ராகுல் சதம்… இந்தியா ஆதிக்கம் * இங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்றம்

Spread the love


.லண்டன்: லார்ட்ஸ் டெஸ்டில் சதம் விளாசினார் ராகுல். முதல் இன்னிங்சில் சிறப்பான துவக்கம் கண்ட இந்திய அணி, வலுவான ரன்குவிப்பை நோக்கி முன்னேறுகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மழை காரணமாக ‘டிரா’ ஆனது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. மழை காரணமாக 30 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது. வானம் மேகமூட்டமாக காணப்பட ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் காயமடைந்த ஷர்துல் தாகூருக்குப் பதில் இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டார். அஷ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. இங்கிலாந்து அணியில் கிராலே, லாரன்ஸ், ஸ்டூவர்ட் பிராட்டுக்குப் பதில் ஹசீப் ஹமீது, மொயீன் அலி, மார்க் உட் சேர்க்கப்பட்டனர்.

நல்ல துவக்கம்

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி வலுவான துவக்கம் கொடுத்தது. மழை காரணமாக ஆடுகளத்தில் ஈரப்பதம் காணப்பட, இந்திய அணியின் ‘டாப் ஆர்டரை’ எப்படியும் தகர்த்து விடலாம் என எதிர்பார்த்து பவுலிங் தேர்வு செய்த ஜோ ரூட்டின் இங்கிலாந்து அணியினருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஆண்டர்சன், ராபின்சன், சாம் கர்ரான் பந்துகளை இந்திய ஜோடி கவனமாக எதிர்கொண்டது. முதல் 12 ஓவரில் 14 ரன் மட்டும் எடுத்தது. கர்ரான் வீசிய 12.5 வது ஓவரில் இப்போட்டியின் முதல் பவுண்டரியை ரோகித் அடித்தார்.

ரோகித் அரைசதம்

இதன் பின் திடீரென ‘வேகம்’ எடுத்த ரோகித், சர்மா, கர்ரான் வீசிய போட்டியில் 15வது ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 46 ரன் எடுத்த போது, லேசான மழை குறுக்கிட போட்டி நிறுத்தப்பட்டது. மீண்டும் துவங்கியதும், ரோகித் டெஸ்ட் அரங்கில் 13வது அரைசதம் அடித்தார். தொடர்ந்து மார்க் உட் வீசிய பந்தை சிக்சருக்கு அனுப்பினார். லார்ட்ஸ் டெஸ்டில் சேவக்கிற்கு (2002) பின் சிக்சர் அடித்த துவக்க வீரர் ஆனார் ரோகித்.

ராகுல் நம்பிக்கை

இவர் 83 ரன் எடுத்து, ஆண்டர்சன் பந்தில் போல்டானார். புஜாரா (9) வழக்கம் போல விரைவில் வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ராகுல் டெஸ்ட் அரங்கில் 6வது சதம் எட்டினார். இங்கிலாந்துக்கு எதிராக இவர் அடித்த 3வது சதம் இது. மறுபக்கம் கோஹ்லி 42 ரன்னில் அவுட்டானார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 276 ரன் எடுத்திருந்தது. ரகானே (1), ராகுல் (127) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

2

இங்கிலாந்து மண்ணில் அதிக சதம் அடித்த கவாஸ்கர், மெர்சென்ட், ரவி சாஸ்திரி, டிராவிட் என, இந்திய துவக்க வீரர்கள் பட்டியலில் இணைந்தார் ராகுல். அனைவரும் தலா 2 சதம் விளாசினர். 

* கடந்த 2015க்குப் பின் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா (எஸ்.இ.என்.ஏ.,) நாடுகளுக்கு எதிராக சதம் அடித்த ஆசிய வீரர்களில் முதலிடத்தில் நீடிக்கிறார் ராகுல். இவர் 3 சதம் அடித்தார். தவிர அசார் அலி, மசூது (பாக்.,), கருணாரத்னே (இலங்கை), தமிம் இக்பால் (வங்கதேசம்) தலா ஒரு சதம் அடித்தனர்.  

 

முதன் முறை

கடந்த 2007ல் தினேஷ் கார்த்திக், வாசிம் ஜாபருக்குப் (147) பின் இங்கிலாந்து மண்ணில், முதல் விக்கெட்டுக்கு 100 ரன்னுக்கும் மேல் எடுத்த ஜோடி ஆகினர் ரோகித்–ராகுல்.

* 2017க்குப் பின் அன்னிய மண்ணில் துவக்க ஜோடி 100 ரன்னுக்கும் மேல் எடுத்தது.

* 2011, ஜன., க்குப் பின் ஆசிய மண்ணுக்கு வெளியே இந்திய ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்னுக்கும் மேல் (126) சேர்த்தது. இதற்கு முன் 2010ல் சேவக்–காம்பிர் ஜோடி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஜோகனஸ்பர்க் டெஸ்டில் 137 ரன் எடுத்தது.

 

7

இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா, கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான ஆமதாபாத் டெஸ்டில் அரைசதம் அடித்து இந்திய அணியை மீட்டார். இதன் பின் 6 இன்னிங்சில் ஏமாற்றினார். நேற்று 7வது இன்னிங்சில் அரைசதம் எட்டினார்.

36டெஸ்ட் அரங்கில் அதிக முறை ‘டாஸ்’ தோற்ற இந்திய கேப்டன்களில் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார். கேப்டனாக களமிறங்கி 63 டெஸ்டில், 36 போட்டிகளில் ‘டாஸ்’ வெல்லவில்லை. முன்னாள் கேப்டன் தோனி 60 டெஸ்டில் 34 ல் ‘டாஸ்’ தோற்று, இரண்டாவது இடத்தில் உள்ளார்.

 

லார்ட்சில் முதல் வீரர்…

லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ‘டுவென்டி–20’ (2009 உலக கோப்பை), ஒருநாள் (2018), டெஸ்ட் (நேற்று) என மூன்று வித கிரிக்கெட்டிலும் துவக்கம் தந்த முதல் வீரர் ஆனார் இந்தியாவின் ரோகித்.

 

1952

கடந்த 1952ல் லார்ட்ஸ் டெஸ்டில் பங்கஜ் ராய், வினு மன்கட் முதல் இன்னிங்சில் முதல் விக்கெட்டுக்கு 106 ரன் சேர்த்தனர். தற்போது 79 ஆண்டுக்குப் பின் இந்திய ஜோடி (ரோகித்–ராகுல்) முதல் விக்கெட்டுக்கு 100 ரன்னுக்கும் மேல் (126) எடுத்தது.

 

1974க்குப் பின்…

லார்ட்ஸ் டெஸ்டில் 1974ல் இந்தியாவின் கவாஸ்கர், பரூக் என்ஜினியர் ஜோடி 131 ரன் எடுத்தது. இதன் பின் இம்மைதானத்தில் அதிக ரன் எடுத்த துவக்க ஜோடி என ரோகித்–ராகுல் (126) பெருமை பெற்றனர்.

 

126  

இந்திய அணிக்காக லார்ட்ஸ் டெஸ்டில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த ஜோடி வரிசையில் ரோகித்–ராகுல் (126) இரண்டாவது இடம் பெற்றனர். முதல் இடத்தில் கவாஸ்கர், பரூக் என்ஜினியர் (131, 1974) ஜோடி உள்ளது. பங்கஜ் ராய், வினு மன்கட் (106, 1952) ஜோடி மூன்றாவதாக உள்ளது.

 

29

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் அரங்கில், ஒரே மைதானத்தில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்களில் முதலிடத்தை இலங்கையின் முரளிதரனுடன் (29 விக்., கொழும்பு) பகிர்ந்து கொண்டார் இங்கிலாந்தின் ஆண்டர்சன். இவர் லார்ட்சில் 29 விக்கெட் சாய்த்தார். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் லியான் (26, அடிலெய்டு) உள்ளார்.

 

83 

நேற்று 83 ரன் எடுத்த இந்தியாவின் ரோகித் சர்மா, அன்னிய மண்ணில் தனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்தார் ரோகித். இதற்கு முன் கடந்த 2015ல் இலங்கை அணிக்கு எதிரான கொழும்பு டெஸ்டில் 79 ரன் எடுத்ததே அதிகம். 2014ல் ஆக்லாந்து டெஸ்டில் (நியூசி.,) 74 ரன், 2018, அடிலெய்டு டெஸ்டில் 63 ரன் (ஆஸி.,) எடுத்தது அடுத்த இரு இடங்களில் உள்ளன.

 

தேறாத புஜாரா

இந்திய டெஸ்ட் ‘ஸ்பெஷலிஸ்ட்’ வீரர் புஜாரா. சமீபத்திய போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். கடைசியாக களமிறங்கிய 10 இன்னிங்சில் 15, 21, 7, 0, 17, 8, 15, 4, 12, 9 ரன் மட்டும் எடுத்தார். ஒருமுறை கூட 25 ரன்களை எட்டவில்லை.

 

கங்குலி-–பாய்காட் பந்தம்

இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் கங்குலி, மனைவி டோனாவுடன் லார்ட்ஸ் வந்திருந்தார். இவருடன் செயலர் ஜெய் ஷாவும் இந்தியா–இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டியை பார்த்து ரசித்தனர். அப்போது இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட்டுடன் கங்குலி பேசிக் கொண்டிருந்தார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ஏனெனில் கங்குலிக்கு ‘பிரின்ஸ் ஆப் கோல்கட்டா’ என (கோல்கட்டா இளவரசர்) என பெயர் வைத்தது பாய்காட் தான்.

Advertisement

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: