திருப்பூரில் மருத்துவர்களின் முகநூல் பக்கத்தை முடக்கி பணம் பறிப்பு: உதவிய சக மருத்துவர்களுக்கு நேர்ந்த சோகம்- சைபர் கிரைமில் புகார் | Tirupur doctors’ Facebook page disabled and money laundering: Tragedy befalls fellow doctors

Spread the love

மருத்துவர்களின் முகநூல் பக்கத்தை முடக்கி, மருத்துவ உதவிக்குப் பணம் கேட்பது போல் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, திருப்பூர் சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சமூக வலைதளமான முகநூல் மற்றும் ட்விட்டரை இன்றைக்குப் பலரும் பயன்படுத்தி வருகிறோம். இதில் பல்வேறு சமூக அக்கறை விஷயங்கள் தொடங்கி, குடும்பத்தில் நிகழும் பல்வேறு நிகழ்வுகள் வரை பகிரப்படும் சூழலில், திருப்பூரைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் சிலரின் முகநூல் பக்கங்களை மர்ம நபர்கள் முடக்கி, மெசஞ்சர் மூலம் மருத்துவ நண்பர்களிடம் பணம் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாகத் திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறும்போது, ”திருப்பூரைச் சேர்ந்த மூத்த மருத்துவர், மற்றொரு இளம் மருத்துவர் மற்றும் சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் எனப் பலரின் முகநூல் பக்கங்களை, அவர்களுக்குத் தெரியாமல் ஒரு மர்ம கும்பல் முடக்கியது. அதையடுத்து முகநூல் பக்கத்தில் உள்ள மருத்துவ நண்பர்களுக்கு, மெசஞ்சர் மூலம் குறுந்தகவல் அனுப்பி உள்ளனர்.

அதில், ’அவசர மருத்துவ சிகிச்சை என்றும், பணத்தை நாளை தந்து விடுகிறேன் எனவும் கூறி ‘கூகுள் பே’ மூலம் அலைபேசி எண் ஒன்று குறிப்பிடப்பட்டு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. சக மருத்துவருக்கு உதவி தேவைப்படுகிறது என்ற அடிப்படையில், மருத்துவர்களும் அந்த எண்ணுக்குப் பல ஆயிரம் ரூபாயை அனுப்பி உள்ளனர். வெங்கடேஸ்வர ரெட்டி எனும் பெயரில் ‘கூகுள் பே’ மூலம் பணம் கேட்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நெருங்கிய நண்பர்கள் சிலரது முகநூலுக்கே மெசஞ்சர் மூலம் தகவல் அனுப்பப்பட, இது அவர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட மருத்துவர், சக மருத்துவ நண்பரை அலைபேசியில் தொடர்புகொண்டு, ‘உடல்நிலைக்கு என்ன ஆனது?’ என்று கேட்டபோது, ’நன்றாகத்தான் உள்ளேன். பணியில் உள்ளேன். எனக்கு ஒன்றும் ஆகவில்லை’ என்றார். அதன் பின்னர் மெசஞ்சரில் இருந்து வந்த குறுந்தகவலைக் காட்ட, உடனே தனது முகநூல் பக்கத்தைப் பரிசோதித்தார். அது முடக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சிலர் நெருங்கிய நண்பர்கள் என்பதால், அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். இதனால் பணம் அனுப்புவது தவிர்க்கப்பட்டது. அதேபோல் ’கூகுள் பே’ எண்ணுக்கு அனுப்பப்பட்ட அலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது, யாரும் அழைப்பை ஏற்கவில்லை. மருத்துவர்கள் மத்தியில் இந்த நூதனத் திருட்டு குறித்துப் பலரும் முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக திருப்பூர் சைபர் கிரைம் போலீஸாருக்கும் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

திருப்பூரில் பணியாற்றும் அரசு மருத்துவர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மூலம் சக மருத்துவ நண்பர்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு.

மனிதநேயத்தால் அனுப்பினேன்

பணத்தைப் பறிகொடுத்த மருத்துவர் கூறும்போது, ”பலரும் பல்வேறு இடங்களில் மருத்துவர்களாகப் பணியாற்றுகிறோம். சக மருத்துவருக்கு உதவி என்ற மனிதநேய அடிப்படையில்தான், எதையும் விசாரிக்காமல் முகநூலில் வந்த தகவலைக் கொண்டு பணத்தைச் செலுத்தினேன். ஆனால் இப்படி மோசடி நடக்கும் என்றும் கனவிலும் நினைக்கவில்லை. இதனால் எதிர்காலத்தில் யாரேனும் அவசர உதவிகள் கேட்டால் கூட, அதையும் சந்தேகப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகத் திருப்பூர் மாநகர போலீஸ் அலுவலகத்தில் ஆன்லைன் மற்றும் நேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதுகுறித்து திருப்பூர் மாநகரக் காவல் துணை ஆணையர் கே.சுரேஷ்குமார் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ”இதுபோன்ற மோசடிகளில் யாரும் சிக்காமல் இருக்க, பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், தொடர்ந்து முறைகேடு நடக்கிறது. மருத்துவர்களின் முகநூல் மூலம் பணம் அபகரிப்புப் புகார் தொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *