ரோகித் சதம்…இந்தியா ஆதிக்கம்: வலுவான முன்னிலை நோக்கி

Spread the love

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டின் 2வது இன்னிங்சில் ரோகித் சர்மா சதம், புஜாரா அரைசதம் விளாச, இந்திய அணி வலுவான முன்னிலை நோக்கி செல்கிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என, சமநிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 191, இங்கிலாந்து 290 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன் எடுத்திருந்தது. ரோகித் (20), ராகுல் (22) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

நிதான ஆட்டம்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணியின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார் ரோகித். வோக்ஸ், ராபின்சன் பந்தில் தலா ஒரு பவுண்டரி விரட்டிய ராகுல், வோக்ஸ் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்த போது ஆண்டர்சன் ‘வேகத்தில்’ ராகுல் (46) அரைசதமடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

 

ரோகித் அசத்தல்: அடுத்து வந்த புஜாரா, ராபின்சன், ஓவர்டன், மொயீன் அலி பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார். இவருக்கு, ரோகித் ஒத்துழைப்பு தந்தார். பொறுப்பாக ஆடிய புஜாரா, ஓவர்டன் வீசிய 49வது ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். ஆண்டர்சன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரோகித், மொயீன் அலி பந்தை சிக்சருக்கு அனுப்பி, டெஸ்ட் அரங்கில் தனது 8வது சதத்தை பதிவு செய்தார்.

 

புஜாரா அரைசதம்: மறுமுனையில் அசத்திய புஜாரா, ஓவர்டன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, டெஸ்ட் அரங்கில் தனது 31வது அரைசதமடித்தார். இவர்களை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறினர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 153 ரன் சேர்த்திருந்த போது, 81வது ஓவரை வீசிய ராபின்சன் புதிய பந்தில் மிரட்டினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மாவை (127) வெளியேற்றிய இவர், கடைசி பந்தில் புஜாராவை (61) ‘பெவிலியனுக்கு’ அனுப்பினார்.

 

பின் இணைந்த கேப்டன் விராத் கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா ஜோடி நிதானமாக விளையாடியது. ஆண்டர்சன் வீசிய 90வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் கோஹ்லி. இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 270 ரன் எடுத்து, 171 ரன் முன்னிலை வகித்திருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக 3ம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. கோஹ்லி (22), ஜடேஜா (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

3000 ரன்

இந்தியாவின் ரோகித் சர்மா, தனது 80வது ரன்னை எடுத்த போது டெஸ்ட் அரங்கில் 3000 ரன் என்ற மைல்கல்லை அடைந்தார். இவர், 43 டெஸ்டில் இந்த இலக்கை எட்டினார். இதுவரை 8 சதம், 14 அரைசதம் உட்பட 3047 ரன் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில், 3000 ரன்னை எட்டிய 23வது இந்திய வீரரானார்.

 

முதல் சதம்

அபாரமாக ஆடிய ரோகித் சர்மா, அன்னிய மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதுவரை 8 சதமடித்துள்ள இவர், சொந்த மண்ணில் 7 சதம் (177, 111*, 102*, 176, 127, 212, 161) விளாசினார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: