புதுச்சேரி அருகே கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை எடுத்தபோது வெடித்ததால் பெண் படுகாயம் | Woman injured in bomb blast near Pondicherry

Spread the love

புதுச்சேரி வில்லியனூர் அருகே கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை எடுத்தபோது தவறி விழுந்து வெடித்ததால் பெண் படுகாயமடைந்தார்.

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் வி.மணவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம், இறந்துவிட்டார். இவரது மனைவி ஆனந்தி (50). இவர்களுக்கு ராஜசேகர் என்ற மகனும், சந்தியா என்ற மகளும் உள்ளனர். மகள் திருமணமாகிச் சென்றுவிட்ட நிலையில், மகன் ராஜசேகருடன் ஆனந்தி வசித்து வருகிறார்.

கூலி வேலை செய்து வரும் மகன் ராஜசேகர் வேலைக்குச் செல்லும் சமையத்தில், ஆனந்தி மட்டும் வீட்டில் தனியாக இருப்பது வழக்கம். அதுபோல் இன்று (பிப். 27) தனியாக இருந்த ஆனந்தி, வீட்டின் அருகே உள்ள இடத்துக்கு இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள முட்புதரின் கீழ் நூல்கண்டு வடிவில் பெரிய உருளையான மர்மப் பொருள் கிடந்துள்ளது.

அதனை ஆனந்தி கையில் எடுத்தபோது தவறிக் கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் ஆனந்தியின் இடது கை, கால், கண் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் படுகாயத்துடன் இருந்த ஆனந்தியை மீட்டு, சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்துத் தகவலறிந்த வில்லியனூர் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். தொடர்ந்து அப்பகுதி முழுவதும் சோதனையிலும் ஈடுபட்டனர்.

இதுபற்றி போலீஸார் தரப்பில் கேட்டபோது, ”வெடித்த பொருள் நாட்டு வெடிகுண்டு என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் வெடிகுண்டைத் தயாரித்த மர்ம நபர்கள் அது முழுமை பெறாத நிலையில், தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அதனைக் கண்ட ஆனந்தி எடுத்துப் பார்த்தபோது திடீரென வெடித்துள்ளது” எனத் தெரிவித்தனர்.

தொடர்ந்து நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *