ஷமி, பும்ரா மிரட்டல் * அரைசதம் அடித்து அசத்தல்

Spread the love


லண்டன்: லார்ட்ஸ் டெஸ்டில் முகமது ஷமி, பும்ராவின் சிறப்பான பேட்டிங் காரணமாக தோல்வியில் இருந்து மீண்டது இந்திய அணி. 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 364, இங்கிலாந்து 291 ரன்கள் எடுத்தன. நான்காவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்து, 154 ரன் மட்டும் முன்னிலை பெற்றிருந்தது. ரிஷாப் பன்ட் (14), இஷாந்த் சர்மா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

ராபின்சன் ‘ஷாக்’

இன்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. குறைந்தபட்ச முன்னிலை 200 ரன்கள் இருந்தால் மட்டுமே போட்டியை ‘டிரா’ செய்ய முயற்சிக்கலாம் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ராபின்சன் வீசிய நேற்றைய 4வது ஓவரின் 3வது பந்தில் ரிஷாப் (22) அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய ராபின்சன், இஷாந்த் சர்மாவையும் (16) அவுட்டாக்க, இந்தியா 209 ரன்னுக்கு 8 விக்கெட்டை இழந்து திணறியது.

சூப்பர் ஜோடி

அடுத்து முகமது ஷமி, பும்ரா இணைந்தனர். இவர்களை விரைவில் வெளியேற்றி விட்டால் வெற்றிக்கு முயற்சிக்கலாம் என காத்திருந்தார் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட். ஆனால் இதற்கு ஷமி–பும்ரா ஜோடி ‘வேட்டு’ வைத்தது. இருவரும் கைதேர்ந்த பேட்ஸ்மேன்கள் போல இங்கிலாந்து பவுலர்களை எளிதாக எதிர்கொண்டனர். இந்திய அணியின் முன்னிலை 200 ரன்களை கடந்தது. 

பவுலர்களை மாற்றி மாற்றி வீசச் செய்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. பந்துகளையும் வீணடிக்காமல் வேகமாகவும் ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து வீரர்கள் சோர்வடைந்தனர். 

ஷமி அரைசதம்

வாய்ப்பை பயன்படுத்திய ஷமி, ஆண்டர்சன், மொயீன் அலி பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்து மொயீன் அலி ஓவரில் பவுண்டரி, சிக்சர் அடித்த இவர், டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது அரைசதம் எட்டினார். முதல் ஒரு மணி நேரம் தாக்குப்பிடிக்குமா என ஏக்கத்தில் இருந்த நிலையில் இந்திய அணி, உணவு இடைவேளைக்குப் பின், இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்து அசத்தியது. ஷமி (56), பும்ரா (34) அவுட்டாகாமல் இருந்தனர். 

பும்ரா நம்பிக்கை

இரண்டாவது இன்னிங்சில் 60 ஓவரில் 272 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது இங்கிலாந்து. பும்ரா வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் பர்ன்ஸ் ‘டக்’ அவுட்டானார். அடுத்த ஓவரில் ஷமி, தன் பங்கிற்கு சிப்லேயை ‘டக்’ அவுட்டாக்க, இங்கிலாந்து 1 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது. 

அடுத்து வந்த இஷாந்த் சர்மா, தன் பங்கிற்கு ஹசீப் ஹமீதை (9) அவுட்டாக்கி அனுப்பி வைத்தார். மீண்டும் மிரட்டிய இவர், பேர்ஸ்டோவையும் (2) வெளியேற்றினார். நீண்ட நேரமாக தொல்லை தந்த ஜோ ரூட்டை (33), பும்ரா அவுட்டாக்கினார். தேநீர் இடைவேளைக்குப் பின், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 68 ரன் எடுத்திருந்தது. 

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: