மாலியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சுவிஸ் நாட்டவரான பெண் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அது Beatrice Stöckli என்னும் சுவிஸ் குடிமகளின் உடல்தான் என்பது, டி என் ஏ பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டதாக மாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் பேஸலைச் சேர்ந்த Beatrice Stöckli, மாலி நாட்டுக்கு கிறிஸ்தவ மிஷனெரியாக சென்றிருந்தார்.
2012ஆம் ஆண்டு மாலியில் உள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு ஒன்றினால் கடத்தப்பட்ட Beatrice, ஒன்பது நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.
என்றாலும், அதன் பின்னரும் அவர் தொடர்ந்து மாலியிலுள்ள சிறுவர்களுக்கு சேவை செய்துவந்தார். 2016ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் மீண்டும் அவர் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினால் கடத்தப்பட்டார்.

2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் திகதி, கடத்தப்பட்ட Beatrice கொல்லப்பட்டதாக பிரான்ஸ் அதிகாரிகள் மூலம் தகவல் கிடைத்தது. அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், அவரது உடல் பாகங்கள் தற்போது கிடைத்துள்ளதாக சுவிட்சர்லாந்து அரசு புதன்கிழமையன்று அறிவித்துள்ளது.
கிடைத்துள்ள உடல் பாகங்கள் Beatrice உடையதுதான் என்பதை, டி என் ஏ பரிசோதனை மூலம் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Beatrice கொல்லப்பட்டதற்காக அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ள சுவிஸ் வெளியுறவு அமைச்சரான Ignazio Cassis, அவரது உடலை சுவிட்சர்லாந்துக்கு கொண்டுவரும் முயற்சிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.