தங்கள் நாட்டுக்குத் தடுப்பூசியைப் பரிசாக அளித்த இந்தியாவுக்கு மழலை மொழியில் பூட்டான் சிறுமி நன்றி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் தயாரான கரோனா தடுப்பூசிகள், ‘வாக்ஸின் மைத்ரி’ என்ற திட்டத்தின் கீழ் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியா முதன்முதலாகத் தனது அண்டை நாடான பூட்டான் நாட்டுக்கு இந்திய சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசிகளைப் பரிசாக வழங்கியது. இதையடுத்து பூட்டான் நாட்டைச் சேர்ந்த சிறுமி கென்ராப் ஈட்ஸின் சியல்டன் இந்திய நாட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”எங்களுக்கு அதிக அளவிலான கரோனா தடுப்பூசிகளை வழங்கிய இந்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பூட்டானிய மக்களான நாங்கள், இந்தியாவை அண்டை நாடாகக் கொண்டதற்குப் பெருமைப்படுகிறோம். சுக்ரியா பாரத்!” என்று சிறுமி தெரிவித்துள்ளார்.
அழகிய அசைவுகளுடன் கொஞ்சும் மழலையில் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் பேசிய சிறுமி கென்ராப்பின் 37 விநாடி வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை பூட்டானுக்கான இந்தியத் தூதர் ருச்சிரா கம்போஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
சிறுமி கென்ராப்பின் வீடியோ பலத்த வரவேற்பைப் பெற்ற நிலையில், சிறுமியைத் தூதரகத்துக்கு அழைத்து வந்து இன்று பரிசுகளை வழங்கியுள்ளார் பூட்டானுக்கான இந்தியத் தூதர் ருச்சிரா கம்போஜ்.
Khenrab! Your ‘thank you’ touches our hearts! #VaccineMaitri #indiabhutanfriensdhip. pic.twitter.com/2JOnCHVQ5a
— Ruchira Kamboj (@RuchiraKamboj) March 26, 2021