மோர்கன் படுமோசம்; தோனி நன்றாகவே பேட் செய்கிறார்: கம்பீர் ஆதரவு | Dhoni has performed better than Morgan even though he hasn’t played international cricket, says Gambhir

Spread the love

சிஎஸ்கே கேப்டன் தோனியையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கனையும் ஒப்பிடக் கூடாது. இருவரும் ஒரே மாதிரியான ரெக்கார்டு வைத்திருக்கிறார்கள். இருப்பினும் சர்வதேச கிரிக்கெட் விளையாடாத சூழலிலும் மோர்கனைவிட தோனி சிறப்பாகவே பேட் செய்கிறார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி20 போட்டியின் 14-வது சீசன் நிறைவுக்கு வந்துவிட்டது. துபாயில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது.

இந்த சீசன் முழுவதுமே இரு அணிகளின் கேப்டன்களும் கேப்டன் பொறுப்பை மட்டும்தான் கவனித்தார்கள், ஒரு பேட்ஸ்மேனாக இருவரும் பங்களிப்பு செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம். அதிலும் டெல்லி அணிக்கு எதிராக லீக் ஆட்டத்தில் தோனியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது என்று விமர்சித்தவர்களுக்கு முதல் தகுதிச் சுற்றில் டெல்லி அணிக்கு எதிராக தோனி ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்து அணியை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார்.

இந்த சீசனில் தோனி, 15 போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 115 ரன்கள் மட்டும்தான் சேர்த்துள்ளார். அதிகபட்சமே 18 ரன்கள்தான்.

ஆனால், தோனியைவிட ரன்கள் ஓரளவுக்கு மோர்கன் சேர்த்திருந்தாலும் களமிறங்கிய எந்தப் போட்டியிலும் நிலைக்கவில்லை. மோர்கன் 16 போட்டிகளில் 15 இன்னிங்ஸ்களில் பேட் செய்து, 129 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகபட்சமாக 47 ரன்கள் அடித்தார். இந்த 47 ரன்களும் இந்தியாவில் நடந்த முதல் சுற்றின்போது அடித்ததாகும். ஐக்கிய அரபு அமீரகம் வந்தபின் மோர்கனின் ஆட்டம் படுத்துவிட்டது.

இருவரும் அணியில் கேப்டன் பணியை மட்டுமே செய்தனர். தவிர பேட்ஸ்மேன் பணியைச் செய்திருந்தால் கூடுதலாக பலமாக இருந்திருக்கும்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், கிரிக்இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

”சிஎஸ்கே கேப்டன் தோனியின் பேட்டிங் ஃபார்மோடு ஒப்பிடுகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கனின் ஃபார்ம் மோசமாக இருக்கிறது. ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் 5-வது வீரராக மோர்கன் களமிறங்கியும், எந்தவிதமான ஃபார்மிலும் இல்லை.

இதனால், தன்னைத்தானே கடைசி நிலையில் தாழ்த்திக் கொண்டார். ஆனால் கடைசி வரிசையில் களமிறங்கும் வகையில் மோர்கன் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும்போது அவரின் பேட்டிங்கில் கூடுதல் அழுத்தம் ஏற்படும், அவருக்கும் நெருக்கடி ஏற்படும்.

ஆதலால், தோனியையும் மோர்கனையும் ஒப்பிட முடியாது. ஏனென்றால், தோனி ஓய்வு பெற்றபின் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சர்வதேசப் போட்டியில் பங்கேற்கவில்லை. ஆனால், மோர்கன் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்காக ஆடுகிறார். சர்வதேச அரங்கில் இங்கிலாந்து அணியை வழிநடத்தி வருகிறார். அந்தக் கோணத்தில் பார்த்தால், தோனியோடு ஒப்பிடுகையில், மோர்கனின் பேட்டிங் ஃபார்ம் மோசம்”.

இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அதிர்ஷ்டவசமாக வெங்கடேஷ் ஐயர் கிடைத்திருப்பது தொடக்க வரிசையை வலுவாக்கிவிட்டது. இல்லாவிட்டால் தொடக்க வரிசையில் யாரைக் களமிறக்குவது, ஒன்டவுன், அடுத்தடுத்து யார் களமிறங்குவது எனத் தொடர் குழப்பம் நிலவும். அவை அனைத்துமே ஐக்கிய அரபு அமீரகம் வந்தபின் இல்லாதது கொல்கத்தா அணி தொடர் வெற்றிகளைப் பெறக் காரணம்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: