லார்ட்சில் ஜடேஜா, சிராஜ் ராஜ்யம்: இந்திய அணி ரன் குவிப்பு

Spread the love


லண்டன்: லார்ட்ஸ் டெஸ்டில் ரவிந்திர ஜடேஜா கைகொடுக்க முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன் குவித்தது. வேகத்தில் அசத்திய சிராஜ், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தந்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 276 ரன் எடுத்திருந்தது. ராகுல் (127), ரகானே (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

ரகானே ஏமாற்றம்: இரண்டாம் நாள் ஆட்டத்தில் ராபின்சன் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் 2 ரன் எடுத்த லோகேஷ் ராகுல் (129), அடுத்த பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த ரிஷாப் பன்ட், பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை துவக்கினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் ‘வேகத்தில்’ வெளியேறிய அஜின்கியா ரகானே (1) மீண்டும் ஏமாற்றினார்.

ஜடேஜா நிதானம்: பின் இணைந்த பன்ட், ரவிந்திர ஜடேஜா ஜோடி நிதானமாக விளையாடியது. ராபின்சன் வீசிய 97வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்தார் பன்ட். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஜடேஜா, சாம் கர்ரான், மொயீன் அலி பந்தில் தலா ஒரு பவுண்டரி விரட்டினார். ஆறாவது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்த போது மார்க் உட் பந்தில் பன்ட் (37) அவுட்டானார்.

ஆண்டர்சன் அசத்தல்: அடுத்து வந்த முகமது ஷமி (0), மொயீன் அலி ‘சுழலில்’ சிக்கினார். தொடர்ந்து அசத்திய ஆண்டர்சன் ‘வேகத்தில்’ இஷாந்த் சர்மா (8), ஜஸ்பிரித் பும்ரா (0) வெளியேறினர். நிதானமாக ஆடிய ஜடேஜா (40), மார்க் உட் பந்தில் ஆட்டமிழந்தார்.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5, ராபின்சன், மார்க் உட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, தேநீர் இடைவேளையின் போது விக்கெட் இழப்பின்றி 23 ரன் எடுத்திருந்தது. டாம் சிப்லே (11), ரோரி பர்ன்ஸ் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

நழுவிய ‘ஹாட்ரிக்’: பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லே ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. முகமது சிராஜ் வீசிய 15வது ஓவரின் 2வது பந்தில் சிப்லே (11) அவுட்டானார். அடுத்த பந்தில் ஹசீப் ஹமீது (0) போல்டானார். நான்காவது பந்தை கேப்டன் ஜோ ரூட் தடுத்தாட, சிராஜின் ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது.

பின் இணைந்த பர்ன்ஸ், ஜோ ரூட் ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. பொறுப்பாக ஆடிய பர்ன்ஸ், சிராஜ் வீசிய 27வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். மறுமுனையில் அசத்திய ரூட், இஷாந்த் வீசிய 28வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விரட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்த போது ஷமி பந்தில் பர்ன்ஸ் (49) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 119 ரன் எடுத்து, 245 ரன் பின்தங்கி இருந்தது. ரூட் (48), பேர்ஸ்டோவ் (6) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் சிராஜ் 2 விக்கெட் கைப்பற்றினார்.

 

129 ரன்

அபாரமாக ஆடிய லோகேஷ் ராகுல், 129 ரன் எடுத்தார். இதன்மூலம் லார்ட்ஸ் டெஸ்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் 4வது இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களில் வினு மன்கட் (184 ரன், 1952), திலிப் வெங்சர்க்கார் (157 ரன், 1982), சவுரவ் கங்குலி (131 ரன், 1996) உள்ளனர்.

 

எல்லாம் சிவப்பு

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஆன்ட்ரூ ஸ்டிராசின் மனைவி ரூத் ஸ்டிராஸ் 2018ல் நுரையீரல் புற்றுநோயால் மரணமடைந்தார். அவரது நினைவாக, பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கிட, நுரையீரல் புற்றுநோய் ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, ரூத் ஸ்டிராஸ் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவினார் ஆன்ட்ரூ ஸ்டிராஸ். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, இரண்டாம் நாள் ஆட்டம் துவங்குவதற்கு முன், இந்தியா–இங்கிலாந்து வீரர்கள் சிவப்பு நிற தொப்பி அணிந்திருந்தனர். தவிர, இங்கிலாந்து வீரர்களின் ஜெர்சியில் பெயர், எண், சிவப்பு நிறத்தில் இருந்தது. ரசிகர்களில் நிறைய பேர் சிவப்பு நிற ‘டி–சர்ட்’ அணிந்திருந்தனர். ஆன்ட்ரூ ஸ்டிராஸ், லார்ட்ஸ் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ‘பெல்லை’ அடித்து 2ம் நாள் ஆட்டத்தை துவக்கினார்.

 

அஷ்வினை முந்திய ஆண்டர்சன்

வேகத்தில் அசத்திய இங்கிலாந்தின் ஆண்டர்சன் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் சாய்த்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக முறை ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் இந்திய ‘சுழல்’ வீரர் அஷ்வினை (30 முறை) முந்தி 6வது இடம் பிடித்தார். ஆண்டர்சன் 164 டெஸ்டில், 31 முறை இம்மைல்கல்லை எட்டினார். முதலிடத்தில் இலங்கையின் முரளிதரன் (67 முறை) உள்ளார்.

 

50 விக்கெட்

ஷமியை அவுட்டாக்கிய மொயீன் அலி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் தனது 50வது விக்கெட்டை பதிவு செய்தார். இவர், இதுவரை 14 டெஸ்டில் 50 விக்கெட் சாய்த்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் இந்தியாவுக்கு எதிராக 50 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றிய 6வது சுழற்பந்துவீச்சாளரானார். ஏற்கனவே இலங்கையின் முரளிதரன் (105 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் நாதன் லியான் (94), விண்டீசின் லான்ஸ் கிப்ஸ் (63), இங்கிலாந்தின் டெரெக் அன்டர்வுட் (62), ஆஸ்திரேலியாவின் ரிச்சி பெனாடு (52) இம்மைல்கல்லை எட்டினர்.

 

ஜோ ரூட் ஜோர்

அபாரமாக ஆடிய ஜோ ரூட், தனது 14வது ரன்னை எட்டிய போது டெஸ்ட் அரங்கில் அதிக ரன் குவித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் கிரஹாம் கூச்சை (8900 ரன், 118 டெஸ்ட்) முந்தி 2வது இடம் பிடித்தார். இதுவரை இவர், 107 டெஸ்டில், 8936* ரன் குவித்துள்ளார். முதலிடத்தில் அலெஸ்டர் குக் (12472 ரன், 161 டெஸ்ட்) உள்ளார்.

Advertisement

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: