விமான நிலையத்தின் சோதனைப் பெட்டிகளில் கண்ணாமூச்சி ஆடும் கிருமிகள்

Spread the love


விமான நிலையங்களில் சோதனைப் பகுதிகளைக் கடக்கும்போது சில உடைமைகளை எடுத்து வைப்பதற்காக தனியே ஒரு பெட்டி கொடுக்கப்படும்.

அந்தப் பெட்டி, சுழற்சி முறையில் எல்லாப் பயணிகளுக்கும் மாற்றி மாற்றி வழங்கப்படும்.

பெரும்பாலும் மடிக்கணினிகள், கைபேசிகள், மேலங்கிகள், காலணிகள் போன்றவற்றை ஊடுகதிர்ச் சோதனை செய்வதற்காக அந்தப் பெட்டியில் வைக்க வேண்டும். 

மில்லியன் கணக்கான பயணிகள் பயன்படுத்தும் அத்தகையப் பெட்டிகளில் பலவகையான கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாகச் சளியை ஏற்படுத்தும் கிருமிகள் அந்தப் பெட்டிகளில் இருப்பதை ஐரோப்பிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஃபின்லந்து விமான நிலையத்தில் அடிக்கடி புழங்கப்படும் பகுதிகளை ஆய்வாளர்கள் 2016ஆம் ஆண்டு சோதனைக்கு உட்படுத்தினர்.

அவர்கள் எடுத்த மாதிரிகளில் சளியை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

விமான நிலையச் சோதனைப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட பெட்டிகளில் அத்தகையக் கிருமிகள் அதிகம் இருந்ததாகவும் கழிவறைகளில் கூட அத்தகைய கிருமிகள் இல்லை என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.

உலக அளவில் பரவக்கூடிய நோய்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க அந்த ஆய்வு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையத்தின் வடிவமைப்பை மேம்படுத்தவும் இந்தக் கண்டுபிடிப்பு உதவும் என்று கிருமியியல் வல்லுநர் நீனா இகோனென் தெரிவித்தார்.

எனினும் அந்தக் கிருமிகளால் நோய் ஏற்படும் என்று ஆய்வு நிரூபிக்கவில்லை. ஆனால் விமான நிலையங்களில் அதிகம் புழங்கப்படும் இடங்களில் கிருமிகள் சில நாட்கள் வரை நீடிக்கும் என்று வேறொரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

கைகளை முறையாகக் கழுவுவது, இருமலின்போது கைக்குட்டை, டிஷ்யூ (துடைக்கும் காகிதம்) ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் கிருமி பரவலைக் குறைக்கலாம்.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *