டேவிட் மலான் | உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன்… ஆனாலும் தன்னை நிரூபிக்க போராட்டம் ஏன்?! | world’s number one t20 batsman dawid malan career highlights

Spread the love


டேவிட் மலான்: நானே ஹீரோ… நானே வில்லன்!

டேவிட் மலானை ஒருவிதத்தில் கிறிஸ் கெயிலின் தொடர்ச்சி என்று சொல்லலாம். சர்க்கரைப் பொங்கலும் வடைகறியும் என்று நினைக்காதீர்கள். காரணம் இருக்கிறது. பொதுவாக கெயில் 30 அல்லது 35 பந்துகள் எடுத்து கொஞ்சம் செட்டில் ஆன பின்பு சரவெடியை ஆரம்பிப்பார். அதுபோல மலானும் 12-வது ஓவர் வரை வெறுமனே தடவிக் கொண்டிருப்பார். அதற்குப் பின்னர் மெதுவாக வேகமெடுத்து 150 ஸ்ட்ரைக் ரேட்டில் இன்னிங்சை முடித்துவிடுவார். ரிஸ்க் குறைவு; ரிவார்ட் அதிகம். சரி இதிலென்ன இங்கிலாந்து நிர்வாகத்துக்கும் கேப்டன் மார்கனுக்கும் பிரச்னை? நாணயத்திற்கு இரு பக்கம் போல மலான் ஸ்டைல் ஆட்டத்துக்கு இன்னொரு பக்கமும் உண்டு. அது அணிக்கு மிகவும் ஆபத்தானது.

20 பந்துகளில் அவர் 20 ரன்கள் எடுத்து பிறகு அடுத்த 20 பந்துகளில் 40 ரன்கள் எடுத்துவிட்டால் பிரச்னை இல்லை. ஆனால் ஒருவேளை 20 ரன்களுடன் அவர் ஆட்டமிழந்து விட்டால் அணியின் நிலைமை என்னாவது? அணியின் மொத்த ரிசோர்ஸ் ஆன 120 பந்துகளில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் வீண்.

டேவிட் மலான்

டேவிட் மலான்

இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை மிக நீண்டது. பவர் ப்ளேவில் பதம் பார்க்க ராய் பட்லர் ஜோடி. மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை வாரிச் சுருட்ட பேர்ஸ்டோ. இறுதிக் கட்டத்தில் பேயாட்டம் ஆட மார்கன். தற்போது புதுவரவாக அதிரடி வீரர் லிவிங்ஸ்டன் வேறு. இவர்களைத் தவிர ஸ்டோக்ஸ், மொயின் அலி போன்ற ஆல் ரவுண்டர்களுக்கும் பஞ்சமில்லை. 11-வது பேட்ஸ்மேன் ஆதில் ரஷீத் வரை முதல்தர கிரிக்கெட்டில் 5 சதங்கள் குவித்தவர். 120 பந்துகளுக்கு எத்தனை பேர் போட்டி என்று பாருங்கள். தலை சுற்றிப் போய்விடும் போல. இங்கு மலானுக்கு என்ன வேலை இருக்க முடியும்? அடுத்த டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதும் மலானுக்கு ஒரு பாதகமான அம்சம். தென்னாப்பிரிக்காவில் பிறந்த மலானுக்கு சுழற்பந்து வீச்சு என்றால் எட்டிக்காய்.

லீக் போட்டிகளில் சுமார்; இங்கிலாந்து அணியில் சூப்பர்!

சரி மலானுக்கு சாதகமான அம்சம் என எதுவுமே கிடையாதா? நிச்சயம் இருக்கிறது. அது அவருடைய அனுபவம். PSL, BBL, BPL, T20 Blast, MSL போன்ற உலகின் முக்கிய டி20 தொடர்களில் விளையாடிய அனுபவமுள்ளவர் மலான். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடவுள்ளார். அழுத்தம் மிகுந்த ஃபார்மட்டான டி20-ல் பதற்றமில்லாமல் ஆடுவதற்கு இந்த அனுபவம் ஒரு பேட்ஸ்மேனுக்கு அவசியம். தற்போதைய இங்கிலாந்து டி20 பேட்டிங் வரிசையில் பட்லருக்கு அடுத்து false shot percentage குறைவாக உள்ள பேட்ஸ்மேன் மலான்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொன்று இங்கிலாந்தின் அசகாய சூரர்கள் அடங்கிய பேட்டிங் வரிசையே இங்கிலாந்துக்கு சில நேரங்களில் ஆபத்தாக முடியவும் வாய்ப்புள்ளது.

5 ஓவர்களில் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற சூழ்நிலையில் ஒருபக்கம் நங்கூரமிட்டு நிற்க ஒரு தேர்ந்த பேட்ஸ்மேன் வேண்டும். அந்த இடத்துக்கு மலான் உடன் போட்டியிட ஜோ ரூட் மாதிரியான ஒரு சில வீரர்களே இங்கிலாந்தில் உள்ளனர். Big occasion player என்ற இன்னொரு அம்சமும் மலானுக்கு சாதகமாக உள்ளது. சாதாரண டி20 லீக் போட்டிகளில் அவருடைய சராசரி 30, ஸ்ட்ரைக் ரேட் 130. அதுவே இங்கிலாந்துக்கு ஆடும் போது அவருடைய சராசரி 43, ஸ்ட்ரைக் ரேட் 140. ஒருவேளை அனுபவம், Big occasion player போன்ற அம்சங்களை இங்கிலாந்து கணக்கில் எடுத்துக் கொண்டால் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் மலான் இடம்பெற வாய்ப்புள்ளது.

டேவிட் மலான்

டேவிட் மலான்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரீ என்ட்ரி ; தாக்குப் பிடிப்பாரா?

டி20 கிரிக்கெட்டில் மலானின் இடம் குறித்த விவாதங்கள் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க டெஸ்ட் அணியில் கதவு அவருக்கு மீண்டும் திறந்துள்ளது. இதை அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். 29 வயதில் கிடைத்து 30 வயதில் கிட்டத்தட்ட முடிந்து போன ஒரு வாய்ப்பு மீண்டும் 33வது வயதில் தேடி வந்தால் அது அதிர்ஷ்டம் தானே? கிடைத்த வாய்ப்பை அவரும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். லீட்ஸ் டெஸ்டில் ஜோ ரூட்டின் மாஸ்டர் கிளாஸ் சதத்தின் நடுவே அவருடைய அழகான இன்னிங்ஸ் போதிய கவனம் பெறாமல் போய்விட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு மூன்றாம் வரிசையில் ஒரு நல்ல இன்னிங்ஸை பார்க்க முடிந்தது. என்னவொரு சரளமான பேட்டிங். மலான் ஒரு டச் பிளேயர். கால் நகர்த்தல் எல்லாம் அவ்வளவாக இருக்காது. ஆனால் கொஞ்சமே கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும் அதை பெளண்டரியாக மாற்றிவிடுவார். தென்னாபிரிக்காவை சேர்ந்தவர் என்பதால் பிட்ச்சில் கொஞ்சம் வேகத்துடன் பவுன்ஸ் கிடைக்குமா என எதிர்பார்ப்பார். ஆசிய வீரர்களை Flat track பேட்ஸ்மேன் என சொல்வோமே அதுபோல மலான் ஒரு Bouncy track பேட்ஸ்மேன். 2017-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் தொடரில் மலான் கிட்டத்தட்ட 400 ரன்களை குவிக்க காரணமும் இதுதான். ஆனால் அதுவே இங்கிலாந்தின் பசுமையான ஆடுகளங்களில் அவருக்கு வில்லனாக வந்து நிற்கிறது.

Full, short லென்த்களில் வீசப்படும் பந்துகள் மலானுக்கு ஒரு பிரச்னையே அல்ல. ஆனால் corridor of uncertainty என சொல்லப்படும் good லென்த் பந்துகளில் அவருக்கு பலவீனம் உண்டு. 33 வயதான நிலையில் அவருடைய கரியர் இன்னும் எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் தங்களுடைய 30-களில் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்து சாதித்த மைக் ஹஸ்ஸி உள்ளிட்ட நிறைய ஜாம்பவான்கள் மலானுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். சிறுவயதில் தந்தை சொன்ன ஒரு அறிவுரையை மலான் இன்றைக்கும் நினைவில் வைத்திருக்கிறார். “தகுதி குறைவு காரணமாக நீ கிரிக்கெட்டில் தோற்றுப் போனால் எனக்குப் பிரச்னையில்லை. ஆனால் போதிய முயற்சி எடுக்காமல் தோற்றுப் போனாய் என்று இருக்கவே கூடாது.”THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: