‘நெருப்பாக’ பும்ரா… சிறப்பாக இந்தியா * ஓவலில் இமாலய வெற்றி

Spread the love

லண்டன்: ஓவல் டெஸ்டில் பும்ரா, உமேஷ் உட்பட பவுலர்கள் அசத்த, இந்திய அணி 157 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. தொடரில் 2–1 என முன்னிலை பெற்றது. 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்ட் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றிருந்தன. நான்காவது டெஸ்ட் லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 191, இங்கிலாந்து 290 ரன்கள் எடுத்தன.

இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 466 ரன் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் 368 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இங்கிலாந்து அணி, நான்காவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன் எடுத்திருந்தது. பர்ன்ஸ் (31), ஹசீப் ஹமீது (43) அவுட்டாகாமல் இருந்தனர்.

கைகொடுத்த ஷர்துல் 

நேற்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. 90 ஓவர்களில் 291 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. இருவரும் இந்திய பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டனர். இந்த ஜோடியை பிரிக்க கோஹ்லி எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. கடைசியாக ஷர்துல் தாகூரை அழைத்தார் கோஹ்லி. இவரது 2வது பந்தில் பவுண்டரி அடித்த பர்ன்ஸ் (50), டெஸ்ட் அரங்கில் 11 வது அரைசதம் எட்டினார். அடுத்த பந்தில் ரிஷாப் பன்டிடம் ‘கேட்ச்’ கொடுக்க, இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

ஜடேஜா நம்பிக்கை

மறுபக்கம் அரைசதம் அடித்த ஹசீப், 55 ரன்னில் ஜடேஜா பந்தில் கொடுத்த எளிய ‘கேட்சை’, சிராஜ் கோட்டை விட்டார். மதிய உணவு இடைவேளை வரை வீசப்பட்ட 27 ஓவரில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 54 ரன் எடுக்க, இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதன் பின் திடீரென எழுச்சி பெற்ற ஜடேஜா, ஹசீப்பை (63) போல்டாக்கினார். 

பும்ரா ‘புயல்’

மறுபக்கம் ‘வேகத்தில்’ மிரட்டத் துவங்கினார் பும்ரா. முதலில் போப்பை (2) போல்டாக்கினார். தனது அடுத்த ஓவரில் வீசிய அசத்தல் ‘யார்க்கரில்’ பேர்ஸ்டோவையும் (0) போல்டாக்கி இந்திய ரசிகர்களுக்கு ‘இனிப்பு’ கொடுத்தார். ஜடேஜா தன் பங்கிற்கு மொயீன் அலியை ‘டக்’ அவுட்டாக்க, இங்கிலாந்து 147/6 என்ற நிலைக்கு சென்றது.

மீண்டும் கலக்கல்

கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டும் உள்ள நிலையில் மீதமுள்ள 55 ஓவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டது. ஜோ ரூட், வோக்ஸ் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 80 ஓவருக்குப் பின் புதிய பந்து எடுக்க வாய்ப்பு இருந்தது. இருப்பினும் இந்திய பவுலர்கள் பழைய பந்தில் நன்றாக ‘ரிவிர்ஸ் சுவிங்’ செய்வர் என்பதால், மீண்டும் ஷர்துலை அழைத்தார் கோஹ்லி. 

உமேஷ் மிரட்டல்

இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. முதல் பந்தில் அபாயகரமான ஜோ ரூட்டை (36) போல்டாக்க, ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் வந்த உமேஷ் யாதவ், தனது முதல் பந்தில் வோக்சை (18) வெளியேற்றினார். மீண்டும் மிரட்டிய இவரது ‘வேகத்தில்’ ஓவர்டன் (10), ஆண்டர்சன் (2) சிக்க, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 210 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ராபின்சன் (10) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3, பும்ரா, ஷர்துல் தாகூர், ஜடேஜா தலா 2 விக்கெட் சாய்த்தனர். டெஸ்ட் தொடரில் இந்தியா 2–1 என முன்னிலை பெற்றது. 

 

பும்ரா ‘100

நேற்று போப்பை போல்டாக்கிய பும்ரா, டெஸ்ட் அரங்கில் அதி வேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆனார். இவர் 24 டெஸ்டில் 101 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் கபில்தேவ் சாதனையை (25 டெஸ்ட்) தகர்த்தார். முகமது ஷமி (29), இர்பான் பதான் (29), ஸ்ரீநாத் (30), இஷாந்த் சர்மா (33), கார்சன் காவ்ரி (36), ஜாகிர் கான் (37), உமேஷ் யாதவ் (37) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

அன்னிய மண்ணில் அதிகம்

அன்னிய மண்ணில் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக வலம் வருகிறார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவர், ஆஸ்திரேலியாவில் 32, இங்கிலாந்தில் 32, தென் ஆப்ரிக்காவில் 14, விண்டீசில் 13, நியூசிலாந்தில் 6 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். இந்தியாவில் 4 விக்கெட் மட்டும் வீழ்த்தினார்.

 

6 ரன், 4 விக்.,

இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 141 ரன்னுக்கு 2 விக்கெட் என வலுவான நிலையில் இருந்தது. அடுத்து 6 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 147/6 என்ற நிலைக்கு சென்றது.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: