நான் முழுவதுமாக உடைந்திருக்கிறேன்; மீண்டும் விளையாடுவது சந்தேகமே: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வேதனை | I’m Truly Broken: Vinesh Phogat Unsure Of Returning To Wrestling

Spread the love

நான் முழுவதுமாக உடைந்திருக்கிறேன்; மீண்டும் விளையாடுவது சந்தேகமே என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வேதனை பொங்க தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர்க்கான 53 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவுக்கான போட்டியில், காலிறுதியில் தோல்வியுற்று வெளியேறி இருந்தார். அவரது தோல்வி பெரும் விமர்சனத்தை சம்பாதித்துள்ளது.

இந்நிலையில், விதிமீறல் புகாரில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக இந்திய மல்யுத்த சம்மேளனம் தெரிவித்தது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை தற்காலிகமான ஒன்று எனவும் தெரிவித்தது. வினேஷ் மீது தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் ஆட்டையைக் கோட்டைவிட்டதாக விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

இந்நிலையில், தன் மீதான ஏச்சுக்கள், பேச்சுக்கள் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் வினேஷ் நீண்ட விளக்கம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

இந்தியாவில், நீங்கள் எவ்வளவு வேகமாக புகழின் உச்சிக்குச் செல்கிறீர்களோ அதே வேகத்தில் ஒரே ஒரு பதக்கத்தை இழந்துவிட்டாலும் கூட அதளபாதாளத்துக்கு சறுக்கி விடுவீர்கள். ஒரே ஒரு தோல்வி உங்களின் கதையை முடித்துவிடும்.

நான் எப்போது திரும்பவும் மல்யுத்த கோதாவுக்கு வருவேன் என்று தெரியவில்லை. ஒருவேளை திரும்புவேனா என்பதுகூட தெரியவில்லை. திரும்பாமலும் போகலாம். ஒருமுறை எனக்குக் காலில் எலும்புமுறிவு ஏற்பட்டிருந்தது. அப்போது கூட முறிவை சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இப்போது எனது ஒட்டுமொத்த உடலும் நொறுங்கிப் போய் உள்ளது. நான் உண்மையில் உடைந்திருக்கிறேன்.

டோக்கியோ ஒலிம்பிக் அரங்கில் அமெரிக்க ஜிம்னாஸ்ட் சிமோன் பைல்ஸ், விளையாடுவதற்கு சற்று நேரத்துக்கு முனால், நான் மனதளவில் இங்கே விளையாட இப்போது தயாராகவில்லை. ஆதலால், நான் போட்டியில் பங்கேற்கவில்லை என்று கூறினார். அவரை நாம் எல்லோரும் கொண்டாடினோம்.

அதேபோன்றதொரு வாக்கியத்தை இங்கே இந்தியாவில் சொல்ல முடியுமா என யோசித்துப் பாருங்கள். மல்யுத்தப் போட்டியிலிருந்து விலகுகிறேன் என்று கூட சொல்ல வேண்டாம், இன்று விளையாடத் தயாராக இல்லை என்றாவது இங்கு சொல்லிவிட முடியுமா எனத் தெரியவில்லை.

கடந்த ஒருவாரமாக நான் தூங்கவில்லை. என் மனது வெறுமையாக இருக்கிறது. என் வாழ்வில் என்ன நடக்கிறது என்று என்னாலேயே உறுதி செய்ய முடியவில்லை. இரண்டு மனங்கள், இரண்டு குரல்களுக்கு இடையே போராடுகிறேன். ஒரு மனம் மல்யுத்தத்திற்கு முழுக்குப் போடச் சொல்கிறது. மற்றொரு மனம், ஒருவேளை அப்படிச் செய்துவிட்டால், போராடாமல் புறமுதுகிட்டால் அது தனிப்பட்ட முறையில் எனக்கே பேரிழப்பு எனக் கூறுகிறது.

நான் இப்போது எனது குடும்பத்தின் மீது கவனம் செலுத்த விரும்புகிறேன். ஆனால், என்னை வெளியில் இருக்கும் அனைவரும் ஒரு சடலத்தைப் போல் பாவிக்கின்றனர். என்னைப் பற்றி என்னென்னவோ எழுதுகிறார்கள். மல்யுத்தத்தை விடுங்கள். ஒரு நபர் இயல்பாக இருக்க அனுமதிக்கலாமே. நான் அன்றைய தினம் கோதாவில் இருந்தபோது எப்படி உணர்ந்தேன் என்பது என்னவெல்லாம் நினைக்கவில்லை என்பதும் எனக்கு மட்டுமே தெரியும். அது என்னைவிட வேறு யாருக்கும் நன்றாகத் தெரிய வாய்ப்பில்லை. ஒருவேளை என்னைப் பார்த்த யாரேனும் என் எண்ண ஓட்டத்தை சரியாக கணித்திருந்தார்கள் என்றால் அவர்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையின் அர்த்தத்தையும் அறியும் மகா சக்தி இருக்க வேண்டும்.

இந்த உலகைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், இந்த உலகம் என்னை உடைக்க முயற்சிக்கிறது. நான் எனது தோல்வியை அலசி ஆராய விரும்புகீறேன். ரியோ ஒலிம்பிக்கிற்குப் பின்னர் என் கதை முடிந்தது எனப் பலரும் சொன்னார்கள். ஆனால், நான் கோதாவுக்குத் திரும்புவதில் குறியாக இருந்தேன். அப்படியிருக்கும் போது டோக்கியோ மட்டும் எப்படி என் கனவாக இல்லாமல் போயிருக்க முடியும்.

ஒலிம்பிக் வீரர்கள் அனைவருக்குமே அழுத்தம் இருக்கும். அதற்கு நான் மட்டும் விதிவிலக்கல்ல. ஆனால், அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதும் எனக்குத் தெரிந்தது. நான் ஒன்றும், அழுத்தம் காரணமாகத் தோற்றுவிடவில்லை. நான் டோக்கியோ சென்றவுடன் என்னைக் கட்டமைத்துக் கொள்ள ஒரு வீராங்கனையாக எல்லா முயற்சிகளையும் செய்தேன். சால்ட் கேப்ஸூல் தொடங்கி எல்லாவற்றையும் பின்பற்றினேன். எனது உடல் எடை பற்றி எனக்குக் கவலை இருந்தது. எனக்கு தனியாக பிஸியோ இல்லை. துப்பாக்கிச் சுடுதல் வீரர்களுக்கான பிஸியோவே இருந்தார். அவருக்கு எனது தேவைகள் தெரியவில்லை. எல்லாவற்றையும் மீறிதான் களம் கண்டேன்.

ஆனால், அன்று நான் தோல்வியுறுவது எனக்குத் தெரிந்தது. நான் அழுத்தம் காரணமாகத் தான் தோற்றேன் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் மல்யுத்தத்தை விரும்பி நானாகவே கையிலெடுத்தேன். என்னை யாரும் நிர்பந்திக்கவில்லை. நான் எனது நேரம், பணம், வியர்வை என அனைத்தையும் மல்யுத்தத்தில் செலுத்தியுள்ளேன். நான் யாருக்காவது பணம் தருகிறேன், அவர்கள் பதிலுக்கு மல்யுத்தத்தில் பதக்கம் வென்று தருவார்களா?

நான் என்றுமே என்னை தங்கம் வெல்லும் மங்கை என்று பிரகடனப்படுத்துமாறு சொல்லவில்லை. நான் எனக்காக மல்யுத்தம் செய்தேன். நான் தோற்றபோதும் என் தோல்வியை உணர்ந்த முதல் ஆளும் நானே. தோல்வியும் இயல்புதானே. அதை நான் செய்திருக்கிறேன். என்னை தனிமையில் விடுங்கள். முன்பு எலும்பு முறிவுகள் தான் ஏற்பட்டன. இப்போது நான் முழுவதுமாக உடைந்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: