டெஸ்ட் கிரிக்கெட்டில் எதுவுமே ஈஸி இல்லை: பும்ரா உற்சாகம் | Eng vs Ind: In Test cricket nothing is easy, says Jasprit Bumrah

Spread the love

டெஸ்ட் கிரிக்கெட்டில் எதுவுமே ஈஸி இல்லை. பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளமாக இருந்தால்கூட சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்து, எதிரணி வீரர்களுக்கு உங்கள் செய்தியைத் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்தார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது. கடந்த 1971-ம் ஆண்டுக்குப் பின் ஓவல் மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியின் வெற்றியைக் கட்டமைத்த பொறியாளர்களில் தலைமைப் பொறியாளர் பும்ரா என்றால் அதை மறுக்கமுடியாது. பும்ராவின் ரிவர்ஸ் ஸ்விங்கில் வீழ்ந்த இரு விக்கெட்டுகள்தான் வெற்றிக்கான திருப்புமுனையாக அமைந்தது.

இந்த வெற்றி குறித்து பும்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது:

”நாங்கள் நல்ல விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். எங்களால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறோம். அணி என்பது மகிழ்ச்சியை, விளையாட்டை விரும்பும் தனிநபர்கள் சேர்ந்த கூட்டு. எப்போதும் தேவையில்லாத விஷயங்களை ஆராய முயலமாட்டோம்.

ஆடுகளம் முதல் நாளில் நன்றாக இருந்ததால்தான் முதல் இன்னிங்ஸில் அதிகமாக ஸ்கோர் செய்ய முடியவில்லை. ஆனால், நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை, அதிகமான விஷயங்களைப் பற்றி சிந்திக்கவும் இல்லை. கடைசிவரை போராட வேண்டும் என்று மட்டும் விரும்பினோம். அந்தப் போாராடும் குணத்தை மட்டுமே வெளிப்படுத்த விரும்பினோம்.

டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எதுவுமே சுலபமானது அல்ல. பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளமாக இருந்தாலும்கூட, சரியான லென்த்தில் பந்துவீசி சரியான தகவலை எதிரணிக்குத் தெரிவிக்க முடியும். ஆடுகளம் தட்டையாக இருந்தாலும்கூட, நாம் எதிரணிக்கு அழுத்தத்தையும், நெருக்கடியையும் அளிக்க வேண்டும் எனத் தீர்மானித்துதான் களமிறங்கினோம்.

கடைசி நாள் முதல் ஒரு மணி நேரம் அதிகமான நெருக்கடியை இங்கிலாந்து அணிக்கு அளித்தோம். எங்கள் பணி என்பது வெற்றி கையைவிட்டு நழுவவிடாமல் பார்த்துக் கொள்வதுமட்டும்தான். அதைச் சிறப்பாகச் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது.

டெஸ்ட் போட்டி விளையாடும்போது, எத்தனை ஓவர்கள் பந்துவீச முடியும், இதற்கு முன் என்ன செய்தோம் என்பது பற்றி சிந்திக்கக் கூடாது. தற்போதுள்ள பணி அணிக்காகப் பந்துவீசுவது மட்டும்தான். நீண்ட காலம் எனது அணிக்காக ஆட விரும்புகிறேன். அதற்காகக் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறேன். கட்டுக்கோப்பாக உடலை வைத்திருக்கிறேன். கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன். உலகக் கோப்பை, ஐபிஎல் பற்றி நான் பெரிதாகச் சிந்திக்கவில்லை. அவ்வாறு சிந்தித்தால் மனரீதியாகச் சோர்ந்துவிடுவீர்கள். தற்போதுள்ள சூழல் மீது கவனம் செலுத்தி ஒவ்வொரு பந்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்”.

இவ்வாறு பும்ரா தெரிவித்தார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: