மலேசியாவில் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கான சரியான நேரம் வந்துவிட்டதா?

Spread the love

மலேசியா கொரோனா கிருமித்தொற்று, பொருளியல் மந்தநிலை, நடமாட்டக் கட்டுப்பாடுகள் என்று பல்வேறு சவால்களைச் சந்தித்துவருகிறது.

அவற்றிலிருந்து மக்கள் மீண்டு வராத நிலையில், பொதுத் தேர்தலுக்கான சரியான நேரம் வந்துவிட்டதா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது.

மலேசியாவின் 14வது பொதுத் தேர்தலின்போது, 60 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது; பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி புதிய அரசாங்கம் அமைத்தது.

ஆனால், அது வெறும் 22 மாதங்கள் மட்டுமே நிலைத்தது.

அதற்குப் பின், புதிய கூட்டணியாக பெரிக்கத்தான் நேஷனல்(Perikatan Nasional) ஆட்சிக்கு வந்து, தற்போது ஓராண்டாகிவிட்டது.

இந்நிலையில், அடுத்த தேர்தல் எப்போது நடைபெறும்? எப்போது நடைபெற வேண்டும் என மக்களிடையே பல கேள்விகள்.

நாட்டின் அரசியல், நிலைத்தன்மையை எட்ட உடனடியாகப் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிறார் திரு. கவிராஜன் ஜெகராஜன்.

“COVID-19 கிருமித்தொற்றுக்கான தடுப்பூசி பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. அது 80 விழுக்காட்டு மக்களைச் சென்றடையும். அதனால், பொதுத் தேர்தல் எப்போது வேண்டுமோ நடைபெறலாம்.”

தற்போது நடப்பில் உள்ள ஊரடங்குச் சட்டம் ஆகஸ்டு முதல் தேதி முடிவுக்கு வந்தபின், நாடாளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலுக்கு வழிவிடப்போவதாகப் பிரதமர் முஹிதீன் யாசின் கூறியிருந்ததையும் திரு கவிராஜன் நினைவுகூர்ந்தார்.

இருப்பினும், மீண்டும் ஒரு தேர்தல் குறித்து மக்களிடையே அச்சம் நிலவுகிறது என்கிறார் இளம் பெண்களுக்கான தலைமைத்துவ மேம்பாட்டு அமைப்பின் நிறுவனரும் தலைவருமான சாலினி கணேசன்.

“சபா மாநிலத் தேர்தல், மலேசியாவில் கிருமிப்பரவல் மோசமடைய ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. கிருமித்தொற்றுச் சம்பவங்கள் குறைந்து வரும் வேளையில், தேர்தலுக்குச் சற்று காத்திருப்பது சிறந்தது. மக்களின் சுகாதாரமே முக்கியம்.”

பொருளியல் நெருக்கடியில் பொதுத் தேர்தல் என்பது கூடுதல் செலவு என்ற கருத்தை முன்வைத்தார், ஈப்போவைச் சேர்ந்த ஹட்சன் தாஸ்.

“பொருளியல், வேலைகள், வருமானம் ஆகியவற்றுக்கே முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும்.”

கோலாலம்பூரைச் சேர்ந்த ஆஷா கூறுகையில்….

“தேர்தல், மக்கள் குரல், மக்களாட்சி ஆகியவை முக்கியம். அதனால், கிருமிப்பரவல் தணிந்த பின் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.”

இந்நிலையில், தடுப்பூசித் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தபட்ட பின்னரே பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது என்கிறார், வர்த்தகரும் அரசியல் விமர்சகருமான திரு அன்புமணி பாலன்.

“பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி ஓரளவு அரசியல் கட்டுப்பாட்டைக் கைப்பிடியில் வைத்திருப்பது போல் தெரிகிறது.

அவர்கள் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளில் பெரும் பிளவு தென்படுகிறது.

மேலும், மக்கள் பொதுத்தேர்தலுக்கான மனநிலையில் இருக்கிறார்களா என்பது சந்தேகமே.

இப்போதைக்கு அவர்களது கவனம் முழுவதும் தடுப்பூசி பெறுவதில் மட்டுமே உள்ளது.”

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *