதற்கு முதற்படியாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை நமது அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் வழங்கவேண்டும். அதற்கு, குடியரசுத் துணைத் தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் விளங்குகிற தாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த கோரிக்கையை கடந்த பிப்ரவரி 10ம் தேதி நாடாளுமன்றத்தில் விவகாரத் துறை அமைச்சர், பிரல்ஹாத் ஜோஷி அவருக்கும் நான் அளித்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன்” என கூறி அக்கடித விளக்கத்தையும் இணைத்துள்ளார் அவர்.

விகடன் வாசகர்கள் அனைவருக்கும், சர்வதேச தாய்மொழி தின வாழ்த்துக்கள்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *