பிரேசில் காற்பந்து வீரர் நெய்மார் ரசிகர்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டின் தொடர்பில் ரியோ டி ஜெனிரோ காவல் நிலையத்தில் வாக்குமூலம் கொடுத்தபிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டிய பெண், சம்பவம் தொடர்பாகத் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார்.
அந்தப் பெண் முன்வைத்த குற்றச்சாட்டை நெய்மார் மறுத்தார்.
தம்மிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒரு மோசடி அதுவென்று நெய்மார் குறிப்பிட்டார்.
நெய்மார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, விளையாட்டுத் துறையில் அவரின் வருங்காலத்தைப் பாதிக்கலாம் என்று அவரது அப்பா குறிப்பிட்டார்.
இதற்கிடையே, கடன் பற்று அட்டை நிறுவனமான MasterCard நெய்மார் தோன்றும் விளம்பரங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
அண்மைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்வரை நெய்மாரின் படங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என, MasterCard குறிப்பிட்டது.
நெய்மார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து Nike நிறுவனமும் அதிக அக்கறை தெரிவித்துள்ளது.