புதுச்சேரியில் 60 மூட்டை போதைப் பாக்குகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இவற்றை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
புதுவையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், உரிய ரசீதுகள் இன்றி, பணம், நகை, பொருட்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இரவு பகலாகப் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றிரவு பாரதி வீதியில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அங்கு நின்றிருந்த லாரியில் இருந்து மூட்டைகள் இறக்கப்பட்டன. அதனைப் பறக்கும் படையினர் மற்றும் ஒதியஞ்சாலை போலீஸார் சோதனையிட்டனர். சோதனையில் அந்த மூட்டைகளில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதைப் பாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புதுவையில் ஏற்கெனவே போதைப் பாக்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கள்ளத்தனமாக போதைப் பாக்குகள் விற்பனை செய்ய இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஓசூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநரைக் கைது செய்த போலீஸார் 60 மூட்டை போதைப் பாக்குகளைப் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.