‘வேகமாக’ சுருண்டது இந்தியா * 78 ரன்னுக்கு ஆல் அவுட்

Spread the love

லீட்ஸ்: மூன்றாவது டெஸ்டில் நமது பேட்ஸ்மேன்கள் போவதும், வருவதுமாக இருக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 78 ரன்னுக்கு சுருண்டது. 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 1–0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட், நேற்று லீட்சில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. 

துவக்கம் ‘ஷாக்’

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், புயல் ‘வேகத்தில்’ பந்து வீசினார். இவரது முதல் ஓவரின் 5வது பந்தில் ராகுல் ‘டக் ’ அவுட்டானார். முதல் ஓவரில் ஆண்டர்சன் இப்படி விக்கெட் வீழ்த்துவது மூன்றாவது (2014, 2018, 2021) முறையாக நேற்று நடந்தது. புஜாரா (1) வழக்கம் போல ஏமாற்றினார். 

கோஹ்லி ஏமாற்றம்

கடந்த இரு டெஸ்டில் ஏமாற்றிய கோஹ்லி, இம்முறை 7 ரன் மட்டும் எடுத்து, மறுபடியும் ஆண்டர்சன் ‘வேகத்தில்’ வீழ்ந்தார். உணவு இடைவேளைக்கு முன் ரகானேவும் (18) அவுட்டாக, இந்தியா 56 ரன்னுக்கு 4 விக்கெட்டுளை இழந்து திணறியது. அடுத்து ரோகித், ரிஷாப் பன்ட் இணைந்தனர். 

இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக ரிஷாப் பன்ட் 2 ரன்னுக்கு அவுட்டானார். சிறிது நேரத்தில், அதிக ஸ்கோர் எடுத்த ரோகித் சர்மாவும் (19) வெளியேறினார். முகமது ஷமி (0), ஜடேஜா (4), பும்ரா (0), சிராஜ் (3) அடுத்தடுத்து அவுட்டாகினர். 

ஒருகட்டத்தில் 58/5 என இருந்த இந்தியா, அடுத்து 20 ரன் எடுப்பதற்குள், 5 விக்கெட்டுகளை பறிகொடுக்க, முதல் இன்னிங்சில் 78 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இஷாந்த் (8) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், ஓவர்டன் தலா 3, ராபின்சன், சாம் கர்ரான் தலா 2 விக்கெட் சாய்த்தனர். 

ஹமீது அரைசதம்

இங்கிலாந்து அணிக்கு பர்ன்ஸ், ஹமீது ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இருவரும் அரைசதம் அடித்தனர். முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்து, 42 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஹமீது (60), பர்ன்ஸ் (52) அவுட்டாகாமல் இருந்தனர். 

 

2

கடந்த பிப்., ல் சென்னையில் நடந்த டெஸ்டில் கோஹ்லி ‘டாஸ்’ வென்றார். இதன் பின் நேற்று தான் கோஹ்லிக்கு ‘டாஸ்’ ராசியாக அமைந்தது. இருப்பினும் கோஹ்லி, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் என இருவருக்கும் நடந்த ‘டாஸ்’ மோதலில் 2–10 என கோஹ்லி பின்தங்கியுள்ளார். 

7

டெஸ்ட் அரங்கில் கோஹ்லியை அதிகமுறை அவுட்டாக்கிய பவுலர் என்ற பெருமையை நாதன் லியானுடன் (ஆஸி.,) பகிர்ந்து கொண்டார் இங்கிலாந்தின் ஆண்டர்சன். இருவரும் தலா 7 முறை கோஹ்லியை அவுட்டாக்கினர். பிராட், மொயீன் அலி, கம்மின்ஸ், ஸ்டோக்ஸ் தலா 5 முறை அவுட்டாக்கினர்.

14

லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 14 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. விண்டீஸ் அணியை வென்ற பாகிஸ்தான் (12), விண்டீஸ் (12) அணிகள் அடுத்த இரு இடத்தில் உள்ளன. இங்கிலாந்து (2) நான்காவதாக உள்ளது.

அஷ்வின் புறக்கணிப்பா

இந்திய அணியின் ‘நம்பர்–1’ சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். கடந்த 2017 விண்டீஸ் மண்ணில் நடந்த தொடருக்குப் பின் ஒருநாள், ‘டுவென்டி–20’ அணியில் சேர்க்கப்படவில்லை. டெஸ்ட் அணியில் மட்டும் இடம் பெற்று வந்தார். சமீபத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் 4, கவுன்டி போட்டியில் 6 விக்கெட் சாய்த்தார். இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பெறுவார் என நம்பப்பட்டது.

மாறாக வானிலை காரணமாக முதல் இரு டெஸ்டில் சேர்க்கப்படவில்லை. இவருக்குப் பதில் இடம் பெற்ற ஜடேஜா, முதல் இரு டெஸ்டில் 42 ஓவர்களில் வீசிய போதும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இதனால் லீட்ஸ் டெஸ்டில் அஷ்வின் சேர்க்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மாறாக மீண்டும் அஷ்வினை புறக்கணித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.  

79 ஆண்டுக்குப் பின்…

நேற்று 78 ரன்னுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி, 79 ஆண்டுக்குப் பின் இங்கிலாந்து மண்ணில் தனது குறைந்த டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் 1975 லார்ட்ஸ் டெஸ்டில் 42, 1952 ஓல்டு டிரபோர்டு டெஸ்டில் 58 ரன்னுக்கு இந்திய அணி சுருண்டது. தற்போது மூன்றாவது குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. 

* இங்கிலாந்தில் ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்த பின், குறைந்த ஸ்கோரில் இந்தியா (78) ஆல் அவுட்டானது இது தான் முதன் முறை. இதற்கு முன் 1987–88ல் விண்டீஸ் அணிக்கு எதிரான டில்லி டெஸ்டில் 75, 2007–08ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஆமதாபாத் டெஸ்டில் 76 ரன்னுக்கு சுருண்டது முதல் இரு இடத்தில் உள்ளன. 

6

டெஸ்ட் அரங்கில் 2021ல் அதிகமுறை ‘டக்’ அவுட்டான வீரர்களில் இந்தியாவின் பும்ரா முதலிடத்தில் உள்ளார். இவர் 6 முறை ‘டக்’ அவுட்டானார். இங்கிலாந்தின் பர்ன்ஸ் (5), ஆண்டர்சன் (4) அடுத்த இரு இடங்களில் உள்ளனர். 

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: