புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண் பேடி திடீரென நீக்கப்பட்ட விவகாரம், டில்லி அரசியல் வட்டாரங்களில் அதிகமாக அலசப்படுகிறது. ஒரு கவர்னரை மாற்றும் போது, அதுபற்றிய தகவல், அவருக்கு முதலில் தெரிவிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் கிரண் பேடி விவகாரம், மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ‘டிவி’ பார்த்து தான், அவர் அந்த விஷயத்தை தெரிந்து கொண்டாராம்.புதுச்சேரியின், பா.ஜ., பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட இரண்டு தலைவர்கள், சமீபத்தில் அங்கு வந்து, அரசியல் நிலவரம் குறித்து ஆராய்ந்தனர். ‘கிரண் பேடியை வைத்து தான் காங்., பிரசாரம் செய்ய உள்ளது’ என, கட்சி மேலிடத்திடம், இந்த குழு அறிக்கை அளித்தது.
மற்றொரு பக்கம், சமீபத்தில், பா.ஜ.,வில் சேர்ந்த நமச்சிவாயம் உட்பட பலரும், ‘நாராயணசாமியின் பிரசாரம், கிரண் பேடியை வைத்துதான் இருக்கும்’ என, கட்சி மேலிடத்திடம் கூறினர். இதையடுத்து, பா.ஜ., வின் வெற்றி, கிரண் பேடியால் பாதிக்கக் கூடாது என்பதால், அவரை நீக்க, உள்துறை அமைச்சகத்தில் இருந்து உத்தரவு வெளியானது.இதையெல்லாம் மீறி, வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது; அது, சாராய வியாபாரிகள் லாபி. தமிழகத்தை விட புதுச்சேரியில் மது விலை மலிவு என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால், கொரோனா சமயத்தில் வரியை உயர்த்திவிட்டார் கிரண் பேடி. இது சாராய லாபிக்கு பெரும் அடி. இந்த லாபிக்கும், அரசியலுக்கும், எப்போதுமே அதிக தொடர்பு. கட்சி பேதம் பார்க்காமல் தேர்தலுக்கு பணத்தை அள்ளிக் கொடுப்பவர்கள் சாராய தொழிலதிபர்கள். அவர்களும், கிரண் பேடிக்கு எதிராக, பா.ஜ., விடம் புகார் அளித்திருந்தனர்.
Advertisement