முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்ட திட்டம் – நடிகர் கருணாஸ் கைது

Spread the love

இந்திய முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரான நடிகர் கருணாஸ் காவல் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி பிரச்சாரம் செய்யும் போது அவருக்கு கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாக கூறி தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய நடிகர் கருணாஸ், கடந்த 10 ஆம் திகதியன்று தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கினார். 

ஆனால் கருணாசுடன் தி.மு.க பேச்சுவார்த்தை நடத்துவதற்கோ அல்லது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வகையில் தொகுதியை ஒதுக்குவதற்கோ முன்வரவில்லை. இதனால் ஆதரவு கடிதம் அளித்த சில தினங்களிலேயே திமுகவிற்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடவில்லை எனவும் அறிவித்தார்.

இருப்பினும் நடிகர் கருணாஸ் அதிமுகவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருந்ததாகவும், முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி பயணத்தின்போது கருப்புக்கொடி காட்ட இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அடுத்து காவல்துறையினர் நடிகர் கருணாஸை கைது செய்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *