மரண பயத்தில் இந்திய வீரர்கள் * என்ன சொல்கிறார் கங்குலி

Spread the love

புதுடில்லி: ‘‘கொரோனா காரணமாக இந்திய வீரர்கள் அச்சத்தில் இருந்தனர். இதனால் தான் விளையாட மறுத்தனர். அவர்களை குற்றம் சொல்ல முடியாது,’’ என கங்குலி தெரிவித்தார்.

இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றது. முதல் நான்கு டெஸ்ட் முடிவில் இரண்டில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2–1 என முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட், மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்க இருந்தது. 

ஆனால் பயிற்சியாளர்கள் ரவி சாஸ்திரி, பாரத் அருண் (பவுலிங்), ஸ்ரீதர் (பீல்டிங்), சீனியர் பிஸியோதெரபிஸ்ட் நிதின் படேலை தொடர்ந்து ஜூனியர் பிஸியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கும் கொரோனா உறுதியானது. இதனால் அச்சம் அடைந்த இந்திய அணியினர் ஓட்டலில் முடங்கினர். சோதனையில் அனைவரும் தேறிய போதும், போட்டி துவங்க சில மணி நேரம் இருந்த போது டெஸ்ட் ரத்தானது. 

ஆனால், பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய வீரர்கள் விளையாட மறுத்தனர் என விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் கங்குலி கூறியது:

இந்திய அணியில் நிதின் படேல் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், வீரர்களின் அன்றாட வாழ்க்கையில், ‘பிசியோ’ யோகேஷ் பார்மர் பங்கு அதிகமாக இருந்துள்ளது. தசைப்பிடிப்புகளை போக்க ஒவ்வொருவருக்கும் அவர் தான் ‘மசாஜ்’ செய்துள்ளார். இவருக்கு கொரோனா என்றதும் ஒட்டுமொத்த வீரர்களும் உடைந்து போயினர். 

தங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என மரண பயத்தில் இருந்தனர். இப்படி ஒரு சூழலில் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பது அவ்வளவு எளிதல்ல. அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அதற்கு மதிப்பு தர வேண்டும். இதனால் தான் ஐந்தாவது டெஸ்டில் விளையாட மறுத்தனர். இவ்விஷயத்தில் அவர்களை நாம் குற்றம் சொல்ல முடியாது. 

எங்களைப் பொறுத்தவரையில் 2007க்குப் பின் இங்கிலாந்து மண்ணில் முதன் முறையாக தொடரை வெல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தொடரை முழுமையாக முடிக்கவே விரும்புகிறோம். ஏனெனில் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் டெஸ்ட் போட்டி தான் சிறந்தது என நாங்கள் முடிவு செய்துள்ளோம். இவ்விஷயத்தில் சமாதானம் என்ற பேச்சிற்கே இடமில்லை. 

சுமூக தீர்வு

ரத்தான போட்டியை, தொடரின் ஐந்தாவது டெஸ்ட் என்ற அடிப்படையில் தான் நடத்த வேண்டும். என்னை பொறுத்தவரையில் ஐந்தாவது டெஸ்ட் சுமூகமான முறையில் ரத்து செய்யப்படும். அடுத்த வாரம் அங்கு செல்லும் போது இதுகுறித்து இறுதி முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு கங்குலி கூறினார். 

ரூ. 407 கோடி இழப்பு

ஐந்தாவது டெஸ்ட் ரத்தானதால் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுக்கு ரூ. 407 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாம். இதுகுறித்து கங்குலி கூறுகையில்,‘‘அடுத்த ஆண்டு இங்கிலாந்து செல்லும் போது கூடுதலாக ஒருநாள் அல்லது ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். இது ஒரு பிரச்னையே அல்ல. கொரோனா காரணமாக தொடரை ரத்து செய்வது கடந்த 18 மாதங்களில் வழக்கம் தான். தென் ஆப்ரிக்க தொடரை இந்தியா ரத்து செய்ததால், ரூ. 509 கோடி வரை எங்களுக்கு இழப்பு ஏற்பட்டது,’’ என்றார்.

தோனி தேர்வு ஏன்

கங்குலி கூறுகையில்,‘‘உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு உதவும் வகையில் தோனியை ஆலோசகராக நியமனம் செய்தோம். ‘டுவென்டி–20’ கிரிக்கெட்டில் இந்தியா, சென்னை அணிக்காக பல சாதனைகள் படைத்துள்ளார். தவிர 2013க்குப் பின் இந்தியா ஐ.சி.சி., தொடரில் ஒரு கோப்பையும் வெல்லவில்லை. இதுபோன்ற காரணங்களை மனதில் வைத்து தான் தோனி தேர்வானார்,’’ என்றார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: