யாங்கூன் : மியான்மரில் உயிரிழந்த 114 போராட்டக்காரர்களின் இறுதிச் சடங்கு நிகழ்வின்போது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நம் அண்டை நாடான மியான்மரில் பிப். 1ம் தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து ராணுவ புரட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுக்க வலியுறுத்தியும் நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் ராணுவத்தினர் அவர்களை கலைத்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அரங்கேறுகின்றன.
இந்நிலையில் நாட்டின் மிகப் பெரிய நகரங்களான யாங்கூன் மற்றும் மாண்டலேவில் நேற்று முன்தினம் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் ஆறு குழந்தைகள் உட்பட 114 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதையடுத்து உயிரிழந்தோரின் இறுதிச் சடங்குகள் நேற்று நடந்தன.
அந்த நிகழ்வில் பங்கேற்ற போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Advertisement