ரகானே அரைசதம்… இந்தியா நிதானம்: இங்கிலாந்து பவுலர்கள் அசத்தல்

Spread the love

லண்டன்: லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. ரகானே அரைசதம் கடந்து கைகொடுத்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 364, இங்கிலாந்து 391 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், இந்திய அணி 27 ரன் பின்தங்கி இருந்தது.

ராகுல் ஏமாற்றம்: நான்கம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு மார்க் உட் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ லோகேஷ் ராகுல் (5), ரோகித் சர்மா (21) அவுட்டாகினர். ராபின்சன் வீசிய 21வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய கோஹ்லி (20), சாம் கர்ரான் பந்தில் சரணடைந்தார்.

 

ரகானே அரைசதம்: பின் இணைந்த புஜாரா, துணை கேப்டன் அஜின்கியா ரகானே ஜோடி நிதானமாக விளையாடியது. ராபின்சன், சாம் கர்ரான் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த ரகானே ஆறுதல் தந்தார். புஜாரா, தனது முதல் பவுண்டரியை 118வது பந்தில் தான் அடித்தார். இவர்களை பிரிக்க இங்கிலாந்து பவுலர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

 

சாம் கர்ரான் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரகானே, டெஸ்ட் அரங்கில் தனது 24வது அரைசதமடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்த போது உட் பந்தில் புஜாரா (45) வெளியேறினார். பொறுப்பாக ஆடிய ரகானே (61), மொயீன் அலி ‘சுழலில்’ சிக்கினார். அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா (3) ஏமாற்றினார்.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக 4ம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. ரிஷாப் பன்ட் (14), இஷாந்த் சர்மா (4) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் உட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

சிக்கலில் இந்தியா: இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய ‘டெயிலெண்டர்கள்’ கைகொடுக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்கு 200 ரன்னுக்கு மேல் இலக்கு நிர்ணயித்து நெருக்கடி கொடுக்கலாம். ஒருவேளை விரைவில் வெளியேறினால், இந்திய அணிக்கு சிக்கலாகிவிடும்.

 

தீப்தி சர்மாவுக்கு கவுரவம்

லார்ட்ஸ் டெஸ்டின் 4ம் நாள் ஆட்டத்தை இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 23, மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ‘பெல்லை’ அடித்து துவக்கி வைத்தார். இதற்கான புகைப்படத்தை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

 

நான்காவது முறை

இந்தியாவின் புஜாரா, தனது முதல் பவுண்டரியை 118வது பந்தில் அடித்தார். கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய தொடரில் இருந்து இவர், 4வது முறையாக இப்படி 100 பந்துகளுக்கு பின், முதல் பவுண்டரியை பதிவு செய்துள்ளார்.

 

பந்து சேதப்படுத்தப்பட்டதா

லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் பந்தை சேதப்படுத்தினரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. நான்காம் நாள் ஆட்டத்தில் ராபின்சன் வீசிய 35வது ஓவரின் போது இங்கிலாந்து வீரர் ஒருவர் பந்தை காலால் உதைத்து மற்றொரு வீரரிடம் ‘பாஸ்’ செய்தார். மற்றொரு வீரர், தனது ‘ஷூ’வின் அடிப்பகுதியில் உள்ள கூர்மையான முனைகளை பயன்படுத்தி பந்தை அமுக்கினார். இவர், பந்தை சேதப்படுத்துவதற்காக இப்படி செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்த வீடியோ ‘டிவி’யில் காண்பிக்கப்பட்டது.  வீரர்களின் முகம் காட்டப்படவில்லை. இந்திய வீரர்களும், இச்சம்பவம் குறித்து ‘மேட்ச் ரெப்ரி’ அல்லது ஆடுகள அம்பயர்களிடம் புகார் தெரிவிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ‘வைரலாக’ பரவி வருகிறது.

சமூக வலைதளத்தில் இந்திய ரசிகர் ஒருவர், ‘இது வேண்டுமென்றே நடந்ததா?’ என, இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பிராட், ‘நிச்சயமாக இல்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: