அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், அண்மைய ஏவுகணைச் சோதனை குறித்து எடுத்த முதல் நடவடிக்கை தவறானது என வடகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் தற்காப்புக்கான ஏவுகணைச் சோதனைக்கு எதிராக விமர்சனம் செய்வதன் மூலம், திரு பைடன் வடகொரியாவிடம் பகைமை உணர்வை வெளிப்படுத்துவதாகவும் அது குறிப்பிட்டது.
வடகொரியா மேம்படுத்தப்பட்ட குறுந்தொலைவு ஏவுகணைகளை அண்மையில் சோதித்தது.
அச்சோதனை ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் விதிமுறைகளை மீறுவதாகத் திரு பைடன் சொன்னார். இருப்பினும் அவர் வடகொரியாவுடன் அரசதந்திர உறவு கொண்டிருக்கத் தயார் என்றும் தெரிவித்தார்.
தென்கொரியாவும் அமெரிக்காவும் கூட்டாக நவீன ஆயுதங்களுடன் நடத்திய ராணுவப்பயிற்சிகள் வடகொரியாவுக்கு அச்சுறுத்தலாய் இருந்ததாக வடகொரிய மூத்த அதிகாரி, ரி பியோங் சோல் (Ri Pyong Chol) குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலடியாகவே வடகொரிய ராணுவத்தின் ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டது என்றும் அவர் சொன்னார்.
வடகொரியாவுக்குத் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை உண்டு என்றும் அவர் சுட்டினார்.
பைடன் நிர்வாகம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வடகொரியாவைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் விளங்கும் ஒன்றாக முத்திரை குத்தப்பார்க்கிறது என்றும் திரு ரி குற்றஞ்சாட்டினார்.