பவர் ப்ளே-2 : அஷ்வினை ஏன் விலக்குகிறார் விராட் கோலி… தலைசிறந்த ஸ்பின்னருக்கு நிரந்தர இடம் இல்லையா? | why ravichandran ashwin is not getting his due credit in virat kohli’s indian team

Spread the love


அஷ்வினை இந்திய வீரர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றி பெய்ன் சொன்னது உண்மையா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அஷ்வின் ரொம்பவும் முசுடானவர் ; பிறருடன் நட்பாக இருக்க மாட்டார் என்ற ஒரு பிம்பம் பொதுவெளியில் எப்படி உருவானது என்பதுதான் இங்கு சிந்தித்துப் பார்க்க வேண்டியது.

அஷ்வின், சச்சின்

அஷ்வின், சச்சின்

சுழற்பந்து வீச்சாளர் யார்?

உண்மையில் அஷ்வின் எப்படிப்பட்ட ஒரு கிரிக்கெட்டர்? இதற்கான பதிலை தேடுவதற்கு முன்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கான அடிப்படை குணாதிசயங்களை பார்த்து விடுவது நல்லது. வேகப்பந்து வீச்சாளர்கள் தறிகெட்டு ஓடும் குதிரைகள் என்றால் இவர்கள் புத்திக் கூர்மையுள்ள யானைகள். இவர்களுக்கு வேகம் கிடையாது. ஆனால் அதனை ஈடுகட்ட ஆண்டவன் அவர்களின் கைகளில் ஒரு மந்திரக் கோலை கொடுத்துள்ளான். அதை வைத்து Drift, Dip, Flight என நினைத்ததை எல்லாம் சாதித்துக் கொள்கிறார்கள். பொதுவாக யார் சுழற்பந்து வீச்சை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள்?

ருத்திராட்ச மாலை போல எந்நேரமும் பந்தை விரலிடுக்கில் வைத்து சுழற்றிக் கொண்டிருக்க பொறுமை உள்ளவராக இருக்க வேண்டும். பூப்போல நாலு எட்டு எடுத்து வைத்து பந்து வீசுவதிலும் ஒரு சாகசம் உண்டு என நம்புகிறவராக இருக்க வேண்டும். கொஞ்சமாவது கிரியேட்டிவிட்டியும் கற்பனை வளமும் கொண்டவர்கள் தானே இதனை விரும்பி ஏற்றுக் கொள்ள முடியும்! அதனால் தான் சுழற்பந்து வீச்சாளர்களில் பெரும்பான்மையினர் அகாடமிக் பின்புலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நல்ல கதை சொல்லிகள் ; ரிச்சி பெனாட் தொடங்கி ஷேன் வார்ன் வரை வர்ணனையில் ஜொலிக்கும் சுழலர்கள் அதிகம். அவர்களில் சில நல்ல மீடியாக்காரர்களும் உண்டு. ஆஸ்லி மாலெட் போல. அவர்களுடைய உரையாடல்களில் வெளிப்படுவது எல்லாம் cunning, deception, strategy போன்ற வார்த்தைகள் தான். சுழற்பந்து வீச்சாளர்களை கண்டால் ஏன் எல்லாரும் தெறித்து ஓடுகிறார்கள் என்று இப்போது புரிகிறதா?

இந்தியாவின் சுழல் பாரம்பரியம்!

சரி நாம் இப்போது அஷ்வினுக்கு வருவோம். மேற்சொன்ன எல்லா பாக்ஸ்களையும் அஷ்வின் டிக் செய்வதை பார்க்கலாம். சரி இந்திய சுழற்பந்து வீச்சு பாரம்பரியத்தில் அஷ்வினின் பாத்திரம் என்ன? இந்திய சுழலர்களை ஒரு வசதிக்காக இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். இது ஒரு வசதிக்கான ஏற்பாடு மட்டும்தான். இந்திய சுழல் ஜாம்பவான்களில் ஒரு தரப்பினர் மிகவும் டாம்பீகம் கொண்டவர்கள். தங்களுடைய திறமை மீது அவர்களுக்கு ஒரு மிதமிஞ்சிய நம்பிக்கை உண்டு. இவர்களைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சு என்பது தீட்டுப்பட்டு விடக்கூடாத ஒரு சமாச்சாரம்.

‘’பந்தை ஃபிளாட்டாக வீசி விக்கெட் எடுப்பதை விட பந்தை flight செய்து பவுண்டரிக்கு விட்டுக் கொடுப்பது மேலானது’’ என பிஷன் சிங் பேடி கர்ஜித்தை மறக்க முடியுமா? இவர்கள் எல்லாரும் நிறுவனங்கள் மீதான தங்களுடைய அதிருப்தியை வெளிப்படையாகப் போட்டு உடைப்பவர்கள். இன்னும் சொல்லப்போனால் இவர்கள் லட்சியவாதிகள். அப்பாவின் இறுதி ஆசையை நிறைவேற்ற ஐந்து வருடங்கள் கிரிக்கெட்டை ஒதுக்கிவிட்டு இன்ஜினீயரிங் படிக்க சென்றவர் எரப்பள்ளி பிரசன்னா.

அஷ்வினின் வழி தனி வழி!

இன்னொரு தரப்பினர் மிகவும் கொண்டாட்டம் நிறைந்தவர்கள். எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார் போல சாதனைகளை செய்ய முடியாதவர்கள். தங்களுடைய போதாமைகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்குபவர்கள். அளவுக்கதிகமாக தூஸ்ராவை உபயோகித்து தன்னுடைய ரிதத்தை கெடுத்துக் கொண்ட ஹர்பஜன் சிங் ‘கிணத்தைக் காணோம் கிணத்தைக் காணோம்’ என இன்றுவரைக்கும் பொருமிக் கொண்டு இருப்பது நமக்கெல்லாம் தெரிந்த கதைதான். அஷ்வினின் சிறப்பு என்ன தெரியுமா? அவர் இந்த இரண்டு தரப்பினரிடம் இருந்தும் கொஞ்சம் தள்ளியே நிற்கிறார்.

பேடி, பிரசன்னாவை போல அஷ்வினும் ஒரு கிளாசிக்கல் சுழற்பந்து வீச்சாளர்தான். ஆனால் Flight செய்து தான் விக்கெட் எடுப்பேன் என்றெல்லாம் அவர் அடம் பிடிப்பதில்லை. தூஸ்ரா பந்து வீச்சை அருவருப்பாக கருதும் அளவுக்கு அவர் ஒரு லட்சியவாதி. ஆனால், பேட்ஸ்மேன் எல்லை தாண்டும் போது மன்கட் முறையில் ரன் அவுட் செய்ய அவர் தயங்குவதில்லை. ஆரம்ப காலத்தில் தன்னுடைய ரெக்கார்டை காரணம் காட்டி வெளிநாட்டுத் தொடர்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டபோது அஷ்வின் நிலைகுலைந்து போனது உண்மைதான். ஆனால் அதன் காரணமாக அவர் ஹர்பஜன் போல ஒப்பாரி வைக்கவோ நிறுவனங்களின் மீது அதிருப்தியை காட்டவோ செய்யவில்லை. மாறாக தன்னுடைய Analytical thinking மூலம் தன்னுடைய குறைகளை எல்லாம் களைந்து மீண்டு வந்தார்.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: