பவர் ப்ளே – 1: வாத்தியாரே… அப்ப ஜோ ரூட் பெரிய ஆட்டக்காரன் இல்லையா?! | Powerplay Cricket Series: The career graph and performance analysis of Joe Root

Spread the love


ரூட்டை தவிர்த்து Fab 4-ல் இருக்கும் மற்ற மூவருக்கும் ரசிகர்களின் நாயக வழிபாட்டுக்கு உரிய ஏதோவொரு குணாதிசயம் உள்ளது. அது கோலியிடம் ஆக்ரோஷமாகவும், வில்லியம்சனிடம் துறவு நிலையாகவும், ஸ்மித்திடம் போர்க்குணமாகவும் வெளிப்படுகிறது. ஆனால் ரூட்டிடம் இதுபோல ஒன்றைக் குறிப்பிட்டு சொல்ல முடியமா?

அவருடைய தாடியற்ற முகத்தையும் இங்கு நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். கோலியின் தாடியைப் பார்த்தால் masculinity தெறிக்கும். வில்லியம்சனின் தாடி சொல்லும் சேதி என்பது வேறு; இயேசு நாதரைப் போல. ஸ்மித்துக்கு தாடி இல்லையென்றாலும் அவரை யாரும் ஒரு பாலகன் என்று சொல்ல மாட்டார்கள். ஒரு கிரிக்கெட் வீரரின் நடையும் அவரைப் பற்றிய கருத்துருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. கோலியின் நடையில் ஒரு swagger இருக்கும் ; விவியன் ரிச்சர்ட்ஸ் போல. வில்லியம்சன் நடையில் ஒரு உறுதித்தன்மையை பார்க்க முடியும்.

Fab 4 -ல் மோசமாக நடப்பவர் யார் என்பதில் ஸ்மித்துக்கும் ரூட்டுக்கும் இடையேதான் போட்டி. ஸ்மித்துக்கு இருக்கும் ஆன்ட்டி ஹீரோ இமேஜ் அவருடைய தாறுமாறான நடைக்கு ஒரு புதிய அர்த்தத்தை கொடுத்து விடுகிறது. ஆனால் ரூட்டின் தத்தக்கா பித்தக்கா நடையோ நம் கண்களுக்கு துருத்திக் கொண்டு தெரிகிறது.

“இவையெல்லாம் Cod Psychology” என திட்டினாலும் பரவாயில்லை. உண்மையை சொல்லித் தானே தீரவேண்டும். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு ரூட்டுக்கு கிடைப்பதற்கு தடையாக நான்கு முக்கியமான பிரச்னைகள் அவர் முன் நிற்கின்றன. முதலாவதாக அவருடைய அடையாளச் சிக்கல்.

ஜோ ரூட் 1990-ல் தெற்கு யார்க்ஷயர் கவுன்ட்டியைச் சேர்ந்த ஷெபீல்ட் (Sheffield) இல் பிறந்தார். நிற்க… இது போல பிறந்த வருடம், குடும்ப பின்னணி உள்ளிட்ட தகவல்களை அறிவார்ந்த வாசகர்களான உங்களுக்கு தருவதில் துளியும் விருப்பமில்லை.

ஜோ ரூட், ஜாஸ் பட்லர்

ஜோ ரூட், ஜாஸ் பட்லர்

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் போன்ற அசாதாரண வீரர்களைப் பற்றி எழுதும் போது வேண்டுமானால் ஒரு நிமித்தத்திற்கு (cause) இந்த சமாசாரங்கள் எல்லாம் தேவைப்படலாம். நாம் இப்போது ரூட்டை பற்றித்தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரூட் கிரிக்கெட் மீது பற்று கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பாரம்பரியமிக்க யார்க்ஷர் அணியில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியவர். நமக்கு இதுவரைக்கும் போதுமென நினைக்கிறேன்.

குடியிருந்த கோயில் எம்ஜிஆர் போல ”நான் யார்… நான் யார்” என ரூட் அடையாளச் சிக்கலில் சிக்கித் தவிப்பதற்கு இந்த யார்க்ஷைரும் ஒரு காரணம். ரஞ்சி போட்டிகளில் இந்தியாவுக்கு மும்பை அணி போல கவுன்ட்டி போட்டிகளில் இங்கிலாந்துக்கு யார்க்ஷையர் அணி. தேவையில்லாமல் ஷாட் ஆடி விக்கெட்டை பறிகொடுப்பது என்பது உயிரைப் பறி கொடுப்பதற்கு சமானம் என நினைக்கும் ஒரு அணி அது. ஜெஃப்ரி பாய்காட், சர் ஹட்டன் போன்ற orthodox வீரர்களே அதன் அடையாளம். ஆனால் ரூட் சிறுவயதில் இருந்தே டெட் டெக்ஸ்டர் ( Ted Dexter ) பாணியிலான ஒரு ஸ்ட்ரோக் மேக்கர்.

இங்கிலாந்துக்கு ஆடத் தேர்வானதும் ரூட் முதன் முதலாக கண்ணாடியின் எதிரே நின்று அந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டார். “இப்போது நான் யார் போல ஆடவேண்டும் : ஜெஃப்ரி பாய்காட் போலவா அல்லது டெட் டெக்ஸ்டர் போலவா?”



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: