இந்திய நிகழ்வுகள்

நீதிபதி போல் கையெழுத்து போலீஸ் அதிகாரி கைது
புவனேஷ்வர்: ஒடிசாவில், நீதிபதியின் கையெழுத்தைப் போட்டு, கொலை முயற்சி வழக்கில் சிறையில் இருந்த குற்றவாளியை ஜாமினில் வெளியே எடுத்த, எஸ்.ஐ., கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமை யிலான. பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கஞ்சம் மாவட்டம், கர்ச்சுலி கிராமத்தைச் சேர்ந்த பாபுலா பெஹேரா, தன் சகோதரனின் மகனை கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.சிறை தண்டனை அனுபவித்து வந்த அவர், தன் மகளின் திருமணத்திற்காக, கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.

கடந்த, 12ம் தேதி, அவருக்கு ஜாமின் வழங்குவதற்கான உத்தரவு, புகுடா மாவட்ட நீதிபதி சோனாலி அபரஜிதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.நீதிபதி சோனாலி விடுப்பில் இருந்த அன்றைய தினம், அவருக்கு பதில், அஸ்கா பணியில் இருந்தார்.நீதிபதி முன், அந்த ஜாமின் ஆவணத்தை சமர்ப்பிக்காமல், எஸ்.ஐ., சூர்ய நாராயண் பெஹேரா, நீதிபதியின் கையெழுத்தை தானே போட்டு, அதை சிறை நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில், பாபுலாவும், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த கையெழுத்து மோசடி விவகாரம் வெளியே தெரிய வந்ததை தொடர்ந்து, சூர்ய நாராயண் பெஹேரா, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஆயுதங்கள் பறிமுதல்

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில், பிரபல ஓட்டல் உரிமையாளர் மகன் மீது, சமீபத்தில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளை, போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர், அனந்த்நாக் மாவட்ட வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த, ‘ஏகே’ ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் நேற்று கைப்பற்றினர்.

பாக்., துப்பாக்கிச்சூடு

ஜம்மு: ஜம்மு – காஷ்மீரின் கதுவா மாவட்டம் ஹிராநகர் செக்டார் பகுதியில், சர்வதேச எல்லை பகுதியில், போர் நிறுத்த விதிகளை மீறி, நேற்று முன்தினம் இரவு முதல், பாக்., ராணுவத்தினர் தொடர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்; இதற்கு, நம் எல்லை பாதுகாப்பு படையினர், பதிலடி கொடுத்தனர்.

தமிழக நிகழ்வுகள்

latest tamil news


யானையை தாக்கிய பாகன் சஸ்பெண்ட்
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் முகாமில், யானையை தாக்கிய பாகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.மேட்டுப்பாளையம் யானை முகாமில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலை சேர்ந்த, ‘ஜெயமால்யதா’ என்ற யானையை, பாகன் வினில்குமார், உதவியாளர் சிவபிரசாத் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.இதையடுத்து, வினில்குமாரை இந்து அறநிலையத்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் பழனிராஜா விசாரணை நடத்தினர். இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.பாகன்கள் கூறுகையில், ‘யானையை நாங்கள் குழந்தைபோல் பாதுகாத்து வருகிறோம். குளிக்கச் சென்ற இடத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து, வேகமாக ஓடியது. இதனால் அச்சமடைந்த நாங்கள், முகாமில் ஏதாவது விபரீதத்தை ஏற்படுத்தி விடுமோ என்று, அதை பிடிக்க அரை மணி நேரம் முயற்சியில் ஈடுபட்டோம். பாகன் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதற்காக, அதை அடித்தோம்’ என்றனர்.

தம்பதிக்கு வெட்டு; 4 வாலிபர்கள் கைது

திருப்பூர்:திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ், 32; கட்டட தொழிலாளி. பூலுவபட்டி, செட்டிபாளையத்தை சேர்ந்தவர் முகமது ரியாஸ்; டிரைவர்.இவருக்குமிடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த, 18 ம் தேதி ஜேம்ஸ் தனது நண்பர்களை அழைத்து கொண்டு, முகமது ரியாஸ் வீட்டுக்கு சென்றார்.அவர் வீட்டில் இல்லை. கோபத்தில் இருந்த ஜேம்ஸ், முகமது ரியாசின் தந்தை முகமது முஸ்தபாவை அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த மனைவி சகிதா பானுவையும் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த, பட்டுகோட்டையை சேர்ந்த வினோத், 23, கார்த்தி, 24, சரவணகுமார், 18 மற்றும் செல்வகுமார், 24 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள ஜேம்சை போலீசார் தேடி வருகின்றனர். அவர் மீது, தஞ்சாவூர், பட்டுகோட்டையில், 14 வழக்குகள் உள்ளது.மற்ற நான்கு பேர் மீது பல வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

latest tamil news


திருப்பூரில் கார் மோதி ஒருவர் பலி; போதை ஆசாமிகளுக்கு தர்ம அடி

திருப்பூர்:திருப்பூரில் கார் தறிகெட்டு ஓடி ஒருவர் இறந்தார்; ஐந்து பேர் காயமடைந்தனர். காரில், மதுபோதையில் இருந்த மூவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.திருப்பூர், குமார் நகர் பகுதியில் நடந்து சென்ற, ஐந்து பேர் மீதும், அவ்வழியாக சென்ற மற்றொரு கார் மீதும் மோதி விட்டு, ஒரு கார் நிற்காமல் சென்றது. டூவீலரில் சென்ற, கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியர் யுவராஜ், 33 என்பவர் மீது கார் மோதியதில், அவர் பலியானார்.

வீட்டில் கேஸ் கசிந்து தீ: 5 பேர் படுகாயம்

அனுப்பர்பாளையம்:திருப்பூரில், வீட்டில் கேஸ் கசிந்து தீப்பற்றியதில், ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.திருப்பூர், பி.என்., ரோடு அம்மன் நகரை சேர்ந்தவர் சரவணன், 42; பனியன் தொழிலாளி. நேற்று மாலை 6:00 மணிக்கு, வீட்டில் சமையல் செய்ய கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். கேஸ் கசிந்து அறை முழுதும் பரவி இருந்துள்ளது. பற்ற வைத்ததும், அவர் மீது தீ பற்றியது.அலறல் சத்தம் கேட்டு, வீட்டின் அருகில் இருந்த சரவணனின் மனைவியின் சகோதரி விஜயா, 38, உள்ளே ஓடிச் சென்றுள்ளார். அவர் மீதும் தீப்பிடித்தது.தொடர்ந்து, விஜயாவின் மகன் அஸ்வின், 19, மகள் தரணிகா, 19, பக்கத்து வீட்டில் வசிக்கும் கோகிலா, 39, ஆகியோர், தீப்பற்றி கொண்டவர்களை காப்பாற்ற வீட்டுக்குள் சென்றனர். அவர்கள் மீதும் தீப்பற்றி உள்ளது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஐவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பிளஸ் 2 மாணவி கொலை: உறவினரை தேடும் போலீஸ்

மூணாறு: கேரளா மூணாறு அருகே பள்ளி வாசல் பவர் ஹவுஸ்சை சேர்ந்த பிளஸ்- 2 மாணவி ரேஷ்மா 17, கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினர் அருணை 28, போலீசார் தேடி வருகின்றனர்.
அங்கு வசிக்கும் ரஜேஷ்- ஜெஷி தம்பதியினரின் மகள் ரேஷ்மா பைசன்வாலி அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வந்தார். பிப்.19 ல் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் வெள்ளத்துாவல் போலீசில் புகார் அளித்தனர்.இன்ஸ்பெக்டர் குமார் தமைமையில் போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளி முடிந்து மாலையில் ரேஷ்மா, அருண் ஆகியோர் பவர்ஹவுஸ் வழியாக நடந்து சென்றதாக சிலர் தெரிவித்தனர்

கள்ள ரூபாய் நோட்டு டெபாசிட்: சிக்கியவரிடம் போலீஸ் விசாரணை

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ஆக்ஸிஸ் வங்கி கணக்கில் கள்ள ரூபாய் நோட்டு ‘டெபாசிட்’ செய்த நபரிடம் கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சி – கோவை ரோட்டில் உள்ள, ஆக்ஸிஸ் வங்கியில் ஒருவர், இரண்டு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய சென்றுள்ளார். பணம் டெபாசிட் செய்யும் போது, கேஷியருக்கு சந்தேகம் ஏற்பட்டது.உடனடியாக வங்கி மேலாளர் செல்வகுமரேசனுக்கு தகவல் கொடுத்தார். வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள், இரண்டு லட்சம் ரூபாயை சோதனை செய்ததில், 28 எண்ணிக்கையிலான, 500 ரூபாய் நோட்டுகள், கள்ள நோட்டுகளாக இருப்பது தெரிய வந்தது.இது குறித்து வங்கி மேலாளர், கிழக்கு போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கியில் பணம் செலுத்த வந்த ஆவலப்பம்பட்டியை சேர்ந்த விஜயகுமாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

56 மூட்டை ரேஷன் அரிசி வாகன சோதனையில் சிக்கியது

சூலுார்:சூலுார் அருகே வாகன சோதனையில், 56 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.சூலுார் அருகே கோவை-பாலக்காடு ரோட்டில், ரேஷன் அரிசி கடத்தபடுவதாக, எஸ்.ஐ., ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார், வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியே வந்த சரக்கு வேன்களை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இன்றி, 50 கிலோ கொள்முதல் கொண்ட, 56 மூட்டைகள் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் கார்த்தி என்பவரை கைது செய்தனர்.

உலக நிகழ்வுகள்

தடையை மீறிய டிரம்ப் ஆதரவாளர்

நியூயார்க்: வடக்கு ஆப்ரிக்க நாடான லிபியா, சர்வாதிகாரி கடாபியின் வீழ்ச்சிக்குப் பின், 2011ல், இரண்டாக பிரிந்தது. மேற்கு பகுதியில் உள்ள அரசை, ஐ.நா., அங்கீகரித்தது. கிழக்கு பகுதியில் உள்ள, காலிபா ஹிப்டர் தலைமையிலான பயங்கரவாத அமைப்பின் நிர்வாகத்தை ஏற்கவில்லை.

இந்நிலையில், கிழக்கு பகுதியில் உள்ள நிர்வாகத்துக்கு, சில நாடுகள் ஆதரவு அளித்தன. இதையடுத்து, பொருளாதார மற்றும் ஆயுத விற்பனை தடை விதித்தது, ஐக்கிய நாடுகள் சபை.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், லிபியாவின் கிழக்கே உள்ள பயங்கரவாத அமைப்பு நிர்வாகத்துக்கு, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புடன் நெருக்கமானவரான, அமெரிக்க ஆயுத கான்ட்ராக்டர், எரிக் பிரின்ஸ், ஆயுதங்கள் சப்ளை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த, மூன்று நிறுவனங்களும் ஆயுதங்கள் சப்ளை செய்துள்ளதாக, அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 3 பேர் கொலை

மெட்டைரி: அமெரிக்காவின், நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள ஒரு துப்பாக்கி கடைக்கு, நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் சென்றார்.உள்ளே சென்றதும், அங்கிருந்தவர்களை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் பீதியடைந்த, அங்கிருந்த இதர வாடிக்கையாளர்களும், கடை உரிமையாளர்களும், அந்த நபர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தாக்குதல் நடத்திய நபரும், சுட்டுக்கொல்லப்பட்டார். இரண்டு பேர் காயமடைந்தனர்.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *