பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினாலே என் ரத்தம் கொதித்துவிடும்: நினைவுகளைப் பகிர்ந்த வீரேந்திர சேவாக் | Afridi, Akhtar, Yousuf welcomed me by abusing a lot: Sehwag recalls ODI debut

Spread the love


பாகிஸ்தான் அணிக்கு எதிராக நான் விளையாட வேண்டும் என்றாலே என் ரத்தம் கொதித்துவிடும். அதனால்தான் அந்த அணிக்கு எதிராக என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றாலே உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படும் போட்டியாகும். இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் களத்தில் வசைபாடுவதும், மோதிக் கொள்வதும் என மைதானத்தில் அனல் பறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும். அதில் இருநாட்டு வீரர்களுக்கும் நல்லவிதமான அனுபவங்களும், கசப்பான அனுபவங்களும் கிடைத்திருக்கும்.

அந்த வகையில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை, நினைவுகளை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் சேனல் ஒன்றுக்குப் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது:

”1999-ம் ஆண்டு மொஹாலியில் நடந்த பெப்சி கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்தான் நான் அறிமுகமானேன். அப்போது இந்திய அணிக்கு அஜய் ஜடேஜா கேப்டனாக இருந்தார். நான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும்போது எனக்கு 21 வயதாகி இருந்தது.

நான் களத்துக்குள் அறிமுகமானபோது, எனக்குக் கிடைத்த வரவேற்பை மறக்க முடியாது. அப்போது பாகிஸ்தான் அணியில் இருந்த ஷாகித் அப்ரிடி, ஷோயப் அக்தர், முகமது யூசுப் எனப் பலரும் மோசமான வார்த்தைகளைக் கூறி எனக்கு வரவேற்பு அளித்தனர். அதுபோன்ற மோசமான வார்த்தைகளை அதற்கு முன் நான் காதால்கூட கேட்டதில்லை.

எனக்கு பஞ்சாப் மொழி ஓரளவுக்குத் தெரியும் என்பதால், பாகிஸ்தான் வீரர்கள் என்னை எந்தமாதிரியான மோசமான வார்த்தைகளால் திட்டினார்கள், பேசினார்கள் என என்னால் இன்னும் உணரமுடிகிறது.

அது எனக்கு முதல் போட்டி என்பதால், எனக்குள் பதற்றமாக இருந்தது. ஏறக்குறைய 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரசிகர்கள் இருந்தனர். மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் முன்பு நான் அப்போதுதான் முதல் முறையாக விளையாடினேன். என்னால் அந்தப் போட்டியில் சரியாக விளையாட முடியவில்லை.

ஆனால், அதன்பின் பாகிஸ்தானுக்குச் சென்றபின் அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுத்தேன். 2004-ம் ஆண்டு பாகிஸ்தான் பயணத்தில் முல்தானில் நடந்த டெஸ்ட் போட்டியில் முச்சதத்தைப் பதிவு செய்தேன்.

பாகிஸ்தான் தொடரை முடித்துவிட்டுப் பேருந்தில் வந்தபோது, அவர்கள் என்னை மோசமான வார்த்தைகளால் திட்டியதற்கும், பேசியதற்கும் என்னுடைய பேட்டிங்கால் சரியாகப் பழிவாங்கிவிட்டதாகவே உணர்ந்தேன். எப்போதெல்லாம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினாலும் இயல்பாகவே என்னுடைய ரத்தம் கொதித்துவிடும், அதனால்தான் அந்த அணிக்கு எதிராக என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது. சராசரியும் அதிகமாக வைக்க முடிந்தது”.

இவ்வாறு சேவாக் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சேவாக் 1,276 ரன்கள் குவித்து 91.14 சராசரி வைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 31 போட்டிகளில் 1,071 ரன்கள் சேர்த்து 34 சராசரி வைத்துள்ளார். இதில் 2 சதங்கள், 6 அரை சதங்கள் அடங்கும்.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: