திரு. ஹெங் சுவீ கியெட் நான்காம் தலைமுறை அமைச்சர்களுக்கான தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவது: “வியப்பில் ஆழ்த்தியது.”- அடுத்த தலைவர் யார்

Spread the loveImages

  • heng swee keat

    (படம்: CNA)

(நிருபர்: துர்கா கிருஷ்ணமூர்த்தி)

துணைப்பிரதமரும் நிதியமைச்சருமான திரு. ஹெங் சுவீ கியெட் நான்காம் தலைமுறை அமைச்சர்களுக்கான தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவரது சேவைக்கும் அவர் ஆற்றிய மிகச் சிறப்பான பணிக்கும் பிரதமர் லீ சியென் லூங் நன்றி தெரிவித்துள்ளார்.

திரு. ஹெங்கின் முடிவு, தலைமைத்துவ மாற்றத்திற்கான திட்டத்தில் குறிப்பிடத்தக்க பின்னடைவு என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.

திரு. ஹெங்கிற்குப் பிறகு யார் அவரது பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்பது பற்றி உடனடியாக முடிவெடுக்கப்படவில்லை. கோவிட் சூழ்நிலையால் பல மாற்றங்கள் ஏற்பட்டதே அதற்குக் காரணம் என்று TODAY இணையப்பக்கம் கூறியது.

திரு. ஹெங்கின் முடிவு குறித்து நிபுணர்கள் தங்கள் கருத்துகளை ‘செய்தி’யுடன் பகிர்ந்துகொண்டனர்.

Ms K. தனலெட்சிமி (Ms K. Thanaletchimi)

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், துணைத் தலைவர்

இந்தச் செய்தி எனக்கு வியப்பளித்தது. துணைப்பிரதர் ஹெங் சுவீ கியெட் மக்களை முன்னிலைப்படுத்திச் செயல்படுபவர். அக்கறை மிகுந்தவரான அவர் எளிதில் அணுகக்கூடியவர். சிங்கப்பூருக்கும் அதன் ஊழியரணிக்காகவும் சிறந்த பங்காற்றியுள்ளார். இந்த முடிவை எடுப்பதற்கு அவருக்கு வலுவான காரணங்கள் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஆனால் இளைய தலைவர்களுக்கு வழிவிடுவது அவருடைய தன்னலமற்ற குணத்தைப் பிரதிபலிக்கிறது.

திரு. ஹெங்கின் முடிவு, 4ஆம் தலைமுறைக் குழுவையும் சிங்கப்பூரின் எதிர்காலத்தையும் எவ்வாறு பாதிக்கும்?

கோவிட் போன்ற சவால்களைச் சமாளிக்கும் மீள்திறன்மிக்க 4ஆம் தலைமுறைத் தலைவர்கள் நம்மிடையே உள்ளனர். வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், சிங்கப்பூரின் தலைமைத்துவம் என்பது நீண்ட கால திட்டம். அது நிலைத்தன்மை வாய்ந்ததாகவும், ஊகிக்கக் கூடியதாகவும் இருக்கும்.

அடுத்த தலைவர் யாராக இருக்கக்கூடும்?

4ஆம் தலைமுறை தலைவர்களில் யாரேனும் ஒருவர் அணியை வழிநடத்தக்கூடும் என்று மட்டுமே இப்போதைக்குக் கணிக்க முடியும்.

திரு. கண்ணா கண்ணப்பன், அரசியல் கவனிப்பாளர்

நான்காம் தலைமுறைத் தலைவர்களின் தலைமை பொறுப்பிலிருந்து திரு. ஹெங் விலகுவது ஓர் இழப்புத்தான்.

அடுத்த பிரதமராகத் திரு. ஹெங் பொறுப்பேற்பார் என்ற நிலைப்பாட்டில்தான், திட்டங்களை வகுத்து கொண்டிருந்தார்கள். எனவே, இது பின்னடைவாக இருக்கலாம். அதேசமயம், நம் அரசாங்கம் எவ்வாறு செயல்படும் என்பதை நாம் நன்கு அறிவோம்.

நன்றாகத் திட்டமிட்டுப் போதிய கவனத்துடன் தலைமைத்துவ மாற்றத்தை நம் அரசாங்கம் செயல்படுத்தும். வேறு எந்த நாட்டிலும் இப்படி நன்கு திட்டமிட்ட தலைமைத்துவ மாற்றத்தை நீங்கள் பார்க்கமுடியாது.

COVID சூழ்நிலையில் நான்காம் தலைமுறைத் தலைவர்கள் அனைவரும் மிக நெருக்கமாகப் பணிபுரியும் கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அனைத்து அமைச்சுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலை இருந்தது.

4ஆம் தலைமுறைத் தலைவர்கள் திட்டமிடும் திறனையும், அவர்கள் செயல்படும் முறையையும் மக்கள் அணுக்கமாகப் பார்க்கும் சந்தர்ப்பமாக அது அமைந்துள்ளது. அனைத்துத் தலைவர்களும் திறமையாகச் செயல்படக்கூடியவர்கள் என்பதை நமக்கு அது எடுத்துக்காட்டியுள்ளது.

என்னை பொறுத்தவரை திரு. லாரன்ஸ் வோங், திரு. ஓங் யீ காங்
இருவரும் நிதானமாகச் சிந்தித்து திட்டங்களை வகுக்கக்கூடியவர்களாகத் தோன்றுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, வகுத்த திட்டங்களை மக்களுக்குப் புரியும் வண்ணம் எடுத்துரைக்கும் திறன் படைத்தவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள்.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: