ரஷ்ய தடுப்பூசிகள் முதலில் வழங்கப்படும் மாகாணம் அறிவிப்பு

Spread the love


Published by T. Saranya on 2021-03-25 15:34:48

(எம்.மனோசித்ரா)

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை இலங்கையில் அவசர பயன்பாட்டுக்காக உபயோகிப்பதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய 7 மில்லியன் தடுப்பூசிகளை முதற்கட்டமாக கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இவ்வாறு கொள்வனவு செய்யும் தடுப்பூசிகளை மத்திய மாகாணத்திலுள்ளவர்களுக்கு முதற்கட்டமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கொவிட் பரவல் அச்சுறுத்தல் மேல் மாகாணத்திலேயே அதிகமாகக் காணப்பட்டது. எனவே தான் இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட அஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகளை மேல் மாகாணத்திலுள்ளவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் பெற்றுக் கொள்ளவுள்ள தடுப்பூசிகளை மாகாணங்கள் அடிப்படையில் வழங்க எதிர்பார்த்துள்ளோம். அதற்கமைய ஸ்புட்னிக் தடுப்பூசிகளை மத்திய மாகாணத்திற்கு முதற்கட்டமாக வழங்க தீர்மானித்துள்ளோம்.

கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக இலங்கையின் சனத்தொகையில் 14 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதன் ஆரம்பகட்டமாக 5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் தடுப்பூசியை இலங்கையில் அவசர பயன்பாட்டுக்காக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டு குழுவின் பரிந்துரைக்கமைய 7 மில்லியன் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை 69.65 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *