லியோனி முதல் ராசா வரை… பிரதமர் மோடியின் தாராபுரம் பரப்புரையின் 10 அம்சங்கள்! | 10 Features of Prime Minister Modi speech at Dharapuram Campaign | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

Spread the love


10-Features-of-Prime-Minister-Modi-speech-at-Dharapuram-Campaign

தாராபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திமுகவின் ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் ஐ.லியோனி என பலரையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறும் கேரளா, தமிழகம், புதுச்சேரியில் பரப்புரை மேற்கொள்ள டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. கோவையில் இருந்து முதலில் கேரளாவின் பாலக்காடு சென்று பரப்புரை செய்த அவர், பின்னர் அங்கிருந்து மீண்டும் தமிழகம் புறப்பட்டார். பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடும் திருப்பூர் தாராபுரம் தொகுதியில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு ஹெலிகாப்டரில் பிரதமர் நரேந்திர மோடி வந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் இந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

image

பிரதமருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், வேலை பரிசாக அளித்தார். பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வெற்றி வெற்றி வெற்றிவேல் என்ற முழக்கத்துடன் தனது உரையைத் தொடங்கினார். அதன் 10 முக்கிய அம்சங்கள்:

* “பாஜக தலைமையிலான ஜனநாயகக் கூட்டணிக்கு நாட்டின் வளர்ச்சியே நோக்கம். மக்களின் கனவு மற்றும் குழந்தைகளின் எதிர்கால தேவைக்கான சேவையை தருவோம்.”

* “எனது தலைமையிலான அரசும், தனிப்பட்ட முறையில் நானும் நாட்டில் தொழில் முன்னேற்றத்திற்கு சாத்தியமான அனைத்தையும் செய்வோம் என உறுதியளிக்கிறேன்”

* “ஐ.நா அவையில் தமிழ் மொழியில் சில உதாரணங்களை கூறியதில் பெருமையடைகிறேன்.”

* “விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக இந்த அரசு பாடுபடுகிறது. தாய்மொழியில் மருத்துவக் கல்வி, தொழிற்கல்வி வழங்க மத்திய அரசு விரும்புகிறது.”

image

* “தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றப்பட்டுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.”

* “திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு குடும்பம்தான் முக்கியம். அந்தக் கூட்டணியை தமிழக மக்கள் கவனித்து கொண்டுதான் வருகிறார்கள்.”

* “தற்போது காங்கிரஸ் – திமுக ஒரு முக்கியமான ஏவுகணையை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தின் பெண்களை இழிவுப்படுத்துவதே திமுக – காங்கிரஸின் அந்த முக்கிய ஏவுகணையாக உள்ளது. அவர்களுக்கு பெண்களை இழிவுப்படுத்துவதே நோக்கமாக உள்ளது. பெண்கள் குறித்து திமுகவின் திண்டுக்கல் ஐ.லியோனியும் கீழ்த்தரமாக பேசியுள்ளார். நான் திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒன்று சொல்கிறேன்… நீங்கள் உங்கள் கட்சி தலைவர்களை கட்டுப்படுத்துங்கள். இது எல்லாவற்றையும் மக்கள் பார்த்துகொண்டுதான் இருக்கிறார்கள், இதுபோன்ற செயலை அவர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.”

* “தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து திமுக தலைவர்கள் இழிவுப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தங்கள் கட்சி தலைவர்களை கட்டுப்படுத்த வேண்டும். கடவுளே, ஒருவேளை இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் பெண்களின் நிலை என்னவாகும், அவர்கள் பெண்களை இன்னும் அவமதிப்பார்கள், இழிவுப்படுத்துவார்கள்.”

* “1989 மார்ச் 25-இல் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை, திமுக தலைவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதை மறக்கமுடியாது. இவர்கள் ஆட்சி செய்தபோது பெண்களுக்காக ஒரு நலத்திட்டமும் செய்யவில்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக இருந்தன. இதேபோல மேற்கு வங்கத்தில் திமுக – காங்கிரஸின் நட்புக்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சின் தொண்டர்களால் தாக்கப்பட்டு வயதான பெண்மணி ஒருவர் இறந்தார். இவர்களின் கூட்டணி எப்போதும் பெண்களை இழிவுப்படுத்துவதே”

image

* “திமுக பட்டத்து இளவரசருக்காக (உதயநிதி ஸ்டாலின்) அக்கட்சியில் முக்கிய தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “நாட்டை இருளில் தள்ளியது காங்கிரஸ். பாஜக அரசுதான் தமிழகத்திற்கு நிறைய திட்டங்களை தந்துள்ளது. உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடிதான். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியது மோடிதான். எண்ணற்ற சமூக பாதுகாப்பு திட்டங்களை தந்துள்ளோம்” என்றார்.

இதே மேடையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “234 தொகுதிகளிலும் வெற்றி உறுதி. மோடியால் இந்த நாடு உயர்ந்து நிற்கிறது. கோதாவரி – காவிரி திட்டத்தால் விவசாயிகள் வளம்பெறுவர். மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான உறவு இருக்க வேண்டும். மத்திய அரசோடு இணக்கமான உறவு இருந்தால்தான் திட்டங்கள் வரும். 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்துள்ளோம். 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்துள்ளோம்” என்றார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: