பிரதமர் மஹிந்த  நாட்டிற்காக ஒன்றுமே செய்ய வில்லையா ? – ஆளும் கட்சியினரிடம் எதிர்க்கட்சி கேள்வி

Spread the love

Published by T. Saranya on 2021-07-09 16:58:55

(நா.தனுஜா)

மகிந்த ராஜபக்ஷவே போரை முடிவிற்குக் கொண்டுவந்ததாகவும் அவரே நாட்டின் எதிர்காலம் என்றும் கூறிவந்த ஆளுந்தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது கோட்டாபய ராஜபக்ஷவே போரை முடிவிற்குக்கொண்டு வந்ததாகவும் பசில் ராஜபக்ஷவினால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை ,சீரமைக்கமுடியும் என்றும் கூறுகின்றார்கள். அவ்வாறெனின் மகிந்த ராஜபக்ஷ நாட்டிற்காக என்ன செய்தார்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை இலங்கையின் பிறப்புச்சான்றிதழைப் பெற்றுக்கொடுத்த மகிந்த ராஜபக்ஷ நாட்டின் தந்தையானதைப்போன்று, அமெரிக்காவின் பிறப்புச்சான்றிதழைப் பெற்றுக்கொடுக்கும் நிலையிலிருக்கும் பசில் ராஜபக்ஷ ‘நாட்டின் தந்தையாக’ மாறுவது அவ்வளவு இலகுவான விடயமல்ல என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நாட்டின் சட்டத்தின் ஆட்சி முழுமையாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, ஆட்சியாளர்களுக்கு ஏற்றவகையில் அதனைக் கையாளக்கூடிய நிலையொன்று தோற்றம்பெற்றுள்ளமையை தற்போது வெளிப்படையாகவே அவதானிக்கமுடிகின்றது. பொலிஸாரைப் பயன்படுத்தி தனிமைப்படுத்தல் சட்டத்தை அரசாங்கம் தமக்கேற்றவாறு பயன்படுத்த முனைவதையும் நேற்று (நேற்று முன்தினம்) தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிந்தது.

தனிமைப்படுத்தல் சட்டத்தின் ஊடாக அரசியல் செயற்பாட்டாளர்கள், அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் தமது அபிப்பிராயத்தை வெளியிடுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் கட்டுப்படுத்துவதற்கும் அடக்குவதற்கும் அவசியமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.

நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்கான ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுத் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி இந்தச்சட்டத்தை அரசாங்கம் ஒவ்வொரு தரப்பினருக்கும் வெவ்வேறு விதத்தில் நடைமுறைப்படுத்திவருகின்றது. பாராளுமன்றத்தில் வைத்து உரிய விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோதிலும், அவரிடம் இதற்கான பதில் இல்லை. இதற்கு முற்றிலும் தொடர்பற்ற விடயங்களையே அவர் கூறுகின்றார்.

பொதுமக்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கும் விமர்சனங்களை வெளியிடுவதற்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கும் பாதிக்கப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்நிற்பதற்கும் கடந்த அரசாங்கத்தில் வழங்கப்பட்டிருந்த சுதந்திரத்தைத் தற்போதைய அரசாங்கம் முழுமையாகப் பறிக்கமுற்படுகின்றது. நாட்டின் ஜனநாயகத்தையும் மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும். அவ்வாறில்லாவிட்டால், எதிர்வரும் காலங்களில் நாட்டுமக்களின் உரிமைகளுக்காகப் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் வீதிகளில் இறங்கிப்போராடத் தயாராக இருக்கின்றோம். எனவே தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தி, தமக்கு சவாலாக இருக்கின்ற தரப்பினரை அடக்குவதற்கும் தனிமைப்படுத்தலுக்காக அவர்களைத் தூரப்பிரதேசங்களுக்கு அழைத்துச்செல்வதையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும்.

மகாசங்கத்தேரர்களின் ஆசியுடனும் ஆதரவுடனுமே இந்த அரசாங்கம் ஆட்சிபீடமேறியது. எமது நாட்டை சரியான பாதையில் கொண்டுசெல்வதற்கு கோட்டாபய ராஜபக்ஷவைப்போன்ற ஆட்சியாளரே அவசியம் என்று மகாசங்கத்தேரர்கள் கூறினார்கள். ஆனால் இன்று தேரர்களின் கால்களைப்பிடித்துத் தூக்கிச்செல்லும் நிலைக்கு அரசாங்கம் கீழிறங்கியிருக்கின்றது. தேரர்களை அவ்வாறு மரியாதையின்றி நடத்தியமைக்குக் காரணம் என்னவென்று மகாசங்கத்திற்கு அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். அதுமாத்திரமன்றி தேரர்களுக்கு உரிய கௌவரத்தை வழங்கிச் செயற்படுமாறு அனைத்து பௌத்தமக்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போது பாராளுமன்றத்தில் உள்ள தலைவர்கள், போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கக்கூடிய அனைத்து மரியாதைகளையும் கௌரவத்தையும் வழங்கினார்கள். மகிந்த ராஜபக்ஷவே நாட்டின் எதிர்காலம் என்றுகூறி, அதன்மூலம் பாராளுமன்றம் வந்தவர்களும் இருக்கின்றார்கள். ஆனால் இப்போது போரை முடிவிற்குக் கொண்டுவந்தவர் என்று யாரும் மகிந்த ராஜபக்ஷவின் பெயரைக்கூறவில்லை. மாறாக கோட்டாபய ராஜபக்ஷவே போரை முடிவிற்குக் கொண்டுவந்தார் என்றும் நான்கு மூளைகள் உள்ள பசில் ராஜபக்ஷவினாலேயே நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கமுடியும் என்றுமே பாராளுமன்றத்தில் உள்ள ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் கூறுகின்றார்கள். அவ்வாறெனின் மகிந்த ராஜபக்ஷ நாட்டிற்காக என்ன செய்திருக்கின்றார்? மகிந்த ராஜபக்ஷ ‘நாட்டின் தந்தை’ ஆகியதைப்போன்று பசில் ராஜபக்ஷ ‘நாட்டின் தந்தையாக’ மாறுவது அவ்வளவு இலகுவான விடயமல்ல என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். மகிந்த ராஜபக்ஷ நாட்டின் தந்தையாக மாறி, அனைவருக்கும் இலங்கையின் பிறப்புச்சான்றிதழைப் பெற்றுக்கொடுத்தார். ஆனால் பசில் நாட்டின் தந்தையானால், அமெரிக்காவின் பிறப்புச்சான்றிதழையே பெற்றுக்கொடுப்பார்.

அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளைப் பார்க்கும்போது, நாம் ஒரேயொரு விடயம் தொடர்பில் நாட்டுமக்களுக்கு எச்சரிக்கைவிடுக்க விரும்புகின்றோம்.

பசில் ராஜபக்ஷ நாட்டுமக்களுக்கு எவ்விதத்திலும் பொறுப்புக்கூறாமல், நாட்டின் பொருளாதாரத்தைத் தற்போதுள்ள நிலையை விடவும் மோசமாக்கி, இறுதியில் நாட்டைவிட்டுச்செல்லும்போது யாராலும் எந்தவொரு கேள்வியும் எழுப்பமுடியாத நிலையே காணப்படும் என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: