தடகள நாயகன் உசைன் போல்ட்: சாதனைகளைத் தானே மாற்றியமைத்தது எப்படி? | Usain Bolt’s birthday

Spread the love

பொதுவாகவே கரீபியன் மக்களுக்கு கிரிக்கெட், தடகளம், கால்பந்து போன்ற விளையாட்டுகளின் மீது அலாதியான விருப்பமுண்டு. எனவே அங்கு வளரும் இளம் தலைமுறைக்கு இந்த விளையாட்டுகள் மீதான ஈர்ப்பு இயல்பானதே. சிறுவன் உசைனுக்கும் கிரிக்கெட், கால்பந்து மீது பெரும் ஆர்வம்.

அதிலும் கிரிக்கெட் விளையாடுவதென்றால் சொல்லவே வேண்டாம். தனது பள்ளியின் கிரிக்கெட் அணியில் பந்து வீச்சாளராக விளையாடினார் உசைன். பந்து வீச ஓடிவரும் உசைனின் வேகத்தைக் கவனித்துப் பாராட்டிய பள்ளி ஆசிரியர், “நீ தடகளப் போட்டிகளில் கவனம் செலுத்து உசைன். பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் கலந்துகொள்” என்றார். இருப்பினும் உசைனின் மனது ஆசிரியரின் வார்த்தைகளை முதலில் ஏற்கவில்லை.

ஆசிரியர் சொன்னது போலவே பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் வர, தனக்குத் தடகளத்தில் ஆர்வமேதுமில்லை என்று ஆசிரியரிடம் கூறினார் உசைன். ஆனால் ஆசிரியரோ, “நீ இன்று பங்கேற்றால் நிச்சயம் வெற்றி பெறுவாய்” என்றார். மேலும், அமைதியாக இருந்த உசைனிடம், ”நீ இதில் வெற்றி பெற்றால் சிக்கனோடு சேர்ந்த நல்ல மதிய உணவு வாங்கித் தருகிறேன்” கூறினார். சிரித்துக் கொண்டே அதனை ஒப்புக்கொண்ட உசைன் தடகளப் போட்டியில் வெற்றியும் பெற்றார்.

இதுவே தடகள உலகில் உசைன் போல்ட்டின் முதல் வெற்றி. சிக்கனின் சுவையைக் காட்டிலும் வெற்றியின் சுவை போல்ட்டுக்குப் பெரிதும் பிடித்துப் போனது. மேலும், பல போட்டிகளில் விளையாட்டாகவே பங்கேற்று வென்றார் உசைன். வெற்றிகளும் பதக்கங்களும் மேன்மேலும் குவிய 14 வயதிலேயே சர்வதேச அளவிலான ஜூனியர் லெவல் தடகளப் போட்டிகளில் பங்கு பெறும் வாய்ப்பு உசைனுக்குக் கிடைத்தது.

இயல்பாக அமைந்த உயரம், ஓட்டத்திற்கு ஏற்ற உடல்வாகு, பயிற்சி என அனைத்தும் கிடைத்திருந்தும் அவற்றின் முக்கியத்துவத்தை உணர முடியாமல் கிரிக்கெட் மீதான ஆர்வம் போல்ட்டின் கண்களை மறைத்தன. இதனால் தனது முதல் சர்வதேச அளவிலான ஜூனியர் லெவல் போட்டியில் தோல்வியைக் கண்டார் உசைன். தோல்வி உசைனுக்கு மிகவும் கசந்தது. மனதை மிகவும் பாதித்தது. வீட்டின் கொல்லைப் புறத்தில் தனிமையில் அழுது கொண்டிருந்த போல்ட்டை அவரது பெற்றோர் அரவணைத்தனர். “இப்போது ஒன்றும் ஆகவில்லை, முறையான பயிற்சியில் ஈடுபடு, முயற்சியே செய்யாமல் ஒதுங்கிப் போகாதே. அதன் முடிவு என்னவானாலும் தைரியமாக ஏற்றுக்கொள்” என்றனர்.

உசைனுக்கு நம்பிக்கை பிறந்தது. அமெரிக்கத் தடகள வீரர் மைக்கேல் ஜான்ஸன் ஒலிம்பிக்கில் 200 மீட்டர் பந்தய தூரத்தை 19.32 விநாடிகளில் கடந்த சாதனை வீடியோவைப் பார்க்கும் வாய்ப்பு போல்ட்டுக்குக் கிடைத்தது. தானும் அந்த இடத்தில் ஒரு நாள் நிற்பேன் என மனதில் உறுதி கொண்டார் சிறுவனான உசைன் போல்ட்.

2002-ல் தன் சொந்த நாடான ஜமைக்காவில் நடந்த சர்வதேச அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஒட்டத்தில் 20.61 விநாடிகளில் கடந்து வெற்றி பெற்று சர்வதேச அளவில் தன் முதல் வெற்றியைப் பதிவு செய்ததோடு ஜூனியர் பிரிவில் மிகக் குறைந்த வயதில் உலக சாம்பியன் என்ற பெயரையும் பெற்றார்.

உசைனுக்குப் புதிய பயிற்சியாளராக வந்த ஃபிட்ஸ் கோல்மென், களப் பயிற்சிகளை விட மற்ற பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்தினார். முதுகிலும், கால்களிலும் ஏற்பட்ட அதீத வலியை போல்ட்டால் தாங்க முடியவில்லை. 2004-ல் போல்ட்டின் முதல் ஒலிம்பிக் வாய்ப்பு. ஆனால் ஃபிட்னஸ் சரியாக இல்லாத காரணத்தால் 200 மீட்டர் பந்தயத்தில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். காயத்தைவிட போல்ட்டுக்குத் தோல்வியே அதிகமாக வலித்தது. போல்ட்டைப் பரிசோசித்த ஜெர்மானிய மருத்துவர் ஹேன்ஸ் முல்லர் போல்ட்டின் முதுகெலும்பு சற்றே வளைந்திருப்பதாகக் கூறினார்.

அதனால் அவருடைய வலது கால் இடது காலைவிட அரை இன்ச் உயரம் குறைவாக இருப்பதாகவும் முதுகிலும் காலிலும் ஏற்படும் வலிக்கு இதுவே காரணம் என்றும் கூறினார். பிசியோதெரபி சிகிச்சை மூலமாக குணப்படுத்தலாம் என்றும், கூடுதலாக ஹோமியோபதி மருந்துகள் எடுத்துக் கொள்ளவும் பரிந்துரைத்தார்.

சற்றே மனம் தளர்ந்திருந்த போல்ட்டுடன் புதிய பயிற்சியாளராக கைகோத்தார் ஜமைக்காவின் இளென் மில்ஸ். மில்ஸின் புதிய பயிற்சி முறைகள் போல்ட்டை சற்றே தேற்றின. 2005-ல் பின்லாந்தில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தசைப் பிடிப்பினால் தோல்வி, 2006-ல் காமன்வெல்த் போட்டிகளிலும் அதே தசைப் பிடிப்பினால் தோல்வி. மிகவும் மனம் தளர்ந்த போல்ட்டை அரவணைத்த பயிற்சியாளர் மில்ஸ், ”2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இலக்காக வைத்துப் பயிற்சியைத் தொடங்கலாம்” என உற்சாகமூட்டினார்.

“உனக்காக ஓடு. உனக்கென ஒரு லட்சியத்தையும், இலக்கையும் உருவாக்கு. அதை நோக்கியே நீ உன்னைச் செலுத்து. பழைய தோல்விகள், முதுகு வலி, கால் வலி என எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு ஓடு, உறுதியாக ஓடு, முன்பை விட உறுதியாக முன்பைவிட வேகமாக” என ஒவ்வொரு தருணத்திலும் ஊக்கப்படுத்தினார் மில்ஸ். இதனைத் தொடர்ந்து உசைன் போல்ட் கடினமாக உழைக்க ஆரம்பித்தார்.

2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் பந்தய தூரத்தை 9.69 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்து தங்கம் வென்றார், அடுத்து 200 மீட்டரில் 19.30 விநாடிகள் வென்று மைக்கேல் ஜான்ஸனின் 12 ஆண்டு கால உலக சாதனையைத் தகர்த்தார். 4 x 100 மீட்டர் ரிலேவிலும் 37.10 விநாடிகள் என்று உலக சாதனை படைத்தார்.

உலகமே உசைன் போல்ட்டைத் திரும்பிப் பார்த்தது. ஊடகங்கள் அனைத்தும் தூக்கி வைத்துக் கொண்டாடின. வெற்றிக்குப் பின்னர் களத்தில் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி போல்ட் கொடுக்கும் போஸ் உலக ஃபேமஸ். 2009 பெர்லின் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீ மற்றும் 200 மீ இரண்டிலும் 9.58 மற்றும் 19.19 விநாடிகளில் கடந்து தன்னுடைய சாதனைகளைத் தானே மாற்றியமைத்தார் உசைன் போல்ட்.

2012ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டும் இரண்டு ஓலிம்பிக்கிலுமே 100 மீ, 200 மீ, 400 மீ ரிலே என மூன்று போட்டிகளிலும் தங்கம் வென்று தனது தொடர் சாதனைகளால் தடகள உலகில் தனது கால்தடத்தை மிக அழுத்தமாகப் பதித்தார்.

தனது சுயசரிதையில், தடகள உலகில் தனது முதல் வெற்றியில் கிடைத்தது சிக்கன் மட்டுமின்றி தன் திறமையைப் பற்றிய புரிதலுமே எனக் குறிப்பிட்டிருக்கிறார் உசைன் போல்ட்.

அதுமட்டுமில்லாமல் தனது ஜூனியர் லெவல் சர்வதேசப் போட்டியின் வெற்றியால் தனக்குக் கிடைத்த சுகபோகங்களில் சிக்கி அந்த இடத்திலேயே தேங்கிவிடாமல் அதைக் கடந்துவந்த அனுபவங்களையும் பகிர்ந்து தன்னை அடிமைப்படுத்தக்கூடிய கஞ்சா உட்பட பல போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகாமல் தன் இலக்கை நோக்கிப் பயணித்தது என்று பல அனுபவங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் தடகளப் போட்டிகளில் இருந்து தனது ஓய்வையும் அறிவித்தார். ஓய்வுக்குப் பின்னர் தனக்குப் பிடித்த கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார். அத்துடன் கால்பந்தாட்டத்தில் தன் விருப்ப அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்து விளையாடுவது தனது ஆசை என்றும் தெரிவித்திருந்தார். தற்போது “ட்ராக்ஸ் அண்ட் ரெக்கார்ட்ஸ்” என்ற பெயரில் உணவகமும், ஆடை தயாரிக்கும் நிறுவனமும் நடத்தி வருகிறார்.

தன் கடின முயற்சியால் இன்று உலக அரங்கில் தன் பெயரையும் தன் நாட்டின் பெயரையும் நிலை நிறுத்தி, தடகள உலகில் நீங்கா தடம் பதித்த உசைன் போல்ட்டின் 35-வது பிறந்த தினம் இன்று.

கட்டுரையாளர்: பி.வசந்த்,

டிஜிட்டல் மாணவப் பத்திரிகையாளர்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: