மெஸ்சி விலகல்: பார்சிலோனா அணியில் இருந்து

Spread the love

மாட்ரிட்: பார்சிலோனா அணிக்காக மெஸ்சி விளையாடமாட்டார் என, அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 34. முன்கள வீரரான இவர், கிளப் அணிகளுக்கான போட்டியில் ஸ்பெயினின் பார்சிலோனா அணி சார்பில் விளையாடி வந்தார். அந்த அணியுடனான ஒப்பந்தம் கடந்த மாதத்துடன் நிறைவடைந்தது. இதனையடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பார்சிலோனா அணிக்காக மெஸ்சி விளையாடமாட்டார் என, அந்த அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பார்சிலோனா அணியில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, கட்டமைப்பு தடைகள் காரணமாக மெஸ்சியின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பார்சிலோனா அணியுடனான 21 ஆண்டு கால மெஸ்சியின் பயணம் முடிவுக்கு வந்தது.

 

21 ஆண்டு பயணம்: மெஸ்சி, தனது 13வது வயதில் பார்சிலோனா யூத் அணிக்காக (2000) களமிறங்கினார். கடந்த 2004ல் சீனியர் அணி சார்பில் முதன்முறையாக பங்கேற்றார். பார்சிலோனா அணிக்காக 778 போட்டிகளில், 672 கோல் அடித்துள்ளார். இதன்மூலம் கிளப் கால்பந்தில், ஒரு அணி சார்பில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். ‘லா லிகா’ தொடரில் 520 போட்டியில், 474 கோல் அடித்துள்ளார். இவரது தலைமையிலான பார்சிலோனா அணி 35 பட்டம் வென்றுள்ளது. இதில் சாம்பியன்ஸ் லீக் 4, ‘லா லிகா’ 10, ‘கோபா டெல் ரே’ 7, சூப்பர் கோப்பையில் 8 பட்டம் அடங்கும். தவிர இவர், பிரான்ஸ் கால்பந்து பத்திரிகை சார்பில் வழங்கப்படும் சிறந்த வீரருக்கான ‘பாலன் டி ஆர்’ (தங்க பந்து) விருதை 6 முறை தட்டிச் சென்றார்.

 

புதிய அணி: மெஸ்சி, உள்ளூர் போட்டியில் எந்த அணிக்காக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இவர், இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி, பிரான்சின் பாரிஸ் செயின்ட்–ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,) அணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் பார்சிலோனா அணிக்கு பயிற்சியாளராக (2007–2012) இருந்த பெப் கார்டியோலா, மான்செஸ்டர் சிட்டி அணியின் ‘மானேஜராக’ உள்ளார். இதேபோல, பி.எஸ்.ஜி., அணியின் தலைமை பயிற்சியாளராக அர்ஜென்டினாவின் மொரிசியோ போச்செட்டினோ உள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: