வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் விதி தளர்வு| Dinamalar

Spread the love


வாஷிங்டன்:வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினருக்கான, ஓ.சி.ஐ., பாஸ்போர்ட் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.

உலகெங்கும் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு, ஓ.சி.ஐ., எனப்படும், ‘வெளிநாட்டில் குடியிருக்கும் இந்தியர்கள்’ என்ற பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இது, இந்திய குடிமகனுக்கு உள்ள பெரும்பாலான உரிமைகளை வழங்குகிறது. ஓ.சி.ஐ., பாஸ்போர்ட் வைத்துள்ள, வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள், வாழ்நாள் முழுவதும், ‘விசா’ இன்றி எத்தனை முறை வேண்டுமாலும் இந்தியா வந்து செல்லலாம்.

ஆனால் அவர்களுக்கு, இந்திய குடிமகனுக்கு உள்ளது போல ஓட்டுரிமை கிடையாது. அரசு வேலையில் சேரவோ, விவசாய நிலம் வாங்கவோ முடியாது. அவர்களில், 20 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டோர், ஒவ்வொரு முறை பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் போது, கூடவே, ஓ.சி.ஐ., பாஸ்போர்ட்டையும் புதுப்பிக்க வேண்டும். ஓ.சி.ஐ., பாஸ்போர்ட் வைத்துள்ளோர், ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும், காலாவதியான பழைய வெளிநாட்டு பாஸ்போர்ட் உடன், புதிய பாஸ்போர்ட்டும் எடுத்து வர வேண்டும்.

கடந்த ஆண்டு, கொரோனா காரணமாக வெளிநாட்டு பயணியர், இந்தியா வர தடை விதிக்கப் பட்டது. இதன் காரணமாக, வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களின், ஓ.சி.ஐ., புதுப்பிப்பு காலம், பலமுறை நீட்டிக்கப்பட்டது. இருந்தபோதிலும், ஓ.சி.ஐ., வைத்திருந்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் பலர், தாயகம் திரும்ப விமான நிலையம் வந்த போது, விதிகளின்படி, அவர்களிடம் காலாவதியான பழைய வெளிநாட்டு பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால், திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த பிரச்னை, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, குறிப்பிட்ட சில வகை, ஓ.சி.ஐ., பிரிவினர் மட்டும், இந்தியா வர அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய துாதரகங்கள், ஓ.சி.ஐ., கட்டுப்பாடுகளை தளர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளன;

அதில் கூறப்பட்டுள்ள தாவது:வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கான, ஓ.சி.ஐ., பாஸ்போர்ட் புதுப்பிப்பு காலம், டிச.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் அவர்கள், இந்தியா செல்ல, புதிய பாஸ்போர்ட் உடன், காலாவதியான பழைய பாஸ்போர்ட் எடுத்து வர தேவையில்லை. ஓ.சி.ஐ.,யில் உள்ள பழைய பாஸ்போர்ட் எண் அடிப்படையில், அவர்கள் பயணிக்கலாம்.

அதே சமயம், அவர்கள் கண்டிப்பாக புதிய பாஸ்போர்ட் கொண்டு வந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இந்த நடவடிக்கைக்கு, அமெரிக்காவில் வசிக்கும் சமூக ஆர்வலர், பிரேம் பண்டாரி உள்ளிட்ட பலர் நன்றி தெரிவித்துள்ளனர்.

AdvertisementTHANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *