தோனியைவிடச் சிறந்த வீரர் ரிஷப் பந்த்; சிறப்பாகச் செயல்பட முடியும்: பர்தீவ் படேல் வெளிப்படை | IPL 2021: Pant doesn’t have to worry about being like MS Dhoni, can be better, says Parthiv

Spread the love


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியைவிடச் சிறந்த வீரர் ரிஷப் பந்த். அவரால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பர்தீவ் படேல் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கடந்த ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வெல்வதற்கு பேட்டிங்கில் காரணமாக இருந்த ரிஷப் பந்த், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் அடித்துக் கலக்கினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும் ரிஷப் பந்த் சிறப்பாகச் செயல்பட்டார்.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வரும ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டை எலும்பு முறிவு காரணாக இந்த ஐபிஎல் சீசனில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு யாரை கேப்டனாக நியமிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பர்தீவ் படேல் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

”ரிஷப் பந்த் அதிகமான நம்பிக்கை உள்ளவர் என்று நான் நினைக்கிறேன். டி20 போட்டி விளையாடும்போது அந்த தன்னம்பிக்கைதான் உங்களுக்குத் தேவை. எந்தவிதமான சந்தேகமும் உங்கள் மனதில் வரக்கூடாது. அதாவது ரிஷப் பந்த் தெளிவாக இருப்பதைப் போல் இருக்க வேண்டும்.

தோனியுடன் அடிக்கடி ரிஷப் பந்த்தை ஒப்பிட்டுப் பலரும் பேசினார்கள். இந்த வார்த்தையின் சுமையை ரிஷப் பந்த் அதிகம் உணர்ந்திருப்பார். தோனியைப் போல் செயல்படுவோமோ என்று நினைத்து அதைப் போல் செயல்படவும் முயன்றிருப்பார்.

ஆனால், ரிஷப் பந்த் புத்திசாலியான வீரர். தோனி போன்று ஆக வேண்டும், தோனியைப் போல் விளையாட வேண்டும் என்பதைப் பற்றி ரிஷப் பந்த் கவலைப்படவில்லை. தோனியைவிடச் சிறந்த வீரர் ரிஷப் பந்த். அவரால் அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் களத்தில் நின்று அவரால் அணியை வெல்ல வைக்க முடியும். ஆதலால், டெல்லி கேபிடல்ஸ் அணிக்குச் சிறந்த கேப்டனாக ரிஷப் பந்த் இருப்பார்.

அடுத்து எங்கு விளையாடப் போகிறோமோ என்றெல்லாம் மும்பை இந்தியன்ஸ் கவலைப்படுவார்கள் என்று நினைக்கவில்லை. அனைத்து அணிகளும் நாம் எங்கு விளையாடப் போகிறோம் என்று யோசித்திருக்கலாம். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி சிறந்த அணி, தங்களின் சிறந்த 11 வீரர்களுடன் களத்துக்கு வருவார்கள்.

சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் மந்தமானது. சுழற்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமானது. ஆதலால், அதற்கு ஏற்ப வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை பெரிய அளவில் வீரர்களை மும்பை அணி மாற்றாது. ஹர்திக் பாண்டியா, பொலார்ட் போன்றோர் சற்று குறைந்த வேகத்தில்தான் பந்துவீசக்கூடியவர்கள். அது சென்னை ஆடுகளத்துக்கு உதவியாக இருக்கும். ராகுல் சாஹர், குர்னல் பாண்டியாவின் பந்துவீச்சும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துருப்புச் சீட்டாக அமையும்”.

இவ்வாறு பர்தீவ் படேல் தெரிவித்தார்.





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *