திருச்சி மாவட்டத்தில் லாட்டரி விற்றதாக 3 மாதங்களில் 100 பேரைக் கைது செய்தது தனிப்படை | Police arrested 100 people in 3 months for selling lottery tickets in Trichy district

Spread the love

திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் லாட்டரி விற்பனை செய்த 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் மணல் கடத்தல், லாட்டரி, மது மற்றும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களைத் தடுக்கவும், அச்செயலில் ஈடுபடுவோரைக் கைது செய்வதற்காகவும் எஸ்.பி. மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், இரண்டாம் நிலைக் காவலர்கள் அன்பு சுப்பிரமணியன், மோகன், முதல்நிலைக் காவலர்கள் வினோத், பாலா, அஸ்வின், பாலாஜி, இளையராஜா ஆகியோரைக் கொண்ட தனிப்படை கடந்த 3 மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது.

இவர்கள் மணப்பாறை, வையம்பட்டி, துறையூர், மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், அங்குள்ள உள்ளூர் காவல் நிலைய போலீஸாருக்கு தெரியாமலே, ரகசியமாகச் சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, லால்குடி பகுதியில் நேற்று (பிப். 28) நடத்திய சோதனையின்போது, அங்கு சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆங்கரை சுரேஷ்குமார் (41), நன்னிமங்கலத்தைச் சேர்ந்த ப்ளூட்டஸ் (55) ஆகியோரைக் கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து இன்று (மார்ச் 1) மணப்பாறை பகுதியில் சோதனை நடத்தி மலைத்தாதம்பட்டியைச் சேர்ந்த ஜோசப் (45), பொத்தமேட்டுப்பட்டி நேருஜி நகரைச் சேர்ந்த தோமஸ் (52), குணசேகரன் (39), லூர்துசாமி (48), டேனியல் (44), கண்ணுடையான்பட்டி அருகேயுள்ள மேலக்களத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (33) ஆகிய 6 பேரைக் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து 6 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள், லாட்டரி விற்பனை செய்த தொகை ரூ.6,790 உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன்மூலம், திருச்சி மாவட்டத்தில் லாட்டரி விற்பனை செய்ததாக கடந்த 3 மாதங்களில் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, கஞ்சா விற்பனை, மணல் கடத்தல், சட்ட விரோத மதுவிற்பனையில் ஈடுபட்டதாகவும் 100க்கும் மேற்பட்டோரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதையொட்டி, சிறப்பாகச் செயல்பட்ட தனிப்படை போலீஸாரை, காவல் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். மேலும், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இதுபோல் தொடர்ந்து சோதனை நடத்தி சட்டவிரோதச் செயலில் ஈடுபடுவோரைக் கைது செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *