மும்பை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி: ஒடிசா அணி ஏமாற்றம்

Spread the love


பம்போலிம்: ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டியில் அசத்திய மும்பை அணி 2–0 என, ஒடிசா அணியை வீழ்த்தி, ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 7வது சீசன் கோவாவில் நடக்கிறது. பம்போலிம் நகரில் நடந்த லீக் போட்டியில் மும்பை, ஒடிசா அணிகள் மோதின. ஒடிசா அணிக்கு 4வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பில் டீகோ மவுரிசியோ துாக்கி அடித்த பந்து ‘கோல் போஸ்ட்டுக்கு’ மேலே சென்று வீணானது. மும்பை அணிக்கு 30வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் பார்தோலோமெவ் ஆக்பெச் முதல் கோலடித்தார். பின், 34வது நிமிடத்தில் மும்பை வீரர் மவுர்தடா தலையால் முட்டி பந்தை கோல் வலைக்குள் தள்ளினார். அப்போது ஒடிசா கோல்கீப்பர் கமல்ஜித் சிங்கை ‘பவுல்’ செய்ததாக கூறிய ‘ரெப்ரி’ கோல் அடித்ததை அனுமதிக்கவில்லை. தொடர்ந்து அசத்திய மும்பை அணிக்கு 45வது நிமிடத்தில் ரோலின் போர்ஜஸ், ஒரு கோலடித்து கைகொடுத்தார். முதல் பாதி முடிவில் மும்பை அணி 2–0 என, முன்னிலையில் இருந்தது.

 

இரண்டாவது பாதியின் 67வது நிமிடத்தில் ஒடிசா வீரர் மவுரிசியோ அடித்த பந்தை மும்பை கோல்கீப்பர் அம்ரிந்தர் சிங் கச்சிதமாக பிடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய ஒடிசா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2–0 என, வெற்றி பெற்றது. கோவா, ஈஸ்ட் பெங்கால் அணிகளை வீழ்த்திய மும்பை அணி, தொடர்ந்து 3வது வெற்றியை பதிவு செய்தது.

 

கோவா கலக்கல்

படோர்டாவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் கோவா, கேரளா அணிகள் மோதின. கலக்கலாக ஆடிய கோவா அணி 3–1 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. கோவா சார்பில் இகோர் அங்குலோ 2, ஜார்ஜ் ஆர்டிஸ் ஒரு கோலடித்தனர். கேரளா அணிக்கு விசென்ட் கோமஸ் ஒரு கோலடித்து ஆறுதல் தந்தார்.

 

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: