நன்றி, மகிழ்ச்சி; இரு வார்த்தைகளால் மட்டுமே என்னை இப்போது வரையறுக்க முடியும்: அஸ்வின் நெகிழ்ச்சிப் பதிவு | Happiness and gratitude define me right now: Ashwin after white-ball comeback

Spread the love

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் 4 ஆண்டுகளுக்குப் பின் இடம் பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், “நன்றி, மகிழ்ச்சி என இரு வார்த்தைகளால் மட்டுமே என்னை இப்போது வரையறுக்க முடியும்’’ என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடக்கின்றன. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அனைத்து இந்திய சீனியர் தேர்வுக்குழு நேற்று அறிவித்தது.

இதில் 4 ஆண்டுகளுக்குப் பின் அஸ்வின் அணிக்குள் மீண்டும் வந்துள்ளார். இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக அஸ்வின் விளையாடினார். அதன்பின் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.

அஸ்வினின் எதிர்காலம் முடிந்துவிட்டது, ஒருநாள், டி20 போட்டிகளில் தேர்வுசெய்யப்பட மாட்டார் எனப் பேசப்பட்ட நிலையில் இப்போது அவரின் திறமைக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இங்கிலாந்தில் நடந்துவரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளாக அஸ்வின் தேர்வு செய்யபப்டாமல் அமரவைக்கப்பட்டது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. டெஸ்ட் உலகில் நம்பர் 2 பந்துவீச்சாளர்களை எந்தவிதமான காரணமும் இன்றி கோலி அமரவைத்ததற்கு தர்க்கரீதியிலான எந்த விளக்கமும் இல்லை. ஆனால், கிரிக்கெட்டைத் தாண்டிய விஷயங்களில் அஸ்வின் பந்தாடப்படுகிறார் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் குறிப்பிட்டுவிட்டார்.

தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மாவும் நேற்றைய பேட்டியில் கூறுகையில், “அஸ்வின் இந்திய அணியின் சொத்து. இந்திய அணிக்கு அனுபவமான வீரர் ஒருவர் தேவை. இந்திய அணியில் ஸ்பெஷலிஸ்ட் ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் மட்டும்தான். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருவதால், உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

துபாய் மைதானம் மிகப்பெரியது. அஸ்வின் ஒருவர் மட்டுமே அனைத்து அணிகளுக்கும் தொந்தரவு அளிக்கக்கூடிய அளவில் பவர்ப்ளேயில் பந்துவீசக் கூடியவர்.

அஸ்வின் தேவை என்பதை இத்தனை ஆண்டுகளாக கேப்டன் கோலி நம்பியிருக்க மாட்டார். ஆனால், அணியில் உள்ள மற்ற முக்கிய வீரர்கள் அஸ்வின் அணிக்குத் தேவை என்பதை உறுதியாக நம்புகிறார்கள். அஸ்வினை அணியில் சேர்த்தது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு. ஆதலால், அதில் கேப்டன் கோலியும் இசைவு தெரிவிக்க வேண்டியிருந்தது.

ஐபிஎல் டி20 தொடர் மிகப்பெரிய போட்டி உலக அளவில் தரமான வீரர்கள் இதில் பங்கேற்கிறார்கள். ஆதலால், ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் சிறப்பாக விளையாடினாலே அவர் எவ்வாறு திறமையாக விளையாடுகிறார் என்பதை அறிந்துகொள்ள முடியும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாகக் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “ஒவ்வொரு குகையின் முடிவிலும் வெளிச்சம் இருக்கிறது. ஆனால், குகையில் இருப்போர் வெளிச்சத்தைப் பார்க்க முடியும், வாழ முடியும் என்று நம்ப வேண்டும்.

2017-ம் ஆண்டு சுவரில் இந்த வாசகத்தை எழுதும் முன், இந்த வாசகத்தை நான் லட்சக்கணக்கான முறை எனது டைரியில் எழுதினேன். இந்த வாசகத்தைப் படித்து உள்வாங்கி வாழ்க்கையில் கடைப்பிடித்தால் அதற்கான சக்தி அதிகமிருக்கிறது. நன்றி, மகிழ்ச்சி ஆகிய இரு வார்த்தைகள்தான் என்னை இப்போது வரையறுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: