வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடங்களில் COVID-19 … ஓராண்டுக்குப் பிறகு என்ன நடக்கிறது?

Spread the love

சிங்கப்பூரில் ஊழியர் தங்குமிடங்களில் COVID-19 பரவல் ஏற்பட்டு ஓராண்டாகிறது.
பல வெளிநாட்டு ஊழியர்கள் இதில் பாதிக்கப்பட்டனர். பலர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இப்போது அவர்களில் பலர் மீண்டும் வேலைக்குத் திரும்பியிருந்தாலும் கடும் நடமாட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம்.

பங்களாதேஷில் இருந்து இங்கு வேலைக்கு வந்தவர் 27 வயது திரு அல் அமின். பெரும்பாலான நாள்களில் காலை 7 மணிக்கு வேலைக்குக் கிளம்பிச் செல்பவர் இரவு 8 மணி அளவில்தான் ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள அவரின் தங்குமிடம் திரும்புவார்.

வேலை போக மீதமுள்ள நேரத்தில் துணி துவைப்பது, இரவு உணவைச் சமைப்பது, குடும்பத்தோடு கைபேசியில் உரையாடுவது… இப்படியே அவரின் பொழுது போகும்.

COVID-19க்கு முன்னர் கடைகளுக்குச் செல்லலாம். திறந்த திடல்வெளிகளுக்குச் சென்று நேரத்தைச் செலவிடலாம். இப்போது வேலை, இங்குள்ள எங்கள் அறை..இது இரண்டுக்கும் இடையில் தான் நேரம் போகிறது. தங்குமிடத்தில் இருப்பது சிறைவாசி போன்ற உணர்வைக் கொடுக்கிறது என்று அதற்குத் தான் சொல்கிறேன்

– திரு அல் அமின்

வேறு சிலர் செய்வதறியாது தங்குமிடங்களில் உள்ளனர்.

உடற்பயிற்சிக் கூடங்களைப் பயன்படுத்த முடியாது.

பொதுவான இடத்தில் நண்பர்களைச் சந்தித்துப் பேச முடியாது. தங்குமிடத்துக்கு முன்னர் ஏரிக்கரை இருந்தும் அங்கும் செல்ல முடியாது என்று வேறொரு தங்குமிடத்தைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் குறைகூறினர்.

சிங்கப்பூரில் COVID-19 நிலைமை மேம்பட்டுவருகிறது.
அதனால் அராசங்கம் தங்களைக் கட்டங்கட்டமாக வெளியே செல்லவிடலாமே என்று சிலர் கேட்டுக்கொண்டனர்.

மனிதவள அமைச்சும் இன்னும் சிறிது காலத்தில் மாதம் ஒரு முறை, குறிப்பிட்ட எண்ணிக்கையில் தங்குமிடங்களில் இருப்போரை வெளியே செல்ல அனுமதிக்கலாம் என்று கூறியிருக்கிறது.

தங்குமிடங்களில் உள்ளவர்களில் அதிகமானோர் குணமடைந்தவர்கள் அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருந்தால் கிருமிப் பரவல் வெகுவாகக் குறையும். அப்போது கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படலாம் என்று மனிதவள அமைச்சின் பேச்சாளர் TODAY-இடம் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்களுக்கு உணவு வழங்குவது, COVID பரிசோதனை, ஊழியர்கள் சிலரைத் தற்காலிகத் தங்குமிடத்துக்கு மாற்றுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்களின் நிலை மேம்படுத்தப்படும் என்றும் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

வரும் ஆண்டுகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்காகக் கட்டப்படும் புதிய தங்குமிடங்களில் சுமார் 100,000 ஊழியர்கள் வரை தங்கலாம்.

கடைகள், முடிதிருத்தும் சேவை, உள்ளரங்குப் பொழுதுபோக்கு வசதிகள் போன்றவை அங்கே இருக்கும்.

காற்றோட்டத்தை உறுதிசெய்ய புளோக்குகள் இடையே போதுமான இடைவெளி இருக்கும். தங்குமிடங்களில் உடனடி மருத்துவப் பராமரிப்பு பெறுவதற்கான வசதிகளும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள தங்குமிடங்களும் மேம்பாடு காணும்.

பொதுச் சுகாதார அபாயங்களை எதிர்கொள்ளும் விதம் அனைத்துத் தங்குமிடங்களும் வடிவமைக்கப்படும் என்றது மனிதவள அமைச்சு. 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *