புதிய கேப்டன் இந்துமதி: இந்திய கால்பந்து அணிக்கு

Spread the love


புதுடில்லி: இந்திய பெண்கள் கால்பந்து அணியின் புதிய கேப்டனாக தமிழகத்தின் இந்துமதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில், அடுத்த ஆண்டு (ஜன. 20 – பிப். 6) பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக சமீபத்தில் துருக்கி சென்ற இந்திய பெண்கள் அணி, செர்பியா, ரஷ்யா, உக்ரைன் அணிகளுக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்றது. இந்நிலையில் உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள இந்திய அணி, உஸ்பெகிஸ்தான் (ஏப். 5), பெலாரஸ் (ஏப். 8) அணிகளுக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்கிறது. இப்போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக தமிழக மத்தியகள வீராங்கனை இந்துமதி 26, நியமிக்கப்பட்டுள்ளார். கடலுாரை சேர்ந்த இவர், கடந்த 2014ல் இந்திய அணியில் அறிமுகமானார். இதுவரை 34 போட்டியில், 12 கோல் அடித்துள்ளார். தமிழக காவல் துறையில் ‘சப்–இன்ஸ்பெக்டராக’ பணியாற்றி வரும் இவர், கொரோனா ஊரடங்கின் போது சென்னை, அண்ணா நகர் பகுதியில் சிறப்பாக செயல்பட்டார்.

இதுகுறித்து இந்துமதி கூறுகையில், ‘‘கொரோனா ஊரடங்கின் போது பாதுகாப்பான முறையில் பயிற்சி முகாமில் பங்கேற்றோம். சமீபத்தில் துருக்கியில் மூன்று நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடினோம். தற்போது உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் எதிராக விளையாட உள்ளோம். இப்போட்டிகளில் கிடைக்கும் அனுபவம், ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட உதவும் என்று நம்புகிறேன். முதன்முறையாக இந்திய அணியை வழிநடத்த இருப்பதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். இது எளிதானதல்ல. முழுத்திறமையை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு போராடுவேன்,’’ என்றார்.

Advertisement

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *