ரோஹித் ஷர்மா 100 ரன்களைப் புனிதப்படுத்தும் எந்த செயலையும் செய்வதில்லையே ஏன்?!

Spread the love

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் ரோஹித் ரசிகனாக பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு விஷயம் அவருடைய சதம். எப்படியும் 100 உண்டு என்பது அவர் 80-களைத் தொட்டபோதே தெரிந்துவிட்டது. சச்சின் போல கடைசி பத்து ரன்களை கடப்பதற்கு ரோஹித் தடுமாற மாட்டார் என்பதும் தெரிந்தது விஷயம் தான். சதத்தை எட்டியதும் களத்தில் இல்லாத ஒரு கற்பனை எதிரிக்கு முஷ்டி குத்து விடமாட்டார் என்பதும் நன்றாகத் தெரியும்.

100 ரன்களைப் புனிதப்படுத்தும் விதமாக மண்டியிட்டு களத்துக்கு முத்தமிடவோ வானை நோக்கி வணங்கி தெய்வங்களுக்கு நன்றி செலுத்தவோ மாட்டார் என்பதும் அறிந்த சங்கதி. எப்படியும் ஒரு சுமாரான பந்துக்கு விக்கெட்டை பறிகொடுத்து விடுவார் என்பதும் எதிர்பார்த்த ஒன்றுதான்.

பின்பு வேறு எதற்காக ரோஹித் ரசிகன் காத்திருந்தான்?

ரோஹித் ஷர்மா

சதத்தை தொட்டதும் ஹெல்மெட்டை கழட்டுவாரா மாட்டாரா என்பதற்காகத்தான். உண்மையாகவே எதிர்பார்த்தேன். என் நம்பிக்கை பொய்த்து போகவில்லை. அவர் ஹெல்மெட்டைக் கழற்றவில்லை. வழி வழியாக வருகின்ற தன் பரம்பரையின் கௌரவத்துக்கு களங்கள் ஏற்படுத்தாக வகையில் அவருடைய கொண்டாட்டம் இருந்தது. அதைக் கொண்டாட்டம் என சொல்லலாமா என தயங்கும் அளவுக்கான கொண்டாட்டம் அது. பரம்பரையின் மூத்த முன்னோடிகளான விக்டர் டிரம்பர், ஃபிராங்க் வோரல் போன்றோர் சொர்க்கத்தில் இருந்தும் பிந்தைய வழிகாட்டிகளான குண்டப்பா விஸ்வநாத், டேவிட் கோர் போன்றோர் டிவி பெட்டியின் முன்பாக நின்று கொண்டும் வாரிசை ஆசிர்வதித்திருப்பர். 100 என்பது ரோஹித்தைப் பொறுத்தவரை 99-க்குப் பிந்தைய எண்; 101-க்கு முந்தைய எண்.

பேட்டிங் பாரம்பரியத்தில் மொத்தம் மூன்று பரம்பரைகள் உண்டு. முதல் தரப்பு Class players. இரண்டாவதாக Stylists. மூன்றாவது தரப்புக்கு என்னப் பெயர் சூட்டுவது என்றே தெரியவில்லை. மேலோட்டமாக போராளிகள் (soldiers) என வைத்துக் கொள்வோம். ஸ்டீவ் வாக், புஜாரா போல. இந்தக் கட்டுரையில் அவர்களுக்கு பிரதான இடமில்லை என்பதால் அவர்களை கொஞ்சம் மறந்து விடலாம். ஓர் அணியில் நமக்கு பிடித்தமான பேட்டிங் நட்சத்திரங்கள் பலர் இருப்பர். ஆனால் அவர்களில் ஒருவர் மட்டும் தான் சூரியனாக ஜொலிப்பார். பிராட்மேன், ரிச்சர்ட்ஸ், சச்சின் ஆகியோரைப் போல.

அந்த உச்ச நட்சத்திரம் பலவீனத்தின் நிழல் படியாதவர்; உயிருக்கு அடுத்தபடியாக பேட்டிங்கை கருதபவர்; இல்லாமல் போன ஒன்றை இருப்பதாக நம்பி பார்க்கின்ற நமக்கும் அந்த நம்பிக்கையை கடத்துபவர். நாட்டின் கௌரவத்தை தன்னுடைய தோளில் வைத்து சுமப்பவர். அவருக்கு ஆஃப் ஸ்டம்ப் பக்கமாக தலை விழுவது என்பது அநீதியின் பக்கம் நிற்பதைப் போன்றது. அவருடைய ஆட்டம் கலாபூர்வமாக இருந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் அதில் கொஞ்சம் தீவிரத்தன்மையும் எட்டிப் பார்த்துவிடும். காலம்காலமாக கட்டிக் காக்கப்பட்ட அந்தப் பரம்பரையின் மானம் இப்போது கோலியால் முன்னெடுத்து செல்லப்படுகிறது. அவர் நம்முடைய போற்றுதலுக்கு உரியவர்தான். ஆனால் நம்முடைய கனவுகளில் எட்டிப் பார்ப்பவர் அல்ல.

ரோஹித் இங்கு கோலியின் எதிர்த்தரப்பின் தொடர்ச்சி. நாட்டுக்காக ஆடாத ஏன் தங்களுக்காகவே கூட ஆடாத, தாங்கள் விரும்பும் ஆட்டத்துக்காக மட்டுமே ஆடுகின்ற ஒரு பரம்பரையின் தற்கால வாரிசு. ஒரு முழுமையான Stylist.

ரோஹித் ஷர்மா

அழகியல்தான் இவருக்குப் பிரதானம். தீவிரத்தன்மை என்பதே இவருடைய அகராதியில் கிடையாது. அப்படி ஒன்றிருந்தால் இந்தப் பரம்பரையின் ஓரங்கமாக இவர் ஆகியிருக்கவே முடியாது. ஒருவேளை தீவிரத்தன்மை என்ற ஒன்று இருந்தாலும் இவர் அதை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிப்பதில்லை. அல்லது பார்க்கின்ற நாம் அதைத் தீவிரத்தன்மை என ஏற்றுக் கொள்வதில்லை. இவர் அணியைத் தோளில் எல்லாம் வைத்து சுமக்க மாட்டார். யாரும் யாரையும் சுமப்பதற்காக பிறவி எடுக்கவில்லை என வியாக்யானம் கூட பேசுவார்.

ரோஹித் இல்லாத ஒன்றை எல்லாம் இருப்பதாக நம்மை நம்பவைக்க எல்லாம் முயற்சிப்பது இல்லை. இன்னும் சொல்லப் போனால் இல்லாத அல்லது இயலாத ஒன்று என்பதே இவருக்கு எதுவுமில்லை. கேட்கப்படும் கேள்விக்கு சரியான விடை தெரிந்தவன் உடனே சொல்லிவிடுவான். விடையில்லாதவன் யோசித்துக் கொண்டிருப்பான். ஆனால் ஒரு கேள்விக்கு 5 விடைகள் வைத்திருப்பவன் என்ன செய்வான்? எல்லாவற்றையும் செய்துப் பார்க்க ஆசைப்பட்டு, எதை செய்யலாம் என்கிற குழப்பத்தில் அந்த ஆசைத் தீயில் வீழ்ந்து மடிவான். ரோஹித் பலவீனத்தின் நிழல் படிந்தவர். பலவீனம் இல்லாதவன் எப்படி ஒரு கலைஞனாக இருக்க முடியும்?

இவரால் மலையை எல்லாம் புரட்டிப் போட்டு விட முடியாது. ஆனால் மழையை ரசிப்பது எப்படி என நமக்கு கற்றுக் கொடுக்க முடியும். இவரை வெறுப்பவர்கள் என்று யாருமில்லை. அப்படியே யாராவது இருந்தாலும் அங்கு வெறுப்பின் அர்த்தம் நேரடியானது அல்ல . செல்லப் பிராணியை விரட்டுவது போல, காதலியை தவிர்ப்பது போல, பேய் மழைக்கு சாபமிடுவது போல ஒன்று. அது அன்பின் ஓர் அதீத வெளிப்பாடு. ரோஹித் நம்பிக்கைக்கு உரியவராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் கட்டி வைக்கப்பட்ட நம்முடைய கற்பனைகளை அவரால் சிறகடிக்க வைக்க முடியும்.

‘’ரொம்பவும் பொறுப்பில்லாமல் ஆடுகிறார்’’. இது ரோஹித் மீது அடிக்கடி வைக்கப்படும் ஒரு விமர்சனம். முதலில் பொறுப்பு என்பதே இங்கு ஒரு சிக்கலான அல்லது தவறான வார்த்தைப் பிரயோகம். எதன் ஒன்றின் மீதாவது பற்றுக் கொண்டவன் தான் பொறுப்பாக இருக்க முடியும். அப்படிப் பற்றுக் கொண்டு விட்டால் அவன் என்பது அவனாக மட்டுமே இருக்க முடியாது. உண்மையான பேட்டிங் என்பது ஒரு சம்போகம் போல, ஒரு மரணத் தருணம் போல, ஒரு ஜென் நிலை போல மிகவும் வெறுமையானது. ஆனால், அதே சமயம் ஆழமானது. தன் அபிமானமே இல்லாத ஒருவனிடம் சென்று அணிக்கும், நாட்டுக்கும் அபிமானமாக இருக்க வேண்டும் என கேட்பது எந்த விதத்தில் நியாயம்? நீங்கள் ரோஹித்தின் மேல் சுமத்த விரும்புகின்ற பொறுப்பின் சுமை அவருடைய கவர் டிரைவின் டைமிங்கை பாதித்து விடும்.

ரோஹித் ஷர்மா

ஒரு நளினமான பேட்ஸ்மேன் தேவைப்பட்டால் சமயங்களில் பொறுப்பாக ஆட முடியும். இந்த தொடரில் ரோஹித் ஆடி வருவதைப் போல. ஆனால், ஒரு பொறுப்பான பேட்ஸ்மேன், நளினமாக ஆட முடியுமா? குறைந்தபட்சம் அந்த உணர்வைக் கற்பனையாவது பண்ணிப் பார்க்க முடியுமா? நாம் உண்மையில் ரோஹித்தின் ஆகிருதியைக் கண்டு உள்ளூர அஞ்சுகிறோம். அதன் பிரமாண்டம், சொல்லில் அடங்காத மேதமை நம்மைக் குற்றவுணர்வில் தள்ளுகிறது. அதனால் உண்டாகும் பதபதப்பில் அவருடைய சிறு பிழைகளையும் பூதாகாரமாக மாற்றுகிறோம்.

ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் ஓர் உன்னத அனுபவம். அதை உணர அதற்கு நம்மை முழுமையாக ஒப்புக் கொடுக்க வேண்டும். அவருடைய ஹூக் ஷாட் சொதப்பலாக முடிந்தால், அது நம்முடைய குரூர யதார்த்தத்தின் ஒரு பகுதி. அதுவே வெற்றிகரமாக அமைந்து விட்டால் அது எதிர்பாராத, ஆனால் எந்நேரமும் நாம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஒரு தெய்வ தரிசனம். மராட்டி மொக்கு கடிக்கு பயந்தால் பிரியாணியை சுவைக்க முடியாது அல்லவா? ரோஹித் ஆட்டத்தில் வைக்கப்படும் மற்றொரு விமர்சனம். ‘அவர் மோசமான முறையில் ஆட்டம் இழக்கிறார்’. எப்படி ஆட்டம் இழந்தாலும் விக்கெட் என்பது விக்கெட்தான். அதிலென்ன மோசமான முறையில் இழந்த விக்கெட், நல்ல முறையில் இழந்த விக்கெட்?

ரோஹித் பரம்பரையை (stylists) சேர்ந்தவர்கள் ஒருவர் கூட சதத்தை ஆடம்பரமாக கொண்டாடுவதில்லை. காரணம் அவர்களின் இலக்கு என்பது எண்களை கடப்பது அல்ல. உண்மையில் அவர்கள் எதையுமே கடக்க முற்படுவதில்லை. வெறுமனே அதன் அண்மையை தரிசித்து விட்டு நகர்ந்து விடுகிறார்கள்.

ரோஹித் ஷர்மா

பெண்களுக்கு அழகு எத்தனை பாரமானதோ அது போல பேட்டிங்கில் நளினம் (lazy elegance) பேட்ஸ்மேனுக்கு பாரமானது. இதனால் தான் நளினம் என்ற வார்த்தையை கேட்டாலே ரோஹித் காததூரம் ஓடுகிறார்.

அடுத்த டெஸ்ட் போட்டியிலேயே ரோஹித் இரட்டைச் சதம் அடிக்கிறார் என வைத்துக் கொள்வோம். ஒருநாள் முழுக்க அதையே பேசிக் கொண்டிருப்போம். பிறகு மெல்லமாக பேச்சை வேறொரு திசைக்கு நகர்த்துவோம். ‘’அவர் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் 300-ஐ அடித்திருக்கலாம்’’. 200 ரன்களை குவிக்கும் போது சிதறாத கவனம் ஆட்டமிழக்கும்போது எப்படி சிதறும்? உண்மையில் அதற்கு பெயர் கவனச்சிதறல் அல்ல. அதிர்ஷ்டமின்மை! ‘இன்றைக்கு இது போதும் என கடவுள் ரோஹித்தை பெவிலியனுக்கு திருப்பி அனுப்பிவிட்டார்’ என ஆத்திகர்கள் சொல்லிக் கொள்ளலாம். Ludo ஆட்டத்தில் கவனம் மட்டுமே வெற்றியை கொடுத்து விடுமா என்ன?

ரோஹித்தின் மேதமையை ஏன் நாம் பெரிதாக சிலாகிப்பது இல்லை. காரணம் கண்ணுக்குப் புலப்படும் உழைப்பு எதுவும் ரோஹித்தின் பேட்டிங்கில் இல்லை அல்லது நம்முடைய புரை அண்டிய கண்களில் இல்லை. நளினம் ஒரு சர்க்கரைப் படலமாக நின்று ரோஹித்தின் உழைப்பை பாராட்டுகிற சாக்கில் அதனை மட்டுப்படுத்துகிறது. இந்தப் படலம்தான் டேவிட் கோரின் மேதமையை கொண்டாட விடாமல் தடுத்தது. மார்க் வாகை தன் அண்ணனுக்கு முன்பே ஓய்வு அறிவிக்கத் தூண்டியது. மஹிலா ஜெயவர்த்தனவை ஒரு வட்டத்துக்குள் அடைத்தது. வெற்றி, தோல்வி, தேசாபிமானங்களை கடந்து ரோஹித்தின் ஆட்டத்தை கொஞ்சம் தரிசிப்போம். ரோஹித்தின் ஸ்ட்ரெயிட் டிரைவுக்கு தங்களை மறந்து இங்கிலாந்து ஃபீல்டர்கள் கை தட்டியதைப் போல!

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: