நூற்றாண்டு ஏக்கத்தை தீர்த்த தங்கமங்கை… இந்தியாவில் இனி வீசப்போவது அவனியின் அலை!

Spread the love

அவனி லெகரா. இந்த நொடியில் ஒட்டுமொத்த இந்தியாவும் உச்சரித்துக் கொண்டிருக்கும் பெயர் இதுதான். நூற்றாண்டு கடந்த ஒலிம்பிக்ஸ் மற்றும் அரைநூற்றாண்டு கடந்த பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியா சார்பில் இதுவரை ஒரு வீராங்கனை கூட தங்கப்பதக்கம் வென்றிருக்கவில்லை. ஆனால், இது நேற்று வரை மட்டுமே. இன்று அந்த நூற்றாண்டு ஏக்கத்தை போக்கி தங்க மங்கையாக உயர்ந்து 130 கோடி உதடுகளையும் அவனி என்ற பெயரை உச்சரிக்க வைத்திருக்கிறார் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை.

அவனி ஒரு 2கே கிட். 2001-ல் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் பிறந்தவர். 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸில் இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரரான அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றிருந்தார். இந்தியா சார்பில் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையை பெற்றிருந்தார். அபினவ் பிந்த்ராவின் அந்த வெற்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே புதிய ஊக்கத்தை கொடுத்தது. பல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை முழுமனதுடன் விளையாட்டுகளில் ஈடுபட அனுமதித்தனர். சச்சினை மட்டுமே இன்ஸ்பிரேஷனாக கொண்டிருந்த குழந்தைகள் மனதில் அபினவ் பிந்த்ராவுக்கும் ஒரு இடம் கிடைத்தது. பல இளம் கைகள் கனவுகளோடு துப்பாக்கி ஏந்தின. அந்த அபினவ் பிந்த்ரா அலையில் சிக்கி சிகரம் தொட்டவரே அவனி லெகரா. இடையில் பல கடுமையான சிரமங்களை எதிர்கொண்டார்.

2012-ல் ஒரு கார் விபத்து. அவனிக்கு முதுகெலும்பில் பலத்த அடி. எழுந்து நடக்கவே முடியாத நிலை. இடுப்புக்கு கீழுள்ள பகுதிகள் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கை விரித்தனர்.

அவனி லெகரா

11 வயதில் பட்டாம்பூச்சியாக பறந்து கொண்டிருந்தவர் வீல்சேரில்தான் இனி வாழ்க்கையை நகர்த்த வேண்டும் என்கிற சூழல். ஒரு 11 வயது சிறுமிக்கு அந்த வீல்சேர் எப்படிப்பட்ட வலியை கொடுத்திருக்கும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

அவனி மனதளவில் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக அவருடைய தந்தை அவனியை விளையாட்டுகளின் பக்கம் திருப்பிவிடுகிறார். வில்வித்தை மற்றும் துப்பாக்கிச்சுடுதல் இரண்டுக்குமே அழைத்து செல்கிறார். துப்பாக்கியில் இருக்கும் ஒரு கவர்ந்திழுக்கும் தன்மை வில்லில் இருப்பதில்லையே. மேலும், அவனியின் ஹீரோவான அபினவ் ஒரு துப்பாக்கிச்சுடுதல் வீரராயிற்றே! அதனால் அவனியின் துப்பாக்கியை இறுக பற்றிக்கொண்டதில் எந்த ஆச்சர்யமுமில்லை.

தொடர்ச்சியாக பயிற்சிகளில் இறங்கினார். குடும்பத்தினரும் முழுமையாக ஆதரவளித்தனர். போட்டிகளில் களமிறங்கினார். வெற்றிகளை குவித்தார்.

2017, 2019 பாரா உலகக்கோப்பையில் வெள்ளி வென்றார். தேசியளவிலான போட்டிகளில் எட்டுப்பதக்கங்களை குவித்தார்.

அவனி லெகரா

இந்த வெற்றிகள் அவரை டோக்கியோ பாராலிம்பிக்கிற்கு தகுதிப்பெற வைத்தது. மீண்டும் சில பிரச்னைகள். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பயிற்சி செய்வதில் பல சிரமங்கள். பிசியோரெபிக்கள் இல்லாமல் வீட்டில் பெற்றோரின் உதவியுடனேயே பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். ஆனாலும், துவண்டுவிடவில்லை. தோட்டா சீறும் வேகத்தில் எந்த குறைச்சலும் இல்லை.

இன்று காலை டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 10 மீ ஏர் ரைஃபிள் SH1 பிரிவு போட்டிகள் தொடங்கியது. முதலில் தகுதிச்சுற்று. 6 சீரிஸ்கள் சுட வேண்டும். அந்த சுற்று முடிவில் 621.7 புள்ளிகளை எடுத்திருந்தார். 8 பேர் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற முடியும். அவனி 7-வது இடம்பிடித்து இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார். இருப்பினும் இது அவனியின் தரத்திற்கு சுமாரான பெர்ஃபார்மென்ஸ் போலவே தோன்றியது. ஆனால், அவனி அதை வெறும் தகுதிச்சுற்றாக மட்டுமே பார்த்திருந்தார். தகுதிப்பெற்று இறுதிச்சுற்றுக்கு சென்ற பிறகு அங்கே இன்னும் சிரத்தையெடுத்து இலக்கை துளைக்கலாம் என நினைத்திருந்தார். அவரின் திட்டம் வெற்றியடைந்தது.

அவனி லெகரா

இறுதிப்போட்டியில் மற்ற வீராங்கனைகளை விட சிறப்பாக இலக்கின் மையத்தை துளைத்து 249.6 புள்ளிகளை எடுத்து உலக சாதனையை சமன் செய்தார். தங்கத்தையும் வென்றார். உலக அரங்கில் மீண்டும் இந்தியாவின் தேசியக்கீதம் ஒலித்தது. அவனி போடியத்தில் ஏறினார். ஒட்டுமொத்த இந்தியாவுமே அவனியை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

2008-ல் அபினவ் பிந்த்ரா ஒரு அலையை உருவாக்கியிருந்தார். அது விளையாட்டையும் சீரியஸாக கரியராக எடுக்கலாம் என்பதை உணர்த்தியது. இப்போது அவனி ஒரு அலையை உருவாக்கியிருக்கிறார். அது யாராக இருந்தாலும் எப்படிப்பட்ட சிரமமான சூழ்நிலையில் இருந்து வந்தாலும் விளையாட்டில் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

வாழ்த்துகள் அவனி!

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: