ரோகித் சர்மா, புஜாரா அபாரம்: இந்திய அணி பதிலடி

Spread the love


லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் 2வது இன்னிங்சில் ரோகித் சர்மா, புஜாரா அரைசதம் விளாச இந்திய அணி பதிலடி தந்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்தியா 1–0 என, முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் லீட்சில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்னுக்கு சுருண்டது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 423 ரன் எடுத்திருந்தது. ஓவர்டன் (24) அவுட்டாகாமல் இருந்தார்.

 

ஷமி அசத்தல்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் கிரெய்க் ஓவர்டன், முகமது ஷமி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசினார். இவர், 32 ரன் எடுத்திருந்த போது ஷமியிடம் சரணடைந்தார். பும்ரா ‘வேகத்தில்’ ராபின்சன் ‘டக்–அவுட்’ ஆனார்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 432 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இந்தியா சார்பில் ஷமி 4, பும்ரா, சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

ராகுல் ஏமாற்றம்: பின், 354 ரன் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் துவக்கம் தந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்து நிதானமாக விளையாடிய இவர்கள், விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆண்டர்சன் பந்தில் முதல் பவுண்டரி அடித்த ரோகித், ராபின்சன் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். இந்திய அணி முதல் 17 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 30 ரன் மட்டுமே எடுத்திருந்தது. முதல் விக்கெட்டுக்கு 38 ரன் சேர்த்த போது ஓவர்டன் பந்தில் ராகுல் (8) அவுட்டானார்.

 

ரோகித் அபாரம்: ஆண்டர்சன் பந்தை பவுண்டரிக்கு விரட்டி தனது ரன் கணக்கை துவக்கிய புஜாரா, ஓவர்டன் வீசிய 29வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். இவர்களை பிரிக்க இங்கிலாந்து பவுலர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. சாம் கர்ரான் வீசிய 38வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசிய ரோகித் அரைசதமடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்த போது ராபின்சன் ‘வேகத்தில்’ ரோகித் (59) வெளியேறினார்.

 

புஜாரா எழுச்சி: மறுமுனையில் அசத்திய புஜாரா, ஓவர்டன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அரைசதமடித்து எழுச்சி கண்டார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கேப்டன் விராத் கோஹ்லி, ஆண்டர்சன் வீசிய 53வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். பொறுப்பாக ஆடிய புஜாரா, ஆண்டர்சன் வீசிய 55வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விரட்டினார். இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து பவுலர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

 

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 2வது இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 215 ரன் எடுத்து, 139 ரன் பின்தங்கி இருந்தது. புஜாரா (91), கோஹ்லி (45) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஓவர்டன், ராபின்சன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

 

62 சிக்சர்

ராபின்சன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித் சர்மா, டெஸ்ட் அரங்கில் அதிக சிக்சர் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் கபில்தேவை (61 சிக்சர்) முந்தி 4வது இடம் பிடித்தார். இதுவரை 62 சிக்சர் அடித்துள்ளார். முதல் மூன்று இடங்களில் சேவக் (90), தோனி (78), சச்சின் (69) உள்ளனர்.

 

நான்காவது முறை

இத்தொடரில் ரோகித் சர்மா, 4வது முறையாக ஒரு இன்னிங்சில் 100 பந்துகளுக்கு மேல் சந்தித்துள்ளார். இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், இங்கிலாந்து மண்ணில் களமிறங்கிய 28 இன்னிங்சில் 13 முறை இப்படி விளையாடினார்.

* மூன்றாவது டெஸ்டின் இரு இன்னிங்சிலும் ரோகித், தலா 100 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்டின் இரு இன்னிங்சிலும் தலா 100 பந்துகளுக்கு மேல் சந்தித்த 3வது இந்திய துவக்க வீரரானார். ஏற்கனவே கவாஸ்கர் (3 முறை), முரளி விஜய் (2014) இப்படி விளையாடினர்.

 

ஜோ ரூட் தாமதம்

ராபின்சன் வீசிய 32வது ஓவரின் 5வது பந்தை ரோகித் சர்மா சந்தித்தார். பந்து ரோகித்தின் ‘பேடில்’ பட்டுச் சென்றது. இதற்கு எல்.பி.டபிள்யு., ‘அப்பீல்’ செய்ய கேப்டன் ஜோ ரூட் மிகவும் தயங்கினார். ஒருவழியாக ‘அப்பீல்’ செய்த போது, ஆடுகள அம்பயர் ரிச்சர்டு கெட்டில்பரோ, நேரம் முடிந்துவிட்டது என்று தெரிவித்தார். ஆனால் ‘பால் டிராக்கிங்’ தொழில்நுட்பத்தில் பந்து ‘ஸ்டெம்சை’ தகர்த்தது தெளிவாக தெரிந்தது. இதனால் 35 ரன்னில் தப்பிய ரோகித், அரைசதம் கடந்தார்.

ராபின்சன் வீசிய 30வது ஓவரில் ரோகித் சர்மாவுக்கு எதிராக ‘அப்பீல்’ செய்த போது, பந்து ‘ஸ்டெம்சிற்கு’ மேலே சென்றதால் இங்கிலாந்தின் ‘ரிவியூ’ வீணானது. இதனால் மீண்டும் ‘அப்பீல்’ செய்ய தயக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

Advertisement

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: