‘பண்டாரத்தி புராணம்’ பாடல் சர்ச்சை – இயக்குனர் அறிக்கை மூலம் தீர்வு

Spread the love

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், யுகபாரதி பாடல் வரிகளில் வெளியான ‘பண்டாரத்தி புராணம் ..’ எனத் தொடங்கும் பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்துவதாக சர்ச்சை எழுந்தது. படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் இதற்கு அறிக்கை மூலம் வருத்தத்தையும் மாற்று வார்த்தையையும் வெளியிட்டிருக்கிறார்.

‘பண்டாரத்தி புராணம்..’ என்ற பாடலில் இடம்பெறும் ‘பண்டாரத்தி’ என்ற சொல் குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்துவதாகவும், இதனால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மதுரையில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் கர்ணன் படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

அவர் அதில் தெரிவித்திருப்பதாவது,

‘ கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும், நம்பிக்கையும் எனக்கு பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குனரான என் மீது நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும், மரியாதையும் நான் சினிமா என்னும் மாய கலையை எவ்வளவு பொறுப்போடு அணுகவேண்டும் என்பதை எமக்கு கற்றுக் கொடுக்கிறது. 

அத்தகைய பொறுப்புணர்வுடனும், கலைத்தன்மையோடும் தான் நான் என் காட்சிப் படிமங்களை பெரும் சிரத்தையுடன் உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கப்பட்டதுதான்.

சொந்த அத்தையாக… அக்காவாக.. ஆச்சியாக.. பெரியம்மாவாக.. என் நிலத்தோடு என் ரத்தத்தோடு கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையில் கூலாங்கற்களாக சிதறவிட்டு காட்சிப்படுத்தினேன். ஆனால் நம் சமூக அடுக்கு முறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்து கொள்ள முடியாததாகவும், விலக முடியாததாகவும் இருக்கிறது. 

அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும், வருத்தத்தையும், கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக, இனி பண்டாரத்தியை ‘மஞ்சனத்தி’ என்று அழைக்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்.  தேவதைகள் எந்த பெயரில் அழைக்கப்பட்டால் என்ன…

பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்து விடப் போகிறதா என்ன..?!  இனி ஏமராஜாவின் மாட விளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான். கர்ணன் ஆடுவான். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.’ என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதன்மூலம் ‘பண்டாரத்தி..’ என்ற சொல் இனிமேல் ‘மஞ்சனத்தி..’ என மாற்று வார்த்தைகளால் குறிப்பிடப்படும். இதனை அடுத்து ‘பண்டாரத்தி ..’பாடல் வரிக்கான சர்ச்சை முடிவுக்கு வந்து விட்டதாகவே தெரிய வருகிறது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: