மகளிர் கிரிக்கெட்டுக்குத் தலிபான்கள் தடை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் புதிய முடிவு | Australia will cancel Afghanistan test if Taliban bans women’s cricket

Spread the love

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்கள் பெண்களை கிரிக்கெட் விளையாடுவதற்குத் தடை செய்தால், ஆப்கன் ஆடவர் அணியுடன் கிரிக்கெட் விளையாடும் திட்டத்தை ரத்து செய்வோம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின், அந்நாட்டைத் தலிபான்கள் முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு இடைக்கால அரசு அமைக்கவும் முடிவு செய்து அமைச்சரவைப் பட்டியலை அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே பெண்களுக்கு உரிமைகள் முழுமையாக வழங்கப்படும் என அறிவித்திருந்த தலிபான் தீவிரவாதிகள், திடீரென பெண்கள் அரசியலில் பங்கேற்கத் தடை விதித்துள்ளனர். பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதித்து, கிரிக்கெட் விளையாடவும் அனுமதி மறுத்துள்ளனர்.

தலிபான்கள் தீவிரவாத அமைப்பின் கலாச்சாரப் பிரிவின் துணைத் தலைவர் அஹமத்துல்லாஹ் வாசிக் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பெண்கள் விளையாட்டில் பங்கேற்பது அவசியமில்லை என்று கருதுகிறோம். குறிப்பாக கிரிக்கெட் விளையாடுவது தேவையற்றது.

கிரிக்கெட்டில் பெண்கள் பங்கேற்றால் அவர்களின் உடல், முகம் ஆகியவை மூடப்படாது. அனைவரும் பார்க்கும் வகையில் உடல் உறுப்புகள் தெரியக்கூடும். இதுபோன்று பெண்கள் ஆடை அணிவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. இப்போதுள்ள சூழலில் பெண்கள் கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டும் விளையாடுவது பாதுகாப்பானது அல்ல” எனத் தெரிவித்தார்.

ஆனால், வரும் நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் ஆடவர் அணி ஆஸ்திரேலியாவில் சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. ஆப்கனில் மகளிர் கிரிக்கெட் விளையாடத் தலிபான்கள் தடை விதித்தால், ஆடவர் அணியுடன் விளையாடும் திட்டத்தை ரத்து செய்வோம் என ஆஸ்திேரலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “மகளிர் கிரிக்கெட் என்பது கிரிக்கெட் வாரியத்துக்கு ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதுதான் எங்கள் கண்ணோட்டம். எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் பெண்களும் கிரிக்கெட் விளையாட ஒவ்வொரு அளவிலும் ஆதரவு தருவோம்

ஆனால், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருப்தாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. பெண்கள் கிரிக்கெட்டைத் தலிபான்கள் தடை செய்தால், ஹோபர்ட்டில் நவம்பர் மாதம் ஆப்கன் ஆடவர் அணியுடன் ஆஸ்திரேலிய அணி, விளையாடும் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்வதைத் தவிர ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு வேறு வழியில்லை” எனத் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரிச்சார்ட் கோல்பெக் கூறுகையில், “ பெண்கள் கிரிக்கெட் விளையாட தலிபான்கள் தடை விதித்திருப்பது ஆழ்ந்த கவலையளிக்கிறது. பெண்கள் பங்கேற்பு இல்லாமல் எந்த விளையாட்டையும் ஏற்றுக்கொள்வது சாத்தியமற்றது.

சர்வதேச விளையாட்டு அமைப்பு, குறிப்பாக ஐசிசி அமைப்பு தலிபான்கள் நிலைப்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஐசிசி செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், “தலிபான்கள் பெண்கள் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்த செய்தி கவலையளிக்கிறது. இந்தத் தடையின் தாக்கம் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டு வளர்வதில் சிக்கல் ஏற்படுத்தும். இது தொடர்பாக அடுத்த ஐசிசி கூட்டத்தில் விவாதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: