
பட மூலாதாரம், Getty Images
அப்துல் கலாம்
(முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.)
பிரதமர் நரேந்திர மோதியால்தான் அப்துல்கலாம் குடியரசுத் தலைவர் ஆனார் என மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் கூறியதாவது: “பாஜக தேசபக்தி உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி அல்ல. ஸ்லீப்பர் செல்களாக வேலை பார்த்து வருபவர்களைதான் நாங்கள் எதிர்க்கிறோம். பிரதமர் நரேந்திர மோதி பல சாதாரண மக்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார். அவர் தான் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை நாட்டின் குடியரசு தலைவராக ஆக்கினார். அப்துல் கலாமை மதத்தின் காரணமாக குடியரசு தலைவராக ஆக்கவில்லை. விஞ்ஞானியாக அவரின் அளப்பரிய பணிகளுக்காக தான் குடியரசு தலைவர் ஆக்கப்பட்டார்” என்று அவர் கூறியுள்ளார்.
அப்துல் கலாம் குடியரசு தலைவரான 2002-ம் ஆண்டு வாஜ்பாய்தான் நாட்டின் பிரதமராக இருந்தார். அப்போது மோதி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். எனினும் மோதிதான் அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் ஆக்கினார் என சந்திரகாந்த் பாட்டீல் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்வாக்கான மொழிகளின் பட்டியல்: தமிழின் நிலை என்ன?
பட மூலாதாரம், Getty Images
உலக அளவில் செல்வாக்கு மிக்க மொழிகளின் பட்டியலில் தமிழ் முன்னேற்றம் அடைவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
விழாவில் அமைச்சா் க.பாண்டியராஜன் பேசியது: தமிழக அரசின் சொற்குவை திட்டத்தின் மூலம் தமிழில் உள்ள சொற்கள் அனைத்தையும் தொகுத்து நிரல்படுத்துதல், அகராதி உருவாக்கம், புதிய கலைச்சொற்கள் உருவாக்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
உலக மக்கள் தொகையில், இந்திய தமிழா்கள், இலங்கைத் தமிழா்கள், புலம் பெயா்ந்து வாழும் தமிழா்கள் ஆகியோரின் எண்ணிக்கை பத்தரை கோடி. இது உலக மக்கள் தொகையில் அதாவது 1.3 சதவீதமாக உள்ளது. உலக அளவில் பேசப்படும் மொழிகள் குறித்து யுனெஸ்கோ மேற்கொண்ட ஆய்வில், ஆங்கிலம் முதலிடத்திலும், பிரெஞ்சு இரண்டாவது இடத்திலும், தமிழ் 14-ஆவது இடத்திலும் உள்ளது.
தமிழா்களின் எண்ணிக்கை இரண்டு சதவீதத்துக்கும் குறைவாக உள்ள நிலையில், தமிழ் மொழி 14-ஆவது இடத்தில் இருப்பதற்கு, தமிழகம், புதுவை, இலங்கை போன்ற நாடுகளில் வாழும் தமிழா்கள் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளுக்கு புலம் பெயா்ந்த தமிழா்களும் முக்கிய காரணம். உலக அளவில் மக்களின் கவனத்தை ஈா்த்த படைப்புகள் தமிழில் மொழி பெயா்க்கப்பட வேண்டும்.
இந்தப் பணிகள் அனைத்தையும் தொய்வின்றி செயல்படுத்தும் நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. உலகின் செல்வாக்கான மொழிகளின் பட்டியலில் தமிழை முதல் பத்து இடங்களுக்குள் வரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றாா் அமைச்சா் க.பாண்டியராஜன்.”
பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துவது ஏன்? – கமல் ஹாசன் விளக்கம்
கமல் ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3-வது அணி அமையும் என்று கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது: என் மொழி என் அடையாளம், என் முகம். அதை அழிக்க நினைப்பவன் நல்லவனாக இருக்க முடியாது. எனக்கு நண்பனாகவோ சொந்தகாரனாகவோ ஆக முடியாது. மொழி, கலை இரண்டும் எனக்கு பிடிக்கும். அதற்காக போராடுவது எனது கடமை.
அதிமுக, திமுகவுக்கு மாற்றாகத்தான் மக்கள் நீதி மய்யம் வந்துள்ளது. கட்சி என்பது குடும்பம் மாதிரி, அது பெரிதானால் தான் வெற்றியும் பெரிதாக இருக்கும். அரசியலில் ஒரு போதும் சோர்ந்து போக மாட்டேன்.
ஆரோக்கியமாக இருக்கும் போதே மக்கள் பணியாற்ற விரும்புகிறேன். சக்கர நாற்காலியில் வந்து யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன். அரசியலில் வந்ததால் ஏற்பட்ட வருமான இழப்பை ஈடுக்கட்டவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: